மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 27 மே 2020

தேர்வில் முதலிடம்: மூதாட்டிக்குப் பரிசு!

தேர்வில் முதலிடம்: மூதாட்டிக்குப் பரிசு!

கேரளாவில் எழுத்தறிவு இயக்கத் தேர்வில் 98 மதிப்பெண் பெற்று சாதனை படைத்த 96 வயது மூதாட்டிக்கு, அம்மாநிலக் கல்வி அமைச்சர் மடிக்கணினியைப் பரிசாக அளித்துள்ளார்.

கேரள மாநிலத்தில், இளம்வயதில் கல்வி கற்கும் வாய்ப்பை இழந்தவர்களுக்காக அக்‌ஷ்ர லக்‌ஷம் என்னும் பெயரில் எழுத்தறிவு இயக்கத்தை நடத்தி வருகிறது அம்மாநிலக் கல்வித் துறை. இங்கு பயிற்சி பெறுபவர்களுக்கு வாசித்தல், எழுதுதல், கணிதம் ஆகியவற்றின் அடிப்படையில் திறனறிவுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

இந்த ஆண்டு நடைபெற்ற இறுதித் தேர்வில் ஆலப்புழா மாவட்டத்தைச் சேர்ந்த 96 வயது மூதாட்டி கார்த்தியாயினி, நூற்றுக்கு 98 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்தார். இத்தேர்வில், இந்தாண்டு 43,933 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கார்த்தியாயினியின் தன்னம்பிக்கை மற்றும் விடா முயற்சியை கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்படப் பலரும் பாராட்டினர். செய்தியாளர்களிடம் பேசிய மூதாட்டி கார்த்தியாயினி, தான் கம்ப்யூட்டர் கற்றுக்கொள்ள ஆர்வமாக இருப்பதாகத் தெரிவித்தார்.

தேர்வில் முதலிடம் பிடித்த கார்த்தியாயினியின் கற்றல் ஆர்வத்தை ஊக்கப்படுத்தும் வகையில், அம்மாநிலக் கல்வித் துறை சார்பில் மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது. மடிக்கணினியை மூதாட்டியிடம் வழங்கிய கேரளக் கல்வித் துறை அமைச்சர் சி.ரவீந்திரநாத், அதனை ஆன் செய்து பயன்படுத்துவது எப்படி என்பதைக் கற்றுக் கொடுத்தார். இதையடுத்து, அந்த மடிக்கணினியில் தனது பெயரை ஆங்கிலத்தில் டைப் செய்தார் கார்த்தியாயினி.

வியாழன், 8 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon