மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 13 ஆக 2020

அத்துமீறிய விராட் கோலி

அத்துமீறிய விராட் கோலி

கிரிக்கெட் போட்டிகளில் பல்வேறு சாதனைகளைப் படைத்துவரும் விராட் கோலி தற்போது புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளிலும் விராட் கோலி சிறப்பான பங்களிப்பை அளித்துவருகிறார். அவரது தலைமையின் கீழ் இந்திய அணியும் தொடர் வெற்றிகளைப் பெற்றுவருகிறது. உறுதியாகவும் முனைப்புடனும் களத்தில் நின்று எதிரணியின் பந்துவீச்சை சிதறடிக்கும் விராட் கோலி கிரிக்கெட் ரசிகர் ஒருவரின் விமர்சனத்தை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறியுள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் போட்டிகளில் விராட் கோலிக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. நவம்பர் ஐந்தாம் தேதி கோலியின் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு புதிய ஆப் வெளியிடப்பட்டது. அந்த ஆப் மூலம் புதிய வீடியோக்களை கோலி வெளியிட்டுவருகிறார். அந்த வீடியோ ஒன்றுக்கு கிரிக்கெட் ரசிகர் ஒருவர் இன்ஸ்டகிராமில் கமெண்ட் செய்துள்ளார். “மிகையாக மதிப்பிடப்பட்ட பேட்ஸ்மேன். என்னைப் பொறுத்த வரையில் நான் அவரது பேட்டிங்கில் எந்த சிறப்பம்சத்தையும் காணவில்லை. இந்திய வீரர்களைவிட இங்கிலாந்து, ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களின் ஆட்டத்தையே ரசித்துப் பார்க்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்த விராட் கோலி, “சரி. இதற்குப் பின்னர் நீங்கள் ஏன் இந்தியாவில் இருக்க வேண்டும்? வேறு எந்த நாட்டிற்காகவாவது சென்றுவிடுங்கள். மற்ற நாடுகளை விரும்பிக்கொண்டு இங்கே ஏன் இருக்க வேண்டும்? நீங்கள் என்னை விரும்பாதது பற்றிக் கவலையில்லை. ஆனால் மற்ற நாட்டினரை விரும்பிக்கொண்டு இந்த நாட்டில் வாழ்வதை விரும்பவில்லை. உங்கள் முன்னுரிமைகளைச் சரிசெய்துகொள்ளுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

கிரிக்கெட் எனும் விளையாட்டில் தன்னுடைய ஆட்டத்தையோ அல்லது தனது நாட்டைச் சேர்ந்த வீரர்களையோ தவிர பிற நாட்டு வீரர்களை ரசிப்பதாலே நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற கோலியின் கருத்து சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இந்திய அணி வீரர்கள் பலரே தங்கள் ரோல் மாடலாக மற்ற நாட்டு வீரர்களைக் கூறுவதைப் பார்க்கலாம். அதுபோலவே வெளிநாட்டு வீரர்களும் இந்திய அணியின் நட்சத்திரங்களைப் பற்றிச் சொல்லியிருக்கிறார்கள். திறமையை ரசிப்பதற்கு இடையில் நாட்டுப் பற்றைத் திணிப்பது ஏற்புடையதல்ல. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் கோலி இது போன்ற முதிர்ச்சியற்ற வார்த்தைகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் பலரும் கருத்து கூறிவருகின்றனர்.

புதன், 7 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon