மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 7 நவ 2018

பட்டாசு: சென்னையில் 320 பேர் கைது!

பட்டாசு: சென்னையில் 320 பேர் கைது!

குறிப்பிட்ட இரண்டு மணி நேரத்தில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மீறியதாக, சென்னையில் 320 பேர் கைது செய்யப்பட்டனர்.

வழக்கமாக, தீபாவளி பண்டிகையன்று அதிகாலை முதல் நள்ளிரவு வரை பட்டாசுகளை வெடித்துக் கொண்டாடுவது மக்களின் வழக்கம். கடந்த அக்டோபர் 23ஆம் தேதியன்று, பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்குத் தடை விதிப்பது குறித்த வழக்கில் தீர்ப்பளித்தது உச்ச நீதிமன்றம். அப்போது, தீபாவளியன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டுமென்று குறிப்பிட்டனர் நீதிபதிகள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது.

இதற்குப் பதிலளித்த உச்ச நீதிமன்றம், பட்டாசு வெடிப்பதற்கான நேரத்தை நீட்டிக்க முடியாது என்றும், எந்த இரண்டு மணி நேரத்தில் பட்டாசு வெடிக்கலாம் என்பதை தமிழக அரசே முடிவு செய்துகொள்ளலாம் என்றும் தெரிவித்தது.

இதையடுத்து, தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்கலாம் என்று அறிவித்தது தமிழக அரசு. அதே நேரத்தில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அவமதிக்கும் வகையில் நடந்துகொள்பவர்கள் மீது வழக்கு தொடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தது.

இந்த நிலையில், நேற்று (நவம்பர் 6) தீபாவளியைக் கொண்டாடியபோது தடையை மீறி பட்டாசு வெடித்ததாக, தமிழகமெங்கும் 1,000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். கோவை, திருப்பூர், திருநெல்வேலி, விழுப்புரம் மாவட்டங்களில் அதிகளவில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் சுமார் 10 வழக்குகளாவது பதிவாக வேண்டுமென்று, அங்குள்ள ஆய்வாளர்களிடம் உயரதிகாரி ஒருவர் வாய்மொழியாக அறிவுறுத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை, உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மீறி பட்டாசு வெடித்ததாக 385 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 320 பேர் கைது செய்யப்பட்டு, பின்னர் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

வேலைவாய்ப்பு: சென்னை ஐஐடியில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: சென்னை ஐஐடியில் பணி!

நீர்வரத்துக்குத் தடை: மேய்ச்சல் நிலமாக மாறிய ஏரி - விவசாயிகள் ...

3 நிமிட வாசிப்பு

நீர்வரத்துக்குத் தடை: மேய்ச்சல் நிலமாக மாறிய ஏரி - விவசாயிகள் வேதனை!

பெற்றோரை இழந்த குழந்தைகளை அடையாளம் காண வேண்டும் : ஒன்றிய அரசு ...

3 நிமிட வாசிப்பு

பெற்றோரை இழந்த குழந்தைகளை அடையாளம் காண வேண்டும் : ஒன்றிய அரசு

புதன் 7 நவ 2018