மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 12 ஜூலை 2020

டிஜிட்டல் திண்ணை: ஆம்னி பஸ்கள்… முதல்வர் உத்தரவு!

டிஜிட்டல் திண்ணை: ஆம்னி பஸ்கள்… முதல்வர் உத்தரவு!

மொபைலில் டேட்டா ஆன் செய்துட்டுக் காத்திருந்தோம். வாட்ஸ் அப் ஆன்லைனில் வந்தது.

“முதல்வர் எடப்பாடி பழனிசாமி தீபாவளிக்கு சேலத்துக்குப் போகவில்லை. சென்னையில்தான் இருந்திருக்கிறார். வழக்கமாக வார இறுதி என்றாலே சேலத்துக்குப் புறப்பட்டுவிடும் முதல்வர் இந்த முறை தீபாவளிக்குக்கூட சேலம் போகவில்லை. அவரது குடும்பத்தினர் சேலத்திலிருந்து கிளம்பிச் சென்னைக்கு வந்துவிட்டார்கள். கிரீன்வேஸ் சாலையில் உள்ள தன் வீட்டில்தான் இந்த வருடம் தீபாவளியைக் கொண்டாடினார் முதல்வர். கட்சிக்காரர்கள் யாரையும் தீபாவளி அன்று சென்னை வீட்டுக்கும் வர வேண்டாம் எனவும் சொல்லிவிட்டு, முழுக்க முழுக்கவே நேற்று குடும்பத்துடன் மட்டுமே தீபாவளியைக் கொண்டாடியிருக்கிறார்.

ஆனால், போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருடன் மட்டும் இரண்டு முறை நேற்று பேசினாராம். ‘எந்த வருடமும் இல்லாத அளவுக்கு இந்த வருடம் கூடுதலாக பஸ்களை விட்டதுல மக்களுக்கு ரொம்பவும் மகிழ்ச்சி. வழக்கமாக பஸ் விஷயத்துல நம்மை குறை சொல்றவங்க கூட இந்த முறை சொல்லவில்லை. அதுவும் நீங்க கோயம்பேட்டுல போய் உட்கார்ந்து ஆய்வு செஞ்சது எல்லாம் மக்கள்கிட்ட நல்ல பேரை உண்டாக்கி கொடுத்திருக்கு. சென்னையிலிருந்து மக்கள் கிளம்பி ஊருக்குப் போறதுக்கு எவ்வளவு முக்கியத்தும் கொடுத்தோமோ அதே அளவுக்கு முக்கியத்துவம் அவங்க திரும்பி சென்னை வந்து சேருவதற்கும் கொடுக்கணும். இன்னைக்கு இரவு சென்னைக்குத் திரும்பி வர்றவங்க மிகவும் குறைவாகத்தான் இருப்பாங்க. அதை வெச்சு கணக்குப் போட்டுடக் கூடாது. புதன் கிழமை இரவுதான் பெரும்பாலும் ஊருல இருந்து கிளம்புவாங்க. எல்லா ஊர்களில் இருந்துமே கூடுதலாக பஸ்களை இயக்க ஏற்பாடு செஞ்சுடுங்க.

பஸ் ஸ்டேண்டுக்கு வந்தாங்கன்னா ரொம்ப நேரம் காத்திருக்காமல் சென்னைக்கு கிளம்புற அளவுக்கு பஸ் இருக்கணும். அதேநேரத்துல ஸ்டேண்டிங்ல நின்னுட்டு போற மாதிரி கூட்டமும் இருக்கக் கூடாது. இதுதான் அவங்க எதிர்பார்க்கிறது. திரும்பி வரதுக்கும் சரியான ஏற்பாடுகளை பண்ணிட்டால் நிச்சயமாக மக்கள் நம்மை பாராட்டுவாங்க. பஸ்ல போறவங்க எல்லாமே மிடில் கிளாஸ் மக்கள்தான். காரில் போறவங்களைப் பத்தி நாம யோசிக்க தேவை இல்லை. நமக்கான ஓட்டு வங்கி என்பது பஸ்ல போறவங்கதான். அதனால ரொம்பவும் கவனமாக பார்த்துக்கோங்க...’ என்று சொன்னாராம் முதல்வர்.

அதற்கு அமைச்சர் விஜயபாஸ்கரோ, ‘எந்த ஊருக்கெல்லாம் அதிக அளவு மக்கள் போயிருக்காங்க என்ற லிஸ்ட் என்கிட்ட இருக்கு. மதுரை, கோவை, சேலம், நெல்லை, வேலூர் , திருவண்ணாமலை ஆகிய ஊர்களுக்கு பயணம் செஞ்சவங்கதான் அதிகம். இந்த ஊர்களில் இருந்தெல்லாம் வழக்கமாக இயக்கும் பேருந்துகளை விட, மூன்று மடங்கு அதிகமாக ஏற்பாடு செய்திருக்கோம். தேவைப்பட்டால், இன்னும் அதிகமாக இயக்கும் அளவுக்கு அந்த ஊர்களில் எல்லாம் ஸ்பேர் பஸ்ஸும் தயாராக இருக்கு. சென்னையில் இருந்து கிளம்பும் பேருந்துகளைக்கூட, மற்ற மாவட்டங்களுக்குத் திருப்பிவிட்டு, அங்கிருந்து சென்னைக்கு வர மாதிரி ஏற்பாடு செஞ்சிருக்கேன்.’ என்று சொன்னாராம்.

மறுபடியும், நேற்று இரவும் அமைச்சர் விஜயபாஸ்கருடன் பேசினாராம் எடப்பாடி. ‘ஆம்னி பஸ்கள்ல அதிக கட்டணம் வசூல் பண்றாங்க என்று புகாராக வந்துட்டு இருக்கு. அதுக்கு என்ன செய்யலாம்னு யோசிச்சீங்களா?’ என்று கேட்டாராம். அமைச்சர் விஜயபாஸ்கர் அதற்கு சில விளக்கங்களை கொடுத்திருக்கிறார். ‘ஆம்னி பஸ்களை கட்டுப்படுத்த நமக்கு எந்த சட்டமும் இல்லை. ஆம்னி பஸ்களை பொறுத்தவரை அவங்க டிக்கெட் போட்டு ஓட்ட சட்டமும் இல்லை என்பது உங்களுக்கும் தெரியும். அவங்க சங்க நிர்வாகிகளிடம் பேசி, அரசாங்கமே ஒரு கட்டணத்தை நிர்ணயம் செஞ்சா மட்டும்தான் இதை கட்டுக்குள் கொண்டு வர முடியும். அதுக்கு சில சங்கங்கள் ஒத்துக்குவாங்களான்னு தெரியலை. ஆனா அதை செஞ்சுட்டா இன்னும் நல்லாதான் இருக்கும்.

இதுல பெரும்பாலான ஆம்னி பஸ்கள் நம்ம கட்சிக்காரங்ககிட்டயும் இருக்கு. திமுககாரங்ககிட்டயும் இருக்கு. அதனாலதான் யாருமே இதுல கை வைக்காம இவ்வளவு நாளா இருக்காங்க.’ என்று சொல்ல... எடப்பாடியோ, ‘ ஆரம்பத்துல எதிர்ப்பு வந்தாலும், மக்கள்கிட்ட இப்படி நாம செஞ்சுட்டா நல்லா பேரு கிடைக்கும் இல்லையா... தீபாவளி முடிஞ்சதும் ஆம்னி பஸ் சங்க நிர்வாகிகளை கூப்பிட்டுப் பேசுவோம். அவங்க சங்கத்தோட சேர்மென் கே.பி.என். பஸ் ஓனர் நடராஜன் தான். அவரு எனக்கு ஒருவகையில் சொந்தக்காரர்தான். அவருகிட்ட நானும் பேசிப் பார்க்கிறேன். பொங்கலுக்கு முன்னாடி ஆம்னி பஸ்க்கு நாமே ஒரு கட்டணத்தை பிக்ஸ் பண்ணிடலாம்...’ என்று சொன்னாராம். அதுமட்டுமல்லாமல் இது தொடர்பாக ஆம்னி பஸ் சங்க நிர்வாகிகளுடன் போனில் பேசியும் விட்டாராம் முதல்வர்” என்று முடிந்த மெசேஜ்க்கு செண்ட் கொடுத்தது வாட்ஸ் அப்.

அதை அப்படியே காப்பி செய்து ஷேரும் செய்துவிட்டு சைன் அவுட் ஆனது ஃபேஸ்புக்.

புதன், 7 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon