மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 26 மே 2020

மீச்சிறு காட்சி 15: ஸ்டீவ் ஜாப்ஸும் ஜென் மினிமலிசமும்

மீச்சிறு காட்சி 15: ஸ்டீவ் ஜாப்ஸும் ஜென் மினிமலிசமும்

சந்தோஷ் நாராயணன்

கலையோடு வாழ்வை இணைத்துப் பேசும் சிறப்புத் தொடர்

ஒரு மினிமலிஸ்ட் தொழிநுட்பவாதியைப் பற்றி அடுத்த அத்தியாயத்தில் சொல்கிறேன் என்றேன் அல்லவா. அவர் ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் தான். ஹிப்பி பண்பாடு ஓங்கியிருந்த காலத்தில் அதனால் கொஞ்சம் கவரப்பட்டவர் ஸ்டீவ். அதன் தொடர்ச்சியாக இந்தியாவுக்கு வந்து இமாலயத்தில் எல்லாம் ஊர் சுற்றி திரும்பியவர் அவர். ஜென் துறவிக்குரிய எளிமையைத் தன் படைப்புகளிலும் வாழ்க்கையிலும் பின்பற்றியவர்.

பிற்காலத்தில் அவருடைய உடை உடுத்தும் பழக்கம்கூட அவருடைய எளிமைக்கு ஓர் உதாரணம். நீல டெனிம் ஜீன்ஸும் கறுப்பு வண்ண டீ-ஷர்டும்தான் அவருடைய விஷுவல் அடையாளம். Decision Minimalism என்று ஆங்கிலத்தில் சொல்கிறார்கள். முடிவெடுப்பதில் மினிமலிசத்தைப் பின்பற்றுவது. இன்றைய வணிக நுகர்வு உலகில் எல்லாமே நம் மீது திணிக்கப்படுகின்றன. ஒரே போன்ற பொருளின் பல்வேறு மாதிரிகளைப் பல்வேறு நிறுவனங்கள் விளம்பரங்கள் வழியாகவும் சந்தைப்படுத்தல் வழியாகவும் நம் மூளைக்குள் நுழைக்கின்றன. எதை எடுப்பது, எதை விடுப்பது என்பது இன்றைய நுகர்வோரின் குழப்பம். இந்த இடத்தில்தான் ஸ்டீவ் ஜாப்ஸ் ஒரே வண்ணத்தில் உடை உடுத்தும் பழக்கத்தை ஏன் பின்பற்றினார் என்பதை இணைத்துப் பார்க்க முடிகிறது. அவருடைய உடை விஷயத்தை ஒரு வகையில் branding என்று புரிந்துகொண்டாலும் அதற்குப் பின்னால் இருக்கும் உண்மை இந்த Decision Minimalismதான் என்று தோன்றுகிறது.

Facebook நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் “நீங்கள் ஏன் எப்போதும் ஒரே மாதிரியாக கிரே வண்ணத்தில் டி-ஷர்ட் அணிகிறீர்கள்?” என்கிற கேள்விக்கு “தினமும் என்ன வண்ணத்தில் உடை உடுத்துவது என்கிற குழப்பம் எனக்கு வராமலிருக்க. நான் எடுத்த முடிவு கிரே டிஷர்ட்” என்று சிரித்துக்கொண்டே சொன்னார். இந்தப் பதிலை ஸ்டீவ் ஜாப்ஸும் சொல்லி இருப்பார். யாரும் கேள்வி கேட்கவில்லை போலும்.

ஸ்டீவ் தன் இளம் பிராயத்திலேயே Joseph Eichler போன்ற வீடு வடிவமைப்பாளர்களின் எளிமையினால் கவரப்பட்டவர். அமெரிக்காவின் எல்லோருக்குமான வீடு என்கிற கனவை நிறைவேற்ற எளிய வீடுகளை வடிவமைத்தவர் ஜோசப். அவருடைய “எளிமையான வடிவமைப்புகள் அபாரம்” என்று சொன்னவர் ஸ்டீவ். இந்த எளிய மினிமலிசத் தன்மை கொண்ட வடிவமைப்புகளையே தனது ஆப்பிள் நிறுவனத்தின் கம்ப்யூட்டர் வடிவமைப்புகளுக்கும் தாரக மந்திரமாகக் கண்டார் அவர்.

ஸ்டீவின் எளிய மினிமலிச அழகியல் தன்மை கொண்ட கம்ப்யூட்டர் கனவுகளுக்கு வடிவம் கொடுத்தவர்கள் Hartmut Esslinger, Jony Ive போன்ற டிசைனர்கள். தொழில்நுட்பப் பொருட்களில் மினிமலிசத் தன்மை உள்ள எளிய வடிவமைப்புகளைக் கொண்டுவருவது கடினமானதாக அக்காலத்தில் இருந்தது. “எளிமையை உருவாக்கக் கடுமையாக வேலை செய்ய வேண்டி இருந்தது” என்றார். ஆப்பிள் நிறுவனத்தின் முதல் விளம்பர துண்டறிக்கையில் அவர் கொடுத்திருந்த வாசகம் “Simplicity is the ultimate sophistication.”

Bauhaus கலை இயக்கம் பற்றி ஏற்கனவே ஓர் அத்தியாயத்தில் பேசி இருந்தேன். கலைப் படைப்புகளில் மினிமலிசத்துக்கு முன்னோடி என்று. அடிப்படையான வண்ணங்கள், எளிமையான ஜியோமிதி வடிவங்களைக் கொண்டு கலைப் படைப்புகளை உருவாக்குதல்தான் அந்த இயக்கத்தின் நோக்கம். அதன் பாதிப்பு வீட்டு உபயோகப் பொருட்களின் வடிவமைப்புகள் முதல் வாகனங்கள், தொழில்நுட்பப் பொருட்களின் வடிவமைப்புகள் வரை இருந்தது. இந்த வடிவமைப்பு சிக்கலற்றது. மக்களுக்கு எளிமையாகத் தோன்றும் வண்ணம் இருப்பது. அதன் காட்சி அழகியலும் மினிமலிச எளிமையுடன் இருக்கும்.

இந்த Bauhaus பாணி எளிமையான மினிமல் டிசைன்கள் மீதான தன் காதலைப் பற்றி எண்பதுகளில் நடந்த ஒரு டிசைன் திருவிழாவில் ஸ்டீவ் சொன்னதாகப் படித்தேன். அந்தக் காலத்தில் டேப் ரிக்கார்டர் முதல் கம்ப்யூட்டர்கள் வரை எலெக்ட்ரானிக் பயன்படு பொருட்களின் டிசைன் கொஞ்சம் கரடுமுரடாகத்தான் இருந்திருக்கிறது. எண்ணற்ற ஸ்விட்சுகள், இண்டிகேட்டர்கள், கட்டம் கட்டமாக இருக்கும் வெளிப்புறத் தோற்றங்கள்...

ஆனால் ஸ்டீவ், ஆப்பிள் கணினிகளை விரைவிலேயே அது போன்ற கரடுமுரடான வடிவங்களிலிருந்து வெளியேற்றி, பார்ப்பதற்கு வழவழப்பான curved design தன்மைகள் கொண்ட எளிய வடிவைக் கொண்டு வந்தார். ஒரு வகையில் ஜென் கூழாங்கற்களைப் போன்ற மினிமலிச வடிவமாக இருந்தன அந்தக் கணினிகள்.

2001இல் அவர் iPod என்கிற இசை கேட்பதற்கான கருவியை அறிமுகப்படுத்தியபோதும் இதே ஆச்சரியம் காத்திருந்தது. அதுவரை walk man போன்ற இசைக் கருவிகளின் வடிவமைப்புகளிலிருந்து முற்றிலும் விலகி கையடக்கமான எளிய வடிவத்தில் அது இருந்தது. ஒரு குழந்தைகூட அதை எளிதாகப் பயன்படுத்தும் விதத்தில் அதன் செயல் பொத்தான்கள் வடிவமைக்கப்பட்டிருந்தன. அதைக் கையாள்வது ஒரு மெல்லிய இறகை வருடுவது போன்ற அனுபவமாக இருந்தது. தொழில்நுட்பத்திற்கு ஒரு மினிமலிசக் கொடை அது. அதன் மினிமலிச வடிவ பாதிப்பு பிற்காலத்தில் வந்த தொழில்நுட்பங்களில் எல்லாம் பிரதிபலித்தது. அது ஆப்பிளின் பொருட்களானாலும் சரி, அல்லது அதை காப்பி அடித்துச் சந்தையில் உருவான வேறு பொருட்களாக இருந்தாலும் சரி.

ஸ்டீவ் ஜாப்ஸ் தொழில்நுட்பத்தில் ஒரு ஜென் மினிமலிஸ்ட் துறவி. அவருடைய ஆப்பிள் நிறுவனப் பொருட்களைப் பயன்படுத்துபவர்கள் அதன் மினிமலிச அழகியலை எப்போதும் கொண்டாடுவார்கள், ஒரு தியானம் போல.

(காண்போம்)

*

(கட்டுரையாளர் சந்தோஷ் நாராயணன், ஓவியர், அட்டைப்பட வடிவமைப்பாளர், விளம்பர வடிவமைப்பாளர், எழுத்தாளர். இவரைத் தொடர்புகொள்ள: [email protected])

முந்தைய அத்தியாயங்கள்:

அத்தியாயம் 1

அத்தியாயம் 2

அத்தியாயம் 3

அத்தியாயம் 4

அத்தியாயம் 5

அத்தியாயம் 6

அத்தியாயம் 7

அத்தியாயம் 8

அத்தியாயம் 9

அத்தியாயம் 10

அத்தியாயம் 11

அத்தியாயம் 12

அத்தியாயம் 13

அத்தியாயம் 14

அத்தியாயம் 15

வியாழன், 8 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon