மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 10 ஆக 2020

ஆணவக் கொலை: 6 மாதம் கெடு!

ஆணவக் கொலை: 6 மாதம் கெடு!

கேரளாவைச் சேர்ந்த கெவின் ஆணவக் கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கை ஆறு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த கெவின் பி.ஜோசப் என்பவரும், கொல்லம் பகுதியைச் சேர்ந்த நீனு என்பவரும் காதலித்து வந்தனர். படிப்பை முடித்த கெவின் வேலை காரணமாக துபாய் சென்றுவிட்டார். கடந்த ஜனவரி மாதம், அவர் கேரளா திரும்பினார். அப்போது, நீனு தென்மலையில் உள்ள தனியார் பள்ளியொன்றில் ஆசிரியையாகப் பணியாற்றிவந்தார்.

இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்ததையடுத்து, நீனு இது குறித்து தன்னுடைய பெற்றோரிடம் தெரிவித்தார். இருவரும் வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதைக் காரணம் காட்டி, நீனுவின் பெற்றோர் இத்திருமணத்துக்குச் சம்மதிக்கவில்லை. ஆனாலும், கெவினும் நீனுவும் கடந்த மே 25ஆம் தேதியன்று கோட்டயத்தில் பதிவு திருமணம் செய்துகொண்டனர். திருமணம் நடந்த மறுநாளே கெவின் கடத்தப்பட்டார். அதற்கடுத்த நாள், சாலியக்கரா பகுதியில் உள்ள ஒரு குட்டையில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

இதையடுத்து, காவல் நிலையத்தில் தனது பெற்றோர்களுக்கு எதிராகப் புகாரளித்தார் நீனு. “கெவின் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். எனது அப்பா கிறிஸ்தவர்; அம்மா முஸ்லிம். சாதியைத் தாண்டி இதில் எதிர்ப்பு உள்ளது. கெவின், எங்களுடைய அந்தஸ்துக்கு ஒத்துவராத நபர் என்று எனது பெற்றோர் கருதினர்” எனத் தெரிவித்தார்.

கெவினின் நண்பர் அனீஷ் இதுகுறித்துக் கூறுகையில், தானும் கடத்திச் செல்லப்பட்டதாகத் தெரிவித்தார். நீனுவைத் திரும்ப அழைத்துவருவதாக ஒப்புக்கொண்ட பின்னரே தன்னை விடுவித்ததாகக் கூறினார். “இரண்டு கார்களில் வந்தவர்கள் கெவினை ஒரு காரிலும், என்னை மற்றொரு காரிலும் கடத்திச் சென்றனர். எனக்கு வாந்தி வருவதாகக் கூறியதால், என்னை காரை விட்டு வெளியே இறக்கினர். நீனுவைத் திரும்ப அழைத்துவந்தால், என்னை விட்டுவிடுவதாகக் கூறினர். கெவின் எங்கே என்று நான் கேட்டபோது, அவன் தப்பிச் சென்றுவிட்டதாகக் கூறினர்” என்றார்.

இந்த வழக்கில், நீனுவின் சகோதரர் ஷானு சாக்கோதான் முதல் குற்றவாளியாகக் குறிப்பிடப்பட்டுள்ளார். நீனுவின் தந்தை ஐந்தாவது குற்றவாளி ஆவார். இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது கொலை மற்றும் சதித் திட்டம் தீட்டுதல் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில், 12 பேர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், நேற்று (நவம்பர் 7) இந்தக் கொலையை ஆணவக் கொலையாகக் கருதிய கோட்டயம் கூடுதல் மாவட்ட நீதிபதி அமர்வு, இந்த வழக்கை ஆறு மாதங்களுக்குள் முடிக்க வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளது.

வியாழன், 8 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon