மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 24 ஜன 2021

சிறப்புக் கட்டுரை: வாழ்க்கையை மாற்றிய கேள்வி!

சிறப்புக் கட்டுரை: வாழ்க்கையை மாற்றிய கேள்வி!வெற்றிநடை போடும் தமிழகம்

கிங் விஸ்வா

கோவில்பட்டி கொண்டையா ராஜு பிறந்த தினம் நவம்பர் 7

1925, திருவண்ணாமலை. ரமணர் ஆசிரமம்.

ஒருநாள் காலையில், ரமணர் தனது சீடர்களுடன் அமர்ந்திருக்கும்போது ரமணரின் ஃபாலோயர்களில் ஒருவர் வந்து ஓர் ஓவியத்தைப் பரிசாக அளித்தார். அந்த ஓவியத்தைக் கூர்ந்து கவனித்த ரமணருக்கு அதில் ஏதோ ஒரு விஷயம் உறுத்தும் வகையில் இருப்பதாகத் தோன்றியது. அதைப் பற்றி அவர் விவாதிக்கும்போது, அவரது சீடர்களில் ஒருவர் எழுந்து நின்று, “உங்களுக்கு ஆட்சேபனை இல்லையென்றால், அந்த ஓவியத்தில் நான் சிறிது மாற்றங்கள் செய்து முழுமையாக்கட்டுமா?” என்று கேட்டார்.

எப்போதும் அமைதியாக இருக்கும் அந்த இளைஞர் பேசியதே மற்ற சீடர்களுக்கு ஆச்சரியமாக இருக்க, ரமணருக்கு இன்னொரு சந்தேகம் ஏற்பட்டது. “உங்களுக்கு ஓவியங்களைப் பற்றித் தெரியுமா?” என்று அவர் கேட்க, அந்த இளைஞர் சிரித்துக்கொண்டே அமைதியாக அந்த ஓவியத்தில் மாற்றங்களைச் செய்யத் தொடங்கினார்.

ஒரு கைதேர்ந்த ஓவியனின் லாகவத்துடன் அந்த இளைஞன் செயல்படுவதைக் கண்டு சீடர்கள் திகைத்திருக்க, அந்த இளைஞன் சற்று நேரத்தில் அந்த ஓவியத்தில் சில பல மாற்றங்கள் செய்து, அதை முழுமையான இலக்கணத்துடன் கூடிய ஓர் ஓவியமாக மாற்றினார்.

“உனக்கு வரையத் தெரியுமா?” என்று ரமணர் கேட்க, “ஓரளவுக்கு வரைவேன்” என்று சொன்னார் அந்த இளைஞர்.

எங்கே கற்றுக்கொண்டாய்?

யாரிடம் கற்றுக்கொண்டாய்?

என்றெல்லாம் மற்றவர்கள் வினவ, அதுவரையில் அந்த இளைஞனின் பின்புலத்தைப் பற்றிக் கேள்வி எதுவுமே கேட்டிராத ரமணர் மிக முக்கியமான அந்த ஒரு கேள்வியைக் கேட்டார்.

நீ யார்?

அந்தக் கேள்விக்கான பதில்தான் தமிழகத்தின் தலைசிறந்த ஓவியர்களில் ஒருவரை உருவாக்கியது என்றே சொல்லலாம்.

தமிழக அரசின் சென்னை கவின்கலைக் கல்லூரியில் 1918ஆம் ஆண்டு மாநிலத்திலேயே முதன்மையானவராகத் தேர்ச்சி பெற்ற கொண்டையா ராஜு தன்னுடைய கூட்டிலிருந்து வெளிவந்து ஒரு பட்டுப்பூச்சியாக மாறியது இந்தக் கேள்விக்குப் பிறகுதான்.

தன்னுடைய சீடன் தனது அளப்பரிய ஆற்றலை முழுமையாக உபயோகிக்காமல் ஆசிரமத்தில் சேவை செய்வதை விரும்பாத ரமணர் கொண்டையா ராஜுவின் திறமையை உலகிற்கு உணர்த்த விரும்பினார். உடனடியாக அவர் ராஜுவைத் தனது ஆசிரமத்திலிருந்து அனுப்பினார். இந்திய அளவில் காலண்டர் ஓவியங்களில் தனக்கென்று தனித்தன்மையுடன் கூடிய ஒரு பாதையை உருவாக்கிய கொண்டையா ராஜு ரமணரின் ஆசியுடன் திருவண்ணாமலையை விட்டு வெளியேற முடிவெடுத்தார்.

ஆசிரமத்தின் புரவலர்களில் ஒருவரான மதுரை பழனியப்பப் பிள்ளையின் நாடகத் திரைச்சீலைக் காட்சிகளை வரையும் பொறுப்பை உடனடியாக ஏற்றுக்கொண்டார் ராஜு. சில காலம் கழித்து அந்தக் கம்பெனியில் இருந்து விலகி, கோவில்பட்டியில் “தேவி ஆர்ட் ஸ்டுடியோ” என்ற பெயரில் ஓர் ஓவிய கலைக்கூடத்தை உருவாக்கினார். இங்கேதான் அவருடைய பிரதம சீடர்கள் ஆன சீனிவாசன், மீனாட்சி சுந்தரம், ராமலிங்க, சுப்பையா ஆகியோர் ஓவியக் கலையின் நுட்பங்களை அவரிடம் கற்றுத் தேர்ந்தனர்.

முதல் காலண்டர் ஓவியம்

1950களின் ஆரம்பத்தில் சிவகாசியைச் சேர்ந்த ஓர் அச்சகத்தினர் கொண்டையா ராஜுவை அணுகினார்கள். விருதுநகரைச் சேர்ந்த அம்பாள் காபி நிறுவனம்தான் தேவி ஆர்ட் ஸ்டுடியோவின் முதல் காலண்டர் க்ளையண்ட். மதுரையைச் சேர்ந்த, அப்பகுதியைச் சுற்றி இருக்கும் அனைவருக்கும் மிகவும் விருப்பமான மீனாட்சி திருக்கல்யாணக் காட்சியையே முழுவண்ண ஓவியமாக வரைந்தார்கள்.

ஆனால், இங்கேதான் ஒரு ட்விஸ்ட்.

உண்மையில் இந்த ஓவியத்தில் கொண்டையா ராஜு என்று அவரது கையெழுத்திடப்பட்டிருந்தாலும், இந்த ஓவியத்தை வரைந்தவர் அவரது முதன்மைச் சீடரான ராமலிங்கம்தான். இப்படியாக முதல் காலண்டர் ஓவியம் உருவானது. இதன் பின்னர், இந்தக் காலண்டரில் வண்ணப்படங்களை வரைந்து வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்கும் பாணி இந்தியா எங்கும் பரவியது. இதன் ஆரம்பம் தேவி ஆர்ட் ஸ்டுடியோவில் நடந்திருந்தாலும், அதன் ஆரம்ப வித்து விதைக்கப்பட்டது என்னவோ திருவண்ணாமலையில் கேட்கப்பட்ட அந்த ஒரு கேள்வியில்தான்.

நீ யார்?

மிகவும் மேலோட்டமான ஒரு கேள்வியாக இது தோன்றினாலும், இது மிக மிக முக்கியமான ஒரு கேள்வியாகும்.

நேற்று நவம்பர் ஏழு. கொண்டையா ராஜுவின் பிறந்தநாள். இந்த ஆண்டுதான் அவர் சென்னை அரசு கவின் கல்லூரியில் மாநிலத்திலேயே முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றதின் நூற்றாண்டு. கொண்டையா ராஜுவின் பிறந்தநாளைக் கொண்டாடும் இந்த வேளையில் ரமணர் கேட்ட அதே கேள்வியை உங்கள் முன் வைக்கிறேன்.

நீ யார்?

வியாழன், 8 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon