மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 28 அக் 2020

பாஜகவின் ஊதுகுழலா: கமல்

பாஜகவின் ஊதுகுழலா: கமல்

பாஜக உட்பட எந்த கட்சியின் ஊதுகுழலாகவும் தான் செயல்படவில்லை என்று தெரிவித்த கமல்ஹாசன், மக்களின் கருவியாகத் தான் உள்ளதாகக் குறிப்பிட்டார்.

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனின் 64ஆவது பிறந்தநாள் அவரது ரசிகர்கள் மற்றும் கட்சித் தொண்டர்களால் நேற்று (நவம்பர் 7) கொண்டாடப்பட்டது. சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் வைத்து ரசிகர்களை அவர் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன், “தேர்தல் பணியாற்ற களப் பணியாளர்கள் தயாராக உள்ளனர். இடைத்தேர்தலுக்கு மக்கள் நீதி மய்யம் தயாராகவே உள்ளது. மக்களிடம் நாங்கள் வாக்குறுதியை அளிப்பதில்லை. தேர்தலில் ஓட்டுக்குப் பணம் வாங்க மாட்டோம் என்று அவர்கள் எங்களுக்கு வாக்கு அளிக்கிறார்கள். தேர்தலில் மக்கள் நல்ல பதிலை வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கலாம்” என்று தெரிவித்தார்.

இலங்கை அரசியலில் ஏற்பட்டுவரும் திருப்பங்கள் குறித்த கேள்விக்கு, “நம் நாட்டு அரசியலையே சரியாகச் செய்யவில்லை என்னும்போது மற்றொரு நாட்டு அரசியலை நாம் குற்றம்சாட்டக் கூடாது. மக்கள் ஏமாளிகள் அல்ல. அவர்கள் சரியான முடிவெடுப்பார்கள். முறைகேடு இல்லாத வகையில் தேர்தலைச் சந்திப்போம். அரசியலில் சுகாதாரம் இருக்க வேண்டும் என்பதே எங்களது லட்சியம். ஜனநாயகம் ஜெயிக்கும்” என்று பதிலளித்தார்.

ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக கமல் பேசுவதில்லை, அவர் பாஜகவின் ஊதுகுழலாக உள்ளார் என்று காங்கிரஸ் குற்றம்சாட்டிவருவது தொடர்பான கேள்விக்கு, ரஃபேல் ஒப்பந்தம் குறித்து ஆராய வேண்டும் என்றும் நான் கூறியுள்ளேன். நான் சிபிஐயாக இருந்தால் ஆராய்வேன். கடுமையாக எதிர்க்கும் அரசியலைக்கூட மரியாதையாகத்தான் நாங்கள் செய்துவருகிறோம். நான் ஊதுகுழல் அல்ல, மக்களின் கருவி” எனத் தெரிவித்தார்.

ஸ்டாலின் வாழ்த்து

பிறந்தநாளையொட்டி தொலைபேசி மூலமாக கமல்ஹாசனுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். தனது ட்விட்டர் பக்கத்திலும், “அன்பு நண்பர் ‘கலை ஞானி’ @ikamalhaasan அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். வாழ்க வளமுடன்! நலமுடன்!” என ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் தனது ட்விட்டர் பக்கத்தில் கமலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

வியாழன், 8 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon