மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 21 செப் 2020

சென்னை: காற்று மாசு குறைந்தது!

சென்னை: காற்று மாசு குறைந்தது!

தீபாவளி நேரத்தில், இந்த ஆண்டு சென்னையில் காற்று மாசு அளவு குறைந்ததாகத் தெரிவித்துள்ளது மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்.

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியமானது, நாட்டின் முக்கிய நகரங்களில் காற்று மாசு அளவைக் கணக்கெடுத்து வருகிறது. தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசுகள் அதிகளவில் வெடிப்பதால் காற்று மாசு அளவு அதிகரிப்பது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு தீபாவளியன்று நாள் முழுவதும் பட்டாசு வெடிப்பதற்குத் தடை விதித்தது உச்ச நீதிமன்றம். இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க அனுமதி வழங்கியது. இதையடுத்து, காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் தீபாவளியன்று பட்டாசு வெடிக்கலாம் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.

தீபாவளியன்று சென்னையில் காற்று மாசு அளவு எவ்வாறு இருந்தது என்ற தகவலை, நேற்று (நவம்பர் 7) வெளியிட்டது மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம். இதன்படி, சென்னை ஆலந்தூர் பகுதியில் 2.5 மைக்ரோமீட்டர் விட்டத்துக்கும் குறைவான அளவு கொண்ட மாசுகள் அதிகபட்சம் 129 என்ற அளவிலும், குறைந்தபட்சம் 20 என்ற அளவிலும் பதிவானது. இங்கு சராசரி மாசு அளவானது 54 என்று கணக்கிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தீபாவளியின்போது, இங்கு சராசரி மாசு அளவானது 251ஆக இருந்தது.

வேளச்சேரி பகுதியில் குறைந்தபட்சம் 12 என்றும், அதிகபட்சம் 68 என்றும், சராசரி 34 என்றும், 2.5 பிஎம் அளவிலான காற்று மாசு இருந்தது. கடந்த ஆண்டு, இங்கு காற்று மாசு அளவானது 262ஆக இருந்தது.

மணலி பகுதியில் 2.5 பிஎம் அளவிலான காற்று மாசு அதிகபட்சம் 401 அளவில் பதிவாகியுள்ளது என்றும், குறைந்தபட்சம் 20ஆகப் பதிவாகியுள்ளது என்றும், சராசரி அளவானது 101 என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, இதே தீபாவளி நாளில் இங்கு சராசரி மாசு அளவானது 301ஆகப் பதிவானது. இந்தப் புள்ளிவிவரங்களில் இருந்து, இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது காற்றில் மாசு அளவு குறைந்தது தெளிவாகத் தெரியவந்துள்ளது.

நவம்பர் 7ஆம் தேதியான நேற்று, நாடு முழுவதும் வடமாநிலத்தவர் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடினர். இந்த நிலையில், நேற்று சென்னை வேளச்சேரியில் காற்று மாசு சராசரி அளவானது 102ஆகவும், மணலி பகுதியில் 144 என்றும், ஆலந்தூர் பகுதியில் 124 என்றும் பதிவாகியுள்ளது.

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட தகவலின்படி, தீபாவளிக்கு முன்னும் பின்னும் மாசு அளவு அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

புதன், 7 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon