மின்னம்பலம்
ஏர் இந்தியா விமான ஒப்பந்த ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக, மும்பை விமான நிலையத்தில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தின் ஏர் இந்தியா ஒப்பந்த ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்படவில்லை. இதனைக் கண்டித்து, நேற்றிரவு (நவம்பர் 7) முதல் ஒப்பந்த ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் 400 ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர்.
இதனால், மும்பையிலிருந்து புறப்பட வேண்டிய பல்வேறு விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பாங்காக் செல்லும் விமானம் கிட்டத்தட்ட 7 மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றது. நள்ளிரவு 1.30 மணிக்குப் புறப்பட வேண்டிய மும்பை-மேவார்க் விமானம், இன்று அதிகாலை 4.08க்கு புறப்பட்டது.
இதனால், விமானப் பயணிகள் பரிசோதனை, சரக்குகளை ஏற்றி இறக்கும் பணி மற்றும் விமானத்தைச் சுத்தம் செய்யும் பணி உள்ளிட்ட முக்கியப் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இதைச் சரி செய்வதற்காக ஏர் இந்தியா அதிகாரிகள் ஒப்பந்த ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர் கூறுகையில், நிலைமையை மதிப்பிட்டு வருவதாகவும், விமானப் போக்குவரத்தில் ஏற்பட்ட இடையூறுகளைச் சரி செய்யும் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.