மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 4 ஜூலை 2020

உதவியாளர் மறைவு: அமைச்சர் அஞ்சலி!

உதவியாளர் மறைவு: அமைச்சர் அஞ்சலி!

அமைச்சர் ஜெயக்குமாரின் உதவியாளராக இருந்த லோகநாதன் நேற்று அதிகாலை சாலை விபத்தில் உயிரிழந்தார். அவருடைய உடலுக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமாரின் கூடுதல் சிறப்பு நேர்முக உதவியாளராக இருந்துவந்தவர் லோகநாதன். தீபாவளி பண்டிகையைக் கொண்டாடுவதற்காக லோகநாதன் தனது குடும்பத்தினருடன் சொந்த ஊரான கரூர் மாவட்டம் தான்தோன்றிமலைக்குச் சென்றிருந்தார். பண்டிகையைக் கொண்டாடி முடித்த பிறகு அவர்கள் நேற்று அதிகாலை திருச்சியிலிருந்து காரில் சென்னை திரும்பிக் கொண்டிருந்தனர்.

கார் கடலூர் மாவட்டம், வேப்பூர், ஐவதகுடி கிராமம் அருகே கள்ளக்குறிச்சி நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து மீது மோதியதில், காரில் பயணம் செய்த லோகநாதன் அவரது மகன்கள் நிர்மல்குமார், சிவராமன் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் பெண் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில், மூன்று வயது சிறுவன் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான்.

லோகநாதன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “விபத்தில் உயிரிழந்த லோகநாதன் உள்ளிட்ட மூவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தச் செய்தி குறித்து அறிந்தவுடன் அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் உடனடியாக செய்து கொடுக்கவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறவும், காயமடைந்தவருக்கு உயரிய சிகிச்சை அளிக்கவும் மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளேன். விபத்தில் காயமடைந்தவர் விரைவில் பூரண குணமடைய வேண்டும் என்ற எனது விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரேத பரிசோதனை முடிந்த நிலையில் லோகநாதன் மற்றும் அவரது மகன்களின் உடல் அஞ்சலிக்காகச் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மூவரின் உடலுக்கும் அஞ்சலி செலுத்தினர்.

புதன், 7 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon