மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 4 ஜூலை 2020

சிறப்புக் கட்டுரை: எதிர்க்கட்சிகளுக்கான வியூகம் எது?

சிறப்புக் கட்டுரை: எதிர்க்கட்சிகளுக்கான வியூகம் எது?

ராமன் சுவாமி

நரேந்திர மோடி இரண்டாம் முறை பிரதமராக ஆட்சிக்கு வராமல் தடுப்பதற்கான சிறந்த உத்தி அவரது அந்தரங்கத்திலிருக்கும் சில வண்டவாளங்களை வெளிக்கொண்டு வருவதுதான் என்ற உணர்தல் எதிர்க்கட்சியினரிடையே ஒருவழியாக உதிக்கத் தொடங்கியுள்ளது.

மகா கூட்டணி என்ற கைகூடாத கானல் நீரைத் துரத்துவதற்குப் பதிலாக, மோடி எதிர்ப்புக் கட்சிகள் கடந்த நான்காண்டுகளில் நடைபெற்றுள்ள முக்கிய முறைகேடுகள் குறித்த நம்பத்தகுந்த ஆதாரங்களைக் கண்டறிந்து வெளிக்கொண்டு வருவதிலேயே தங்களுடைய நேரத்தையும் சக்தியையும் செலவிட வேண்டும்.

எதிர்க்கட்சிகளின் கூட்டான போர்த் தந்திரம் மக்களவைத் தேர்தலுக்குக் கணிசமான காலத்திற்கு முன்பாகவே திருவாளர் பரிசுத்தம் என்று மக்கள் மனங்களில் உள்ள மோடியின் இமேஜைப் போதிய அளவு களங்கப்படுத்தி அவரது நேர்மையைப் பற்றியும் நோக்கங்களைப் பற்றியும் ஆழ்ந்த சந்தேகங்களுக்கான விதைகளை விதைப்பதாக இருக்க வேண்டும்.

ஏன் மோடியைக் குறிவைக்க வேண்டும்?

இந்த வழியில் சிந்திப்பதற்கான தர்க்கம் பல கள யதார்த்தங்களை ஆதாரமாகக் கொண்டது

1. தேர்தலுக்கு முன்பே மகா கூட்டணியொன்றை அமைப்பது என்பது ஒரு மாயையாகவும் தோல்வியையே பலனாகத் தருவதாகவும் அமைந்துள்ளது.

2. ரொக்க மதிப்பழிப்புக்குப் பிறகு கிட்டத்தட்ட ஒவ்வொரு எதிர்க்கட்சியுமே கடுமையான பணப்புழக்க நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன.

3. இதற்கு நேர்மாறாக, நடுவணரசிலும் 20க்கு மேற்பட்ட மாநிலங்களிலும் ஆட்சியிலிருப்பதால் பிஜேபியின் கஜானா பொங்கிவழிகிறது.

4. ஆர்எஸ்எஸ் ஊழியர்கள் மற்றும் அடிமட்டத் தொண்டர்கள் ஆகியோர் கொண்ட ஒரு பெரும் படையே இருப்பதால் ஆள்பலத்திலும் பிஜேபி கணிசமாக முன்னணியில் உள்ளது.

5. ஊடகங்கள், அவை தொலைக்காட்சி சேனல்களாக இருந்தாலும் சரி பத்திரிகைகளாக இருந்தாலும் சரி, பெரும்பாலும் அமைப்புக்குச் சார்பானவையாகவே உள்ளன. செய்திகளையும் கருத்துகளையும் சுதந்திரமாகப் பரிமாறிக்கொள்வதில் அனைத்துத் தரப்பினருக்கும் சரிசமமான வாய்ப்புகளை அளிப்பதில்லை.

6. சிபிஐ போன்ற பல முக்கிய நிறுவனங்களின் நம்பகத்தன்மை சுக்குநூறாக நொறுங்கிப்போயிருப்பதால் தேர்தல் கமிஷன் போன்ற தேர்தல் நிர்வாகம் மற்றும் மேற்பார்வை அமைப்புகள் மற்றும் சட்ட ஒழுங்கு பராமரிப்பு இயந்திரம் ஆகியவற்றின் பாரபட்சமற்றதன்மை குறித்து மொத்தத்தில் தீவிர ஐயப்பாடுகள் நிலவுகின்றன.

மகா கூட்டணி நடைமுறை சாத்தியமா?

இப்படிப்பட்ட நிலைமையில் வேறுபட்ட இயல்புகளைக் கொண்ட எதிர்க்கட்சிகள் அரைமனதுடன் ஐக்கியப்பட முயற்சி செய்வது அனைவருக்கும் வெட்டவெளிச்சமாகத் தெரிகிறது. அனைத்து வகையிலும் பார்ப்போமேயானால் மகா கூட்டணி எடுபடாதது மட்டுமின்றி உண்மையில் தோல்வி முயற்சியாக ஆகியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம் ஒரு நல்ல எடுத்துக்காட்டு. வரவிருக்கும் சட்டசபைத் தேர்தல்களில் காங்கிரஸ் கலகத் தலைவர் அஜித் ஜோகியும் பிஎஸ்பியும் கூட்டு சேர்ந்திருப்பதால் உள்ளூர் காங்கிரஸ் கட்சி அம்போவென விடப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தல்களுக்கு முன்புள்ள இந்த ஆறு மாதங்களில் நாட்டின் இதர பகுதிகளிலும்கூட இன்னும் பல ஜோகிகளும் மாயாவதிகளும் முளைப்பார்கள் என்பதிலும் அவர்களுடைய அரசியல் நிர்பந்தங்களும் சாதிக் கணக்குகளும் பிஜேபி எதிர்ப்பு NDA எதிர்ப்பு வாக்குகள் சிதறாமல் அவற்றை ஒன்றுசேர்ப்பதற்கான வாய்ப்புகளுக்கு முட்டுக்கட்டை போட அனைத்து வாய்ப்புகளும் உள்ளன என்பதிலும் ஐயமெதுவும் இல்லை.

வரவிருக்கும் மத்திய இந்தியாவின் மூன்று மாநில சட்டசபைத் தேர்தல்களுக்குப் பிறகு மோடியின் பிஜேபியை மின்னணு வாக்கு இயந்திரங்களின் அடிப்படையிலான தேர்தல் முறைகளால் தோற்கடிக்க முடியாது என்ற யதார்த்தத்தை எதிர்க்கட்சிகளும் அவற்றின் தலைவர்களும் ஷாக் அடித்தது போல உணருவார்கள் என வெளிப்படையாகப் பேசும் அரசியல் பண்டிதர்கள் சிலர் ஏற்கனவே கூறத் தொடங்கியுள்ளனர்.

தேர்தல் முன்கணிப்புகள்படி இறுதியாக உருவாகப் போகிற எதிர்க்கட்சி கூட்டணி 'மகா கூட்டணியா' அல்லது தளர்ந்ததோர் தொகுதிப் பங்கீட்டு உடன்பாடா என்பது முடிவுகளில் பெரியதோர் மாற்றத்தைக் கொண்டுவரப் போவதில்லை. தேர்தல் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடைபெறாவிட்டால், அதுவும் நீதிமன்ற மேற்பார்வையில் நடைபெறாவிட்டால், அதிலும் சில முக்கிய மாநிலங்களிலும் தொகுதிகளிலும் பழைய வாக்குச்சீட்டு முறையில் நடைபெறாவிட்டால் முடிவு எப்படியிருக்கும் என்பதும் இப்போது அதிகாரத்திலுள்ளவர்களே மீண்டும் ஆட்சிக்கு வருவார்கள் என்பதும் முன்கூட்டியே நன்கு தெரிந்ததே.

அத்தகைய கணிப்புகளைப் பீதியின் அடிப்படையிலானவை என்றும் வலுவான ஆதாரங்களற்றவை என்றும் ஒருவர் நிராகரித்தாலும் நாட்டின் முதன்மையான புலனாய்வு நிறுவனமான சிபிஐ உள் மோதல்களாலும் ஜோடிப்பு வழக்குகளாலும் அரசியல் அயோக்கியத்தனங்களாலும் நிறைந்திருப்பது என்பது நிலவும் அமைப்பு முறை மிகவும் சீர்கெட்டுப் புரையோடிப்போயுள்ளது என்பதற்கான நல்ல எடுத்துக்காட்டு.

அதாவது, ஆட்சி மற்றும் நிர்வாகத்தின் மிக உயர்ந்த மட்டத்தில் ஊழல் மலிந்துள்ளது எனக் குற்றம்சாட்டுவோர் எவருமே சதி நடைபெறுகிறது என்று கிலிபிடித்து அலறுபவரும் அல்ல. அவர்கள் ஒருவேளை அரசியல் தலைவர்களாக இருந்தால் அவர்கள் அடையப்போகும் தோல்விக்கு முன்கூட்டியே சப்பைக்கட்டு கட்டுபவர்களும் அல்ல.

சிபிஐ நெருக்கடியை இரு பிரமுகர்களுக்கிடையிலான அதிகாரவர்க்க மோதல் என்று மட்டுமே பார்ப்பது பெருந்தவறாகப் போய் முடியும். அது அலோக் வர்மாவுக்கும் ராகேஷ் அஸ்தானாவுக்குமிடையிலான மோதல் கதை மட்டுமல்ல. இறைச்சி ஏற்றுமதியாளர் சம்பந்தப்பட்ட தனியொரு வழக்கை மூடி மறைப்பதற்குக் கையூட்டுகள் வழங்கப்பட்டனவா என்பதோடு நின்றுவிடக்கூடிய விஷயமும் அல்ல. அப்படியென்றால் குற்றவாளிகள் யார், அவர்கள் உள்நோக்கம் என்ன?

ஊழலின் பரிமாணங்கள்

தற்போது கட்டவிழும் ஊழலின் பரிமாணங்கள் சிபிஐக்கு அப்பாலும் பரவியுள்ளன. தீவிர மற்றும் ஆழ்ந்த அகழ்வாராய்ச்சி புலனாய்வும் அந்த நள்ளிரவு அதிரடிப் புரட்சி நடைபெற்றபோது சிபிஐ இயக்குநரின் நேரடிக் கண்காணிப்பில் இருந்த வழக்குகள் பற்றிய விவரங்களும் மட்டுமே இந்த மோசடிக் காவியத்தின் கதாபாத்திரங்கள் அனைவரின் பெயர்களையும் வெளிக்கொண்டுவரும்.

ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவரின் மேற்பார்வையில் தற்போது நடைபெறும் பூர்வாங்கப் புலனாய்வில் நம்மை உறைய வைக்கும் இந்த சில ஊகங்களுக்கு விடைகாணப்படும் என நம்புவோம்.

அதுவரை பற்றியெரியும் கேள்வியொன்று நீடிக்கும் - ரஃபேல் விமான பேரம் சிபிஐ இயக்குநரின் புலனாய்வின் கீழ் இருந்ததா, பின்னால் நிகழ்ந்த நிகழ்வுகளின் தொடருக்கு அதுவே எந்த வகையிலும் காரணமாக இருந்ததா என்ற கேள்வியே அது.

அரசியல் கட்சிகள் மற்றும் பொதுத் தேர்தல் பற்றிய பரந்த விவாதத்துக்கும் இதற்கும் உள்ள சம்பந்தம் என்ன? காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்வேகத்துடனும் விடாப்பிடியாகவும் ரஃபேல் சர்ச்சை குறித்து குரலெழுப்பி வருகிறார். ஒன்று அவர் வெற்றுக் கானல் காட்சியை விரட்டிக்கொண்டிருப்பவராக இருக்க வேண்டும் அல்லது இதுவரை வெளிவந்ததைவிட இன்னும் அதிக விவரங்கள் அவரிடம் இருக்க வேண்டும்.

அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் தேர்தலுக்கு முன்பு பிஜேபி எதிர்ப்புக் கட்சிகளின் கூட்டணி ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் தோல்வியைச் சந்தித்திருப்பது குறித்து காங்கிரஸ் தலைவர் அளவுக்கு மீறிக் கவலைப்படுவதாகத் தெரியவில்லை என்ற உணர்வு அரசியல் வட்டாரங்களில் பெருகிவருகிறது. மாறாக "ஒட்டுண்ணி முதலாளித்துவம்" (crony capitalism) மற்றும் "காவலாளியே களவாணி" போன்ற நேரடி குற்றச்சாட்டுகளுடன், குறிப்பாக ரஃபேல் பேரப் பின்னணியில் இத்தகைய குற்றச்சாட்டுகளுடன், பிரதமர் மீதே தனது பிரச்சார பீரங்கிகளைக் குறிவைத்து வருகிறார்.

இதற்கிடையே அரசியல்ரீதியான மற்றும் சட்டரீதியான செயற்பாட்டாளர்கள் மத்தியிலேயே மும்மூர்த்திகளான விளங்கும் பிரசாந்த் பூஷண், அருண் ஷோரி, யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் ரஃபேல் தொடர்பான குற்றச்சாட்டுகள் நிறைந்த கோப்பு ஒன்றைத் தயார் செய்து சிபிஐ இயக்குநரிடம் அளித்தது மட்டுமல்ல இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்கும்படி உச்ச நீதிமன்றத்தையும் அணுகியுள்ளனர். அதில் ஓரளவுக்கு ஆரம்ப வெற்றியையும் பெற்றுள்ளனர்.

மாநிலக் கட்சிகளில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள் இந்த நிகழ்வுப் போக்குகளை உன்னிப்பாகக் கவனித்துவருகின்றனர் என்பதற்கு அண்மையில் தெளிவான அறிகுறிகள் தென்பட்டன. சரத் பவார், ஃபரூக் அப்துல்லா, சந்திரபாபு நாயுடு ஆகியோர் கூட்டாகப் பத்திரிகையாளர் கூட்டம் ஒன்றை நடத்தினர். புதிதான ஒன்றின் தொடக்கமாக இது அமைவதற்கான ஆற்றல் இதற்கு உள்ளது. மகா கூட்டணியை அமைப்பதற்கான முயற்சிகளைப் புதுப்பிப்பதே இதன் நோக்கமா, இல்லையா என்பது ஒரு பொருட்டல்ல. பிரதமருக்கு எதிரான ரஃபேல் இயக்கத்தில் இணைவதே இவர்களது உடனடி விருப்பம் என்பது அதைவிட அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. நாயுடு பின்னர் ராகுல் காந்தியைச் சந்தித்தபோது "இணைந்து பணிபுரிய" தாம் தயாராக இருப்பது குறித்து காங்கிரஸ் தலைவர் பேசியதும் ஆனால் தேர்தல் உடன்பாடு குறித்தோ அல்லது மகா கூட்டணி பற்றியோ எதுவும் பேசாததும்கூட முக்கியமானதொன்றே.

சுருங்கக் கூறுவதானால், எதிர்க்கட்சியினரின் புதிய போர்த்தந்திரம் ஊழல் குற்றச்சாட்டுகளுடன் நரேந்திர மோடியின் குரல்வளைக்குக் குறிவைப்பதாகும். பொதுமக்கள் மத்தியில் நிலவும் பிரதமரின் இமேஜைக் குலைக்க முடிந்தால் மார்ச் 2019இல் மகா கூட்டணி ஒன்றுக்கு அவசியமில்லாமல் போகலாம். மோடி நீங்கலான பிஜேபி தோல்வியைத் தழுவது திண்ணம்.

தமிழில்: பா. சிவராமன்

புதன், 7 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon