மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 7 ஜூலை 2020

பணமதிப்பழிப்பு தினம்: காங்கிரஸ் நாளை ஆர்ப்பாட்டம்!

பணமதிப்பழிப்பு தினம்: காங்கிரஸ் நாளை ஆர்ப்பாட்டம்!

பணமதிப்பழிப்பின் மூன்றாம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு, பிரதமர் மோடி மன்னிப்புக் கேட்க வலியுறுத்தி நாடு முழுவதும் நாளை காங்கிரஸின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் புழக்கத்தில் உள்ள 500, 1000 ரூபாய் தாள்களை எவ்வித முன்னறிவிப்பும் இன்றி பணமதிப்பழிப்பு செய்து பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். கறுப்புப் பண ஒழிப்பு, கள்ள நோட்டு தடுப்பு என்று காரணம் கூறப்பட்ட இந்த நடவடிக்கையால், பலதரப்பட்ட மக்களும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகினர். பணமதிப்பழிப்பு முதலாவது ஆண்டு தினம் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் கடந்த ஆண்டு கறுப்பு தினமாக அனுசரிக்கப்பட்டது. தமிழகத்தில் அன்றைய தினத்தில் எதிர்க்கட்சிகள் சார்பில் மாவட்ட தலைநகரங்களில் கறுப்புச் சட்டையுடன் ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.

பணமதிப்பழிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு இன்றுடன் (நவம்பர் 8) இரண்டாண்டுகள் நிறைவடையவுள்ளது. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. டெல்லியில் நடைபெறும் கண்டனப் பேரணியில் ராகுல் கலந்துகொள்கிறார். இதுதொடர்பாக அனைத்து மாநில காங்கிரஸ் கமிட்டிக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆர்ப்பாட்டம்

இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பணமதிப்பழிப்பின் காரணமாக கடந்த இரண்டாண்டு காலமாக மிகப்பெரிய பொருளாதார பேரழிவை நாடு சந்தித்து வருகிறது. விவசாயிகள், தொழிலாளர்கள், நெசவாளர்கள், சிறு வணிகர்கள், சிறு, குறு தொழில் முனைவோர்கள் என அனைத்துத் தரப்பினரும் மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்டனர். பணமதிப்பு நீக்கத்தினால் கறுப்புப் பணமும் ஒழியவில்லை, மாறாக அரசுக்குப் பெரும் இழப்பு ஏற்பட்டிருக்கிறது” என்று விமர்சித்துள்ளார்.

“நாட்டு மக்கள் நரேந்திர மோடியைப் பார்த்து, கறுப்புப் பணத்தை ஒழிப்பேன் என்றுச் சொன்னீர்களே? கறுப்புப் பணம் ஒழிந்ததா? கள்ளப் பணம் ஒழிந்ததா? தீவிரவாதம் ஒழிந்ததா? என இரண்டாண்டுகள் கழித்தும் நாட்டு மக்கள் வெகுண்டெழுந்து குரல் எழுப்புகின்ற நிலை இன்றைக்கு ஏற்பட்டுள்ளது” என்று சுட்டிக்காட்டியுள்ள திருநாவுக்கரசர், நரேந்திர மோடிக்கு எதிராக மக்கள் வெளிப்படையாகப் பேச ஆரம்பித்து விட்டார்கள். பாஜகவுக்கு எதிரான காற்று பலமாக வீச ஆரம்பித்துவிட்டது. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வர முடியாது என்று சொல்லி வைத்ததைப் போல நாட்டு மக்கள் ஒருசேர பேச ஆரம்பித்து விட்டார்கள். இந்தக் கோபம்தான் பாஜகவின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவரப் போகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், “பணமதிப்பழிப்பின் மூன்றாம் ஆண்டு தினத்தை முன்னிட்டு மாவட்டத் தலைவர்கள் 9.11.2018 வெள்ளிக்கிழமை அன்று காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை தங்கள் கட்சி அமைப்பு மாவட்டங்களில் அமைந்துள்ள மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்த வேண்டும்” என்று கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்தில் திருநாவுக்கரசர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றவுள்ளார்.

புதன், 7 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon