மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 24 ஜன 2021

சர்கார்: சென்சார் போர்டை சுற்றும் சந்தேகம்!

சர்கார்: சென்சார் போர்டை சுற்றும் சந்தேகம்!வெற்றிநடை போடும் தமிழகம்

சர்கார் படத்தின் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் அறிவித்ததில் இருந்து படக் குழு பதற்றத்தில் இருப்பதாகவே தகவல்கள் வருகின்றன.

சர்கார் படத்தில் அதிமுகவை முற்று முழுதாகத் தாக்கும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக ஜெயலலிதாவின் இயற்பெயரான கோமளவல்லி, ஜெயலலிதா ஆட்சியில் வழங்கிய இலவச பொருட்களை கொளுத்துதல் போன்றவை அதிமுகவினரை சூடேற்றியுள்ளன. இலவசப் பொருட்களை எரிக்கும் காட்சியில் தானே நடிப்பதாக சொல்லி இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸே அக்காட்சியில் நடித்துள்ளார்.

இந்நிலையில் சென்சார் போர்டு அதிகாரிகளைத் தாண்டி வந்திருக்கும் இப்படத்தின் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க முடியுமா என்று சென்சார் போர்டு வட்டாரத்தில் பேசினோம். சில முன்னாள் சென்சார் போர்டு உறுப்பினர்கள் நம்மிடம் பேசினார்கள்.

”சென்சார் போர்டு இப்போது முழுக்க முழுக்க அரசியல் மயமாகிவிட்டது. அதிலும் பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் என்றால் சென்சார் போர்டு உறுப்பினர்களை விலை கொடுத்து வாங்குவதும் நடக்கிறது. எனவே சென்சார் போர்டு சான்றிதழ் இறுதியானது அல்ல.

படத்தில் இருக்கும் தங்களுக்கு ஆட்சேபகரமான காட்சிகளை நீக்கச் சொல்லி அரசுத் தரப்பு படத் தயாரிப்பு நிறுவனத்தைக் கேட்கும். அந்த வகையில் சன் தரப்பை அரசு கேட்க வேண்டும். அது நடக்குமானால் படம் தொடர்ந்து ஓடும். இல்லையென்றால் வழக்கு, தடை என்ற நிலையும் ஏற்படும்” என்று கூறினார்கள்.

இதற்கிடையில் சர்கார் படத்தில் நடித்திருக்கும் பழ. கருப்பையா, ’‘ நான் 15 வயசுல டவுசர் போட்ட காலத்துலயே இந்திய எதிர்த்து போராடினவன்’என்றொரு வசனம் படத்தில் வரும். நானே பேசியிருக்கிறேன். இது கலைஞரைத் தாக்கி எழுதப்பட்டது. இதை சென்சார் போர்டு ம்யூட் பண்ணிவிட்டது. இதுபோன்று பல இடங்களில் கட் செய்யப்பட்டது’’ என்று சொல்லியிருக்கிறார்.

ஆக கலைஞருக்கு கட் கொடுத்த சென்சார் போர்டு, ஜெயலலிதாவுக்கு ஏன் பாரபட்சம் காட்டியது என்ற கேள்வி இப்போது முளைத்திருக்கிறது. எனவே சர்க்கார் சர்ச்சை தொடர்ந்துகொண்டே இருக்கிறது.

வியாழன், 8 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon