மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 28 ஜன 2021

விஜய், கலாநிதி மீது வழக்கு: சட்ட அமைச்சர் பேட்டி!

விஜய், கலாநிதி மீது வழக்கு: சட்ட அமைச்சர் பேட்டி!வெற்றிநடை போடும் தமிழகம்

சர்கார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியான போது புகைபிடிக்கும் காட்சி உள்ளது என தொடங்கிய சர்ச்சை, கதை திருட்டு, பாக்யராஜ் ராஜினாமா என நீண்டது. ஒரு வழியாக படம் திட்டமிடப்பட்டபடி நேற்று (நவம்பர் 6) வெளியானது. ஆனால் படம் வெளியானாலும் சர்ச்சைகள் மட்டும் குறைந்தபாடில்லை. தற்போது அதிமுக அமைச்சர்கள் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.

கடம்பூர் ராஜு

செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு காலையில் கோவில்பட்டியில் செய்தியாளர்களைச் சந்தித்த போது, “சர்கார் படத்தில் சில காட்சிகள் தொடர்பாக அரசுக்குத் தகவல்கள் வந்துள்ளன. அரசியல் உள்நோக்கத்துடன் சில காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்தக் காட்சிகளை அவர்களாகவே நீக்க வேண்டும். இது வளர்ந்து வரும் நடிகர் விஜய்க்கு நல்லது அல்ல. சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்காவிட்டால் சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக முதல்வருடன் கலந்து ஆலோசிக்கப்படும்” என்றார்.

கே.பி.அன்பழகன்

படம் இலவசத் திட்டங்கள் வழங்குவதைக் கொச்சைப்படுத்தும் விதமாக உருவாகியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகனும் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். “சர்கார் திரைப்படத்தில் இலவசங்கள் வேண்டாம் என்று கூறப்படுவதை மக்களே ஏற்க மாட்டார்கள். மக்களின் மனநிலைக்கு எதிரான கருத்துக்களைக் கூறும் ஒருவரையும் மக்கள் மனதில் கொள்ள மாட்டார்கள். தமிழக மக்களின் மனநிலை தற்போது ஆளும் அதிமுக அரசுக்கு சாதகமாகத்தான் உள்ளது” என்று கூறியுள்ளார்.

சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம்

திருப்போரூரில் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகத்திடம் சர்கார் சர்ச்சை பற்றி செய்தியாளர்கள் கேட்ட போது, “அப்படத்தில் அரசியல் நோக்கில் சில காட்சிகள் இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதுபற்றி மேல்மட்ட ஆலோசனைக்குப் பிறகு சர்கார் படத்தின் தயாரிப்பாளர், நடிகர், திரையரங்கு உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும்” என்று பதிலளித்துள்ளார்.

இலக்கிய சர்ச்சை

கவிஞர் மனுஷ்யபுத்திரன் மற்றொரு சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். படத்தில் விஜய்யின் பெயர் சுந்தர் ராமசாமி. கார்ப்பரேட் கம்பெனியின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் அவர் மற்ற நிறுவனங்களை அழிக்கும் பணியில் சிறந்து விளங்குபவராக அறிமுகப்படுத்தப்படுகிறார். இந்தப் பெயர் தமிழ் எழுத்தாளர் சுந்தர ராமசாமியை நினைவுபடுத்தும் விதமாக உள்ளதாக மனுஷ்யபுத்திரன் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தான் போகும் இடமெல்லாம் தன் போட்டியாளர்களை அழித்துவிடும் கார்பரேட் கம்பெனி தலைமை அதிகாரியின் பெயரை ' சுந்தர ராமசாமி ' என்று வைத்திருப்பதன் மூலமாக தன் இலக்கிய ஆசான் சுந்தர ராமசாமியுடன் உள்ள பழைய பகைக்கு இப்போது கணக்கு தீர்க்கிறாரா ஜெயமோகன்? சுந்தர ராமசாமி அப்படித் தன் போட்டி சிறுபத்திரிகைகளை அழித்தாரா என்ன? மேலும் சுந்தர ராமசாமி என்பது பொதுப்பெயரல்ல. அது எழுத்தாளர் சுந்தர ராமசாமியையே குறிக்கும். குட்டி ரேவதி- எஸ்.ராமகிருஷ்ணன் பஞ்சாயத்தின் நீட்சியாக இதை எடுத்துக்கொண்டால் இது கடும் சர்ச்சைக்குரியது” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரத்தில் மற்ற அமைச்சர்களின் கருத்துக்கள் அரசியல் ரீதியாகவே பார்க்கப்படுகிறது. ஆனால் சட்ட அமைச்சர் தயாரிப்பாளர், நடிகர் மீது வழக்கு தொடுப்பதற்கான மேல்மட்ட ஆலோசனையில் ஈடுபட்டுவருவதால் அவர்கள் மீது விரைவில் வழக்கு பதிவு செய்யப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

புதன், 7 நவ 2018

அடுத்ததுchevronRight icon