மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 21 நவ 2019

ரஃபேல்: ஹெச்ஏஎல் இயக்குநர் விளக்கம்!

ரஃபேல்: ஹெச்ஏஎல் இயக்குநர் விளக்கம்!

தொழில்நுட்பப் பகிர்வு அளிக்காமல் தானே உற்பத்தி செய்யும் நிறுவனங்களோடு எந்த ஒப்பந்தமும் வைத்துக்கொள்வதில்லை என ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மாதவன் விளக்கமளித்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டிடமிருந்து ரூ.58 ஆயிரம் கோடி மதிப்பில் 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவது தொடர்பாக 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியா - டசால்ட் நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்து கொண்டது. காங்கிரஸ் ஆட்சியில் ஒப்பந்தம் செய்யும்போது ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனம் கூட்டு நிறுவனமாகச் சேர்க்கப்பட்டது. ஆனால், பாஜக ஆட்சியில் ஹிந்துஸ்தான் நிறுவனம் ஒப்பந்தத்திலிருந்து நீக்கப்பட்டு அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் இணைக்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டது முதல், விமானத்தின் விலை, பாதுகாப்பு உட்படப் பல அம்சங்கள், கூட்டு நிறுவனம் ஆகியவை குறித்து, தொடர்ச்சியாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி வருகிறது.

ரஃபேல் போர் விமான விவகாரம் பற்றி ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மாதவன் நேற்று (நவம்பர் 7) விளக்கம் அளித்துள்ளார். "விமானம் தொழில்நுட்பத்தை பகிர்ந்துகொள்ளாமல் தாங்களே அவற்றை உற்பத்தி செய்யும் நிறுவனங்களோடு கூட்டு நிறுவனமாக ஹெச்ஏஎல் ஒருபோதும் ஒப்பந்தம் செய்துகொள்ளாது" என்று தெரிவித்தார்.

மேலும், "பொதுவாக ஹெச்ஏஎல் நிறுவனமானது விமானம், ஹெலிகாப்டர்கள், அதனை தொடர்புடைய பாகங்கள் மற்றும் அவற்றைப் பழுது பார்க்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறது. எந்த ஒரு விமான தயாரிப்பு நிறுவனத்தோடும் உதிரிப் பாக தயாரிப்பாளராக இருக்கப் போட்டியிடுவதில்லை. முழுமையான விமான தயாரிப்பு தொழில்நுட்பத்தைப் பகிர்ந்துகொண்டால் மட்டுமே அதுகுறித்து பரிசீலனை செய்யப்படும். அதன் அடிப்படையில் மட்டுமே விமானங்களைத் தயாரித்து அளிக்கிறோம்" என விளக்கமளித்துள்ளார்.

வியாழன், 8 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon