மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 26 மே 2020

‘நாயகன்’ இயக்குநர் படத்தில் ‘தனிப்பெரும்’ நாயகன்!

‘நாயகன்’ இயக்குநர் படத்தில் ‘தனிப்பெரும்’ நாயகன்!

தமிழ்த் திரையிசைப் பாடல்கள் சமீப காலங்களில் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுவதாய் இல்லை என்ற ஒரு குற்றச்சாட்டு பரவலாக உள்ளது. அதே நேரத்தில் புதிய இசையமைப்பாளர்களின் சில பாடல்கள் ரசிகர்களிடம் வரவேற்பு பெறுகின்றன. 96 திரைப்படத்தின் பாடல்கள் இசை ரசிகர்களால் கொண்டாடப்பட்டது; குறிப்பாக அதில் இடம்பெற்ற 'காதலே காதலே தனிப்பெரும் துணையே' எனும் பாடல். அந்தப் படத்தின் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இயக்குநர் மணிரத்னம் பணியாற்றும் படத்தில் இணைந்துள்ளார்.

பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஒரு பக்க கதை மூலம் தமிழ்த் திரையுலகில் நுழைந்தார் கோவிந்த் வசந்தா. அந்தப் படம் இன்னும் வெளியாகாத நிலையில் அசுரவதம் படத்தின் மூலம் முதலில் களமிறங்கினார். அதைத் தொடர்ந்து 96 திரைப்படமும் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்ற நிலையில் அவருக்குத் திரை வாய்ப்புகள் அடுத்தடுத்து வரத் தொடங்கியுள்ளன. பாலாஜி தரணிதரனின் சீதக்காதி படத்திற்கு இசையமைத்துள்ள அவர் அமிர்தராஜ் இயக்கத்தில் சித்தார்த் நடிக்கும் புதிய படத்திலும் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார்.

மணிரத்னம் தான் இயக்கும் படங்களில் எப்போதும் ஏ.ஆர்.ரஹ்மானையே ஒப்பந்தம் செய்வார். ஆனால், அவரது தயாரிப்பில் உருவாகும் படங்களுக்கு ரஹ்மான் தவிர மற்ற இசையமைப்பாளர்களையும் பயன்படுத்துவார். தனசேகரன் இயக்கும் புதிய படத்தை மணிரத்னம் தனது மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். இந்தப் படத்துக்கு இயக்குநருடன் இணைந்து திரைக்கதையையும் எழுதுகிறார். இந்தப் படத்தில்தான் கோவிந்த் வசந்தா இணைந்துள்ளார். இந்தப் படம் குறித்த முக்கிய அறிவிப்புகள் விரைவில் வெளியாக உள்ளன.

வியாழன், 8 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon