மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 16 ஜன 2021

கூட்டணி: தேவகௌடாவை சந்திக்கும் சந்திரபாபு நாயுடு!

கூட்டணி: தேவகௌடாவை சந்திக்கும் சந்திரபாபு நாயுடு!

பாஜகவுக்கு எதிராக இந்திய அளவில் மாபெரும் கூட்டணியை அமைக்கும் முயற்சியில் சந்திரபாபு நாயுடு இறங்கியுள்ளார். அதன் ஒருபகுதியாக தேவகௌடாவை இன்று சந்தித்து அவர் பேசவுள்ளார்.

2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக மிகப்பெரிய கூட்டணியை அமைக்கும் முயற்சியை ஆந்திர முதல்வர் சந்திரபாபு முன்னெடுத்துள்ளார். இதன் ஒரு பகுதியாக கடந்த வாரம் டெல்லி சென்றிருந்த அவர், காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்து பேசினார்.

ராகுல் மற்றும் சந்திரபாபு நாயுடு ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த போது, மற்ற எதிர்க்கட்சிகளும் எங்களோடு சேர்வதற்கு அழைப்பு விடுக்க இங்கு வந்துள்ளோம். இந்த அரசாங்கத்திற்கு எதிராக நாம் ஒற்றுமையாக நிற்போம்” என்று தெரிவித்தனர். பாஜகவுக்கு எதிராக அணி திரள்வது குறித்து பல்வேறு தலைவர்களை சந்தித்து பேசவுள்ளதாக சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். திமுக தலைவர் ஸ்டாலினை அவர் நாளை சந்தித்து பேசவுள்ளார். இந்நிலையில், இன்று (நவம்பர் 8) கர்நாடக செல்லும் சந்திரபாபு நாயுடு மதசர்பற்ற ஜனதா தளம் தலைவர் தேவகௌடாவை பெங்களூருவில் சந்தித்துப் பேசவுள்ளார்.

கர்நாடக இடைத்தேர்தல் முடிவு வெளியானதுமே தெலுங்கு தேசம் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான நாரா லோகேஷ்,”ஃபாசிச பாஜகவுக்கு கர்நாடகம் மறக்கமுடியாத பாடத்தை கற்றுக்கொடுத்துள்ளது. மஜத- காங்கிரஸ் கூட்டணிக்கு வாழ்த்துக்கள். இந்த முடிவு 2019ஆம் ஆண்டு தேர்தலில் எதிரொலிக்கும்” என்று ட்விட்டரில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 8 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon