மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 7 ஜூலை 2020

தீபாவளி: வாகனக் கடன் சரிவு!

தீபாவளி: வாகனக் கடன் சரிவு!

தீபாவளி, நவராத்திரி பண்டிகைகளையொட்டிய வாகன விற்பனை மந்தநிலையால் வாகனக் கடன் சந்தை சரிவு கண்டுள்ளது.

ஒவ்வொரு வருடமும் தீபாவளி பண்டிகைக் காலத்தில் புதிய வாகனங்களை வாங்குவதை மக்கள் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். வடஇந்தியாவில் தீபாவளிப் பண்டிகையையொட்டிய காலத்தில் நவராத்திரியும் மிக சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. எனவே, வழக்கமாக அக்டோபர், நவம்பர் மாதங்களில் வாகன விற்பனை அதிகரித்துக் காணப்படும். ஆனால், இந்த ஆண்டு கடந்த ஆண்டு விற்பனையைக் காட்டிலும் மந்தமான நிலையில்தான் வாகன விற்பனை நடந்துள்ளது. இதனால் இந்த ஆண்டு பண்டிகைக் காலத்தில் வங்கிகளில் வாகனக் கடன் வாங்குவோர்களின் எண்ணிக்கையும் சரிந்துள்ளது.

இதுகுறித்து ஸ்டேட் பேங்க் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் பி.கே.குப்தா பினான்சியல் எக்ஸ்பிரஸ் ஊடகத்திடம் பேசுகையில், “இந்த ஆண்டு பண்டிகை காலத்தில் வாகனக் கடனுக்கு தேவை மிகக் குறைவாகவே இருந்தது. அதற்கு மாறாக தனிநபர் கடன் சந்தைக்கு வலுவான தேவை காணப்பட்டது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறைவான எண்ணிக்கையில்தான் வாகனக் கடன் பெற்றனர். யோனோ செயலி மூலமாக தனிநபர் கடன்களுக்கான முன் ஒப்புதல் வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளோம். இதற்குச் சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது” என்றார்.

ஐசிஐசிஐ வங்கியின் வீட்டுக்கடன் மற்றும் வாகனக் கடன் பிரிவுக்கான மூத்த நிர்வாக இயக்குநர் ரவி நாராயணன் கூறுகையில், “உண்மையில் கடந்த ஆண்டு பண்டிகைக் காலத்தைப் போல இந்த ஆண்டு இல்லை. எரிபொருள் விலை நிலவரங்கள் காரணமாக வாகனக் கடன்களுக்குத் தேவை பெரிதாக ஏற்படவில்லை. ஆனால், கடந்த வாரத்தில் கார்களுக்கான கடன் தேவை மெல்ல அதிகரித்தது. செப்டம்பர் மாதத்தில் வாகனக் கடன் சந்தை 7 முதல் 8 விழுக்காடு வளர்ச்சி கண்டிருந்தது. மெட்ரோ நகரங்களைக் காட்டிலும் மற்ற பகுதிகளில்தான் தேவை அதிகம் காணப்பட்டது. அதேபோல வீட்டுக் கடன்களுக்கான தேவையும் இரண்டாம் அடுக்கு நகரங்களில்தான் அதிகம் இருந்தது” என்றார்.

கார்கள் மற்றும் இருசக்கர வாகன விற்பனையாளர்கள் கூறுகையில், கடந்த ஆண்டைக் காட்டிலும் 10 முதல் 20 விழுக்காடு குறைவாகத்தான் வாகனக் கடன்களுக்கு தேவை இருந்தது என்கின்றனர். மத்திய அரசின் காப்பீட்டு விதிகளில் திருத்தம், எரிபொருள் விலை, மிக உயர்வான கடன் விகிதங்கள் போன்றவையே இதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

புதன், 7 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon