மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 12 ஜூலை 2020

சென்னைக்குச் சின்னக் கிணறுகள் வேண்டும்!

சென்னைக்குச் சின்னக் கிணறுகள் வேண்டும்!

நரேஷ்

சென்னைக்குச் செய்ய வேண்டியவை - 16

“தண்ணீர்ப் பிரச்சினை என்று சொல்வது அறியாமை. இயற்கை நமக்கு அளவில்லாத் தண்ணீரைக் கொடுத்திருக்கிறது; கொடுத்துக்கொண்டும் இருக்கிறது. அதைப் பயன்படுத்தும் அளவுக்கு மனிதனின் அறிவும் அறிவியலும் பிரமாண்டமாக வளர்ச்சியடைந்திருக்கிறது. ஆனால், அதைச் செயல்படுத்தும் அளவுக்கு நம்மிடம் பொறுமை இல்லை. இது மட்டும்தான் இப்போதைய பிரச்சினை.”

- மழை நீர் வரதராஜன்.

Directorate of town and country Planning (DTCP) - அனுமதி வேண்டுமென்றால் கட்டுமானங்களில் மழைநீர் சேமிப்பு அமைப்பு இருக்க வேண்டும். அனைத்துக் கட்டுமானங்களிலும் மழை நீர் சேமிப்பு வசதி இருக்க வேண்டும் என்பது கட்டாய சட்டம். அதனால் பெயரளவுக்காவது போடப்பட்ட மழை நீர் சேமிப்பு வசதிகள் உங்கள் இல்லங்களில் இருக்கும். அவற்றுடன் ஒரு சம்ப் போன்ற அமைப்பையோ அல்லது ஒரு நீர் சேகரிப்புத் தொட்டியையோ அமைத்துவிட்டால், அவை எக்காலத்திற்குமான செல்வமாக இருக்கும். அதுவும் முடியவில்லை என்றால், மொட்டை மாடியில் விழும் மழை நீரை நிலத்துக்கு வழியனுப்பும் குழாய்களைச் சாக்கடைகளிலும், வீதிகளிலும் விடாமல் இருங்கள். சிறிய அளவிலான குழி தோண்டி, ஜல்லிக் கற்களை போட்டு அவற்றை நிலத்தினுள் அனுப்புங்கள்.

பெய்யும் மழை நீரை முழுமையாகத் தேக்குங்கள் முடிந்தளவு சேமியுங்கள்.

இவை தனிப்பட்ட குடியிருப்புகள் செய்ய வேண்டிய செயல்கள். இவற்றை நம் இல்லங்களின் கட்டுமானங்களோடு கட்டாயம் பராமரிக்க வேண்டியது நம் கடமை.

அடுத்ததாக, பொதுச் சமூகம் பொது இடங்களில் மழைநீர் சேமிப்புக்காக செய்ய வேண்டிய எளிமையானதொரு கட்டுமானத் தொழில்நுட்பத்தைக் கொடையளித்திருக்கிறார்கள் கோயமுத்தூர்காரர்கள்.

மிகப்பெரிய பிரச்சினைக்குத் தீர்வாக இருக்கும் அந்தத் தொழில்நுட்பம், மிகவும் எளிமையாக இருந்தது ஆச்சரியமளித்தது. “தீர்வுகள் எப்போதுமே எளிமையானதுதான். அவை எளிமையாக இருப்பதாலேயே நாம் அவற்றைப் புறக்கணிக்கிறோம். செய்வதற்கு கடினமானத் தீர்வுகளைத் தூக்கி வைத்துக்கொண்டு சிரமப்படுகிறோம்” என்று சிம்பிளாக விளக்குகிறார் மழை நீர் மனிதர் சேகர் ராகவன். அவர் வழிகாட்டுதலின்படி கோவையில் நடைமுறைப்படுத்திய ஒரு சின்னத் தொழில்நுட்பம், இன்று சென்னையின் மிகப்பெரிய பிரச்சினையைச் சீர்செய்யும் கொடை!

சின்னக் கிணறுகள் அமைப்பதுதான் அந்தச் சிக்கனமான தீர்வு. வீதி தோறும் அமைக்கப்பட வேண்டிய இந்த சின்னக் கிணறுகள் சென்னையின் விதியை மாற்றும் வல்லமை பெற்றவை. இந்த ஒரு சின்னக் கிணற்றில் 3000 லிட்டர் நீரைச் சேமிக்கலாம். படத்தில் காட்டப்பட்டுள்ளது போன்று, 8 அடி முதல் 12 அடி ஆழத்துக்குக் குழி தோண்ட வேண்டும். அதை 3 அடி விட்டமுள்ள சிமென்ட் ரிங்களால் அலங்கரித்து மூடிவிட்டால், உங்கள் வாழ்நாள் முழுவதும் அதன் சேவை உங்களுக்குக் கிடைக்கும்.

இதன் சிறப்பென்னவென்றால், இதுபோன்ற சின்னக் கிணறுகளை வீட்டிலும் அமைத்து சுய பயன்பாடு செய்துகொள்ளலாம். எல்லாப் பொது இடங்களிலும் அமைத்து வெள்ள நீர் தேங்குவதையும் சாக்கடைகளில் கலப்பதையும் தவிர்த்துவிடலாம். இன்று சென்னைக்கு மிகப் பெரிய சவாலாக இருப்பது மழை பெய்தால், தெருக்களில் தேங்கும் நீர். ஏனென்றால், சென்னையில் நிலம் மொத்தமும் மூடப்பட்டிருக்கிறது. அடுக்குமாடிக் குடியிருப்புகளிலும், பிற கட்டுமானங்களிலும் நிலத்தை சிமென்ட் தரைகள் மூடிவிடுகின்றன. வீதிகளை தார் சாலைகள் மூடிவிடுகின்றன. எந்த இடத்திலும் மழை நீர் நிலத்தினுள் செல்லக் கூடாது என்பதற்காகவே அமைக்கப்பட்டதுபோல இருக்கின்றன இக்கட்டமைப்புகள். இவற்றையும் ஒழுங்காகச் செய்யாமல் இருப்பதுதான் நம் சிறப்பு. அதனால் பெய்யும் மழை நீர் ஆங்காங்கே தேங்கி நிற்கும். நிலத்தினுள்ளும் செல்ல முடியாமல், வழிந்தோடவும் முடியாமல் கண்டுகொள்ளப்படாத நீராக, ஆவியாகும்வரை காத்திருக்கும்.

வடிகால்களைச் சுத்தம் செய்வதற்குப் பல கோடிகளை ஒதுக்கும் திட்டத்தை ஒதுக்கிவைத்துவிட்டு, தெருவுக்கு மூன்று கிணறுகள் அமைத்தால் சென்னை முழுவதும் மீண்டெழும். சாதாரணமாக 8 அடி கிணறு ஒன்றில் தெருவுக்கு 9,000 லிட்டர் நீரைச் சேமிக்க முடியும். குடியிருப்புப் பகுதிக்குள் 90,000 லிட்டர் நீர் சேமிக்கப்படும். சென்னையில் இருக்கும் 200 வார்டுகளை எடுத்துக்கொண்டால் குறைந்தபட்சமாக 2 கோடி லிட்டர் மழை நீரைச் சேமிக்க முடியும்.

ஆச்சரியம் என்னவென்றால், சென்னையில் பெய்யும் மழை நீர் இதைவிட 200 மடங்கு அதிகம். சென்னைக்கு ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலும் பெய்யும் தென்மேற்குப் பருவமழையும், அக்டோபரில் ஆரம்பித்து டிசம்பர் வரை பெய்யும் வடகிழக்குப் பருவமழையும் வழங்கும் நீரைக் கொண்டு வடதமிழகத்தின் முழுத் தேவையையும் பூர்த்தி செய்யலாம். அதிலும் தென்மேற்குப் பருவ மழையில் 25 சதவிகிதம்தான் சென்னைக்குச் சாத்தியப்படுகிறது. இப்போது பெய்துவரும் வடகிழக்குப் பருவமழைதான் 70 சதவிகித நீரை வழங்குகிறது. அதனால், இப்போதே செயல்பட வேண்டிய தேவை நமக்கிருக்கிறது.

சின்னக் கிணறு ஒன்றை அமைக்க 8 ஆயிரம் முதல் 12 ஆயிரம் ரூபாய் செலவாகிறது. ஒரு தெருவுக்கு மூன்று கிணறுகள் என்றால் சராசரியாக ஒரு தெருவுக்கு 30 ஆயிரம் ரூபாய். எனவே அதிகபட்சமாக 40 கோடி ரூபாயில் ஒட்டுமொத்த சென்னை நிலத்திலும் நீர் நிறைத்துவிடலாம்.

வீட்டுக்கு 250 ரூபாய் வசூலித்து, தெருவுக்கு ஒருவர் பொறுப்பேற்றுக்கொண்டால் சென்னையையும் நம் எதிர்காலத்தையும் நிச்சயமாக மீட்டெடுத்துவிடலாம். இது அரசாங்கத்தின் வேலை என்று ஒதுங்கிவிட்டால், நமக்கு விடிவு காலம் என்று எதுவும் இருக்காது. நம் எதிர்காலத்துக்காக நாம்தான் வேலை செய்ய வேண்டும்.

“இதனால் நிலத்தடி நீர் மட்டம் உயரும் என்று ஒற்றை வரியில் முடித்துவிட முடியாது. நிலத்தடி நீர் மட்டம் உயர்வதைத் தாண்டிய பயன்கள் இதில் இருக்கின்றன. நாம் தண்ணீருக்காக அரசாங்கத்தை நம்பி இருக்க வேண்டிய தேவை இல்லை. என் வீட்டுக் கிணறே எனக்கு நன்றாகத் தண்ணீர் கொடுக்கிறது. எனக்கும் என் குடும்பத்திற்கும் அது போதும். நாமாக இவற்றை அமைக்கும்போது, அவற்றின் தரமும் தன்மையும் மேம்படும். நிறைய இடங்களில் அரசாங்கத்தின் மெட்ரோ வாட்டர் வருவதில்லை. அங்கெல்லாம் உங்களுடைய கிணற்றில் தண்ணீர் இருந்தால், நீங்கள் தாராளமாக அதைப் பயன்படுத்திப் பயனடையலாமல்லவா? இது சாத்தியமாகாது என்று நினைக்க வேண்டாம். நான் பெசன்ட் நகரில்தான் இருக்கிறேன். என் வீட்டுக் கிணற்றின் நீரைச் சுவைத்துப்பார்க்க வாருங்கள்!” என்கிறார் மழை மனிதன் சேகர் ராகவன்.

இங்கே இருவரை அறிமுகப்படுத்த விழைகிறேன். இக்கட்டுரையின் தொடக்கத்தில் இருக்கும் வாசகங்களை வழங்கிய மழை நீர் வரதராஜனும், இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டிருக்கும் தொழில்நுட்பத்தைத் தொகுத்தளித்த மழை மனிதன் சேகர் ராகவனும்தான் சென்னையின் மீட்பர்கள்!

(தீர்வுக்கான தேடல் தொடரும்..!)

முந்தைய கட்டுரை: சென்னையின் நீர்த் தேவைக்கு எளிமையான தீர்வு!

வெள்ளி, 16 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon