மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 26 மே 2020

கிட்ஸ் கார்னர்!

கிட்ஸ் கார்னர்!

வரலாற்று அத்தியாயம் ஆரம்பம்

“இந்தக் குரல் உன்னுடையது மாதிரி இல்லையேடா நீலா..? உனக்கு என்னடா ஆச்சு..? நீ செத்துட்டேன்னு சொன்னாங்க. அப்போ நீ பேயா..?”னு தொடர்ந்து பதற்றமா கேள்வி கேட்டுட்டே இருந்தான் பரி.

அவனைச் சமாதானப்படுத்தி நீலன் பேச ஆரம்பிச்சான். “பரி இப்போ நீ கேக்குற எல்லா கேள்விக்கும் போகப் போக உனக்குப் பதில் கிடைச்சிடும். இப்போ நாம தெரிஞ்சுக்க வேண்டியது, பதில் கிடைக்காத பல கேள்விகளுக்கான விளக்கங்களை...”

நீலன் என்ன பேசுறான்னே பரிக்கு புரியல. ஏன்னா நீலன் இதுக்கு முன்னாடி இவ்ளோ தெளிவா பேசினது கிடையாது. நீலன் படிப்புலையும் சுமார்தான். அவனுக்கு எப்படி இவ்ளோ விஷயங்கள் தெரிஞ்சதுனு பரிக்கு ஆச்சரியம்.

பரியைப் பொறுத்தவரைக்கும், இப்போதைய விடை தெரியாத கேள்விகள்னா,

1) நீலன் எப்படி இங்க வந்தான்?

2) இந்த ‘பெரியவுக’ கூட்டத்துல இருக்குறவர் ஏன் தன்னை கொல்லப் பார்த்தார்?

3) நீலன், பரி, பெரியவர், குளம், விண்வெளி, இதுவரை கேட்ட கதைகள் - இதுக்கெல்லாம் என்ன சம்மந்தம்?

இதுக்குதான் நீலன் விளக்கம் கொடுக்கப் போறான்னு பரி நினைச்சான். அப்போதான் முன்பு எப்போதும் இல்லாததைவிட தீர்க்கமான குரல்ல நீலன் பேச ஆரம்பிச்சான்.

”உணவுக்காகவும் உறைவிடத்துக்காகவும் உயிருக்காகவும் மட்டுமே சண்டை போட்டுட்டு இருந்த கூட்டம், தேவைகளைத் தாண்டிய அதிகாரத்துக்காகச் சண்டை போட ஆரம்பிச்சது. அந்த இடத்துல இருந்துதான் எல்லாத்தையும் மாத்தணும் பரி. அதை மாத்தணும்னா, முதல்ல அதை புரிஞ்சுக்கணும்”னு சொல்லிட்டே பரியை இழுத்துட்டு பூமியை நோக்கி வேகமா பறந்தான் நீலன்.

கிட்ட நெருங்க நெருங்க பூமி சூரியனைவிட பெரியதா மாறிச்சு. பூமி இவங்களை பார்த்து சிரிச்சு வரவேற்று,

“பூமியோட வரலாற்று அத்தியாயம் ஆரம்பம்” என்றது.!

- நரேஷ்

புதன், 7 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon