மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 25 அக் 2020

சாய் பல்லவியின் ‘அராத்து’ லுக்!

சாய் பல்லவியின் ‘அராத்து’ லுக்!

மாரி 2 படத்தில் சாய் பல்லவியின் கதாபாத்திரத்தின் தோற்றத்தைக் காட்டும் போஸ்டரைப் படக்குழு வெளியிட்டுள்ளது.

சாய் பல்லவி மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் பரவலான கவனம் பெற்றவர். தமிழகத்தைச் சேர்ந்த சாய் பல்லவி மலையாளம், தெலுங்கு திரையுலகில் வலம்வந்த பின்னரே தமிழில் அறிமுகமானார். ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவான தியா திரைப்படம் பரவலான கவனம் பெறாமல் போனது. தற்போது செல்வராகவன் இயக்கத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக என்ஜிகே திரைப்படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு விரைவில் நடைபெறவுள்ளது.

தனுஷுக்கு ஜோடியாக அவர் நடித்துள்ள மாரி 2 படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. தற்போது அதன் இயக்குநர் பாலாஜி மோகன் படத்தின் முதல் கேரக்டர் போஸ்டரை வெளியிட்டுள்ளார். அதன்படி சாய் பல்லவியின் தோற்றம் மற்றும் அவரது கதாபாத்திரத்தின் பெயர் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட்டோ ஓட்டுநர் போல காக்கிச் சட்டையுடன் மூக்குத்தி அணிந்து தோன்றியுள்ளார் சாய் பல்லவி. அவரது கதாபாத்திரம் அராத்து ஆனந்தி என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் கிருஷ்ணா, வரலட்சுமி முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மலையாள நடிகர் டோவினோ தாமஸ் வில்லன் வேடத்தில் நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார். பிரசன்னா படத்தொகுப்பாளராகப் பணியாற்றவுள்ளார். தனுஷ் தனது ‘வுண்டர்பார் ஃபிலிம்ஸ்’ மூலம் தயாரிக்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் டிசம்பர் மாத இறுதியில் இப்படம் வெளியாக உள்ளது. விரைவில் அடுத்தடுத்த கதாபாத்திரங்கள் போஸ்டர்கள் மூலம் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

வியாழன், 8 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon