மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 13 ஆக 2020

சினிமா பாரடைசோ: நேருவின் மரணமும் குலமகள் ராதையும்!

சினிமா பாரடைசோ: நேருவின் மரணமும் குலமகள் ராதையும்!

தேவிபாரதி

தமிழ் சினிமாவின் வாயிலாகச் சமூகத்தை அணுகும் தொடர்

எனது சினிமா அனுபவத்துக்கு அரசியல் வரலாற்றுப் பின்னணி உண்டு. எனது ஏழு அல்லது எட்டாவது வயதில்தான் முதன்முதலில் திரைப்படத்தைப் பார்த்தேன். அது 1964ஆம் வருடம். பிரதமர் நேரு மரணமடைந்ததற்கு மறுநாள் தற்போதைய திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சித்ரா திரையரங்கில்தான் முதல் சினிமாவைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. சிவாஜி கணேசன் நடித்த குலமகள் ராதைதான் நான் பார்த்த முதல் திரைப்படம்.

தாராபுரத்திற்கு அருகில் தேவத்தூர் என்னும் மிகச் சிறிய கிராமத்தில் எங்கள் உறவினர் ஒருவருடைய வீட்டிலிருந்தபோதுதான் நேரு செத்துப்போய்விட்டார் என்னும் செய்தியைக் கேள்விப்பட்டேன். எங்கிருந்தோ அந்தச் செய்தியை அறிந்துகொண்டு வந்த என் தந்தை மிகுந்த சோகத்துடன் தென்பட்டார். தொடக்கப் பள்ளி ஆசிரியரும் முன்னாள் ராணுவ வீரருமான என் தந்தையை அந்த மரணம் மிகவும் பாதித்திருந்தது. அவரது கண்கள் கலங்கிக்கொண்டிருந்தன. சோகமான அந்தத் தகவலைப் பகிர்ந்துகொள்வதற்கு நேருவைப் பற்றித் தெரிந்த வேறு யாருமே அந்தக் கிராமத்தில் இல்லாததால் எழுத்து வாசனையற்ற என் அம்மாவிடம் குழந்தைகளான எங்களிடமும் பகிர்ந்துகொண்டார்.

கலங்கிய கண்களுடன் திண்ணையில் சாய்ந்து உட்கார்ந்திருந்த அப்பாவை அம்மா சற்று பயத்துடன் பார்த்தார். உடனடியாக ஒரு செம்புத் தண்ணீரைக் கொண்டுவந்து குடிக்கச் சொல்லி வற்புறுத்தினார். முகத்தைத் துடைத்துக்கொள்வதற்காக துண்டு ஒன்றையும் எடுத்து வந்து தந்தார். அன்று முழுவதும் அவர் சாப்பிடவே இல்லை.

அவரது அத்துயர் என் தாயாரை மிகவும் தவிப்புள்ளாக்கியிருந்தது. அவர் ஆவலுடன் மேற்கொண்டிருந்த ஒரு விடுமுறைக்காலப் பயணம், எனது தந்தையின் சோகமயமான மனோநிலை காரணமாக வீணாகிக்கொண்டிருந்தது. நேரு முக்கியமான தலைவர்தான். ஆனால், அதற்காக வருந்துவதற்கும் ஓர் அளவில்லையா என்ன?

அதிலிருந்து அப்பாவை மீட்டெடுப்பதற்காகவோ என்னவோ குழந்தைகளை அழைத்துக்கொண்டு சினிமாவுக்குப் போகலாம் என அம்மா யோசனை சொன்னார். அம்மாவின் சகோதரரான மாமா தேவத்தூரின் விவசாயி ஒருவரிடமிருந்து பாரவண்டி ஒன்றைப் பெற்று வந்தார். எங்களோடு அண்டை வீட்டினர் சிலரும் சேர்ந்துகொள்ள இரட்டை மாட்டு வண்டி. அந்த வண்டியில் எல்லோரும் தாராபுரத்திற்குப் போனோம்.

அன்றைய தாராபுரம்

அப்போதே - 1960களில் - தாராபுரம் பெருநகரத்திற்குரிய தோரணையைப் பெற்றிருந்தது. மளிகைக் கடைகள், பெட்டிக் கடைகள், ஹோட்டல்கள், பள்ளிக்கூடங்கள், கோயில்கள், தேவாலயங்கள், காவல் நிலையங்கள், நீதிமன்றங்கள் தவிர பேருந்து நிலையமும் இருந்தது. பேருந்து நிலையத்தையொட்டி நான்கைந்து குதிரை வண்டிகளும் ஏழெட்டு மாட்டு வண்டிகளும் நின்றிருந்தன. அப்போதைய டாக்சிகளும் ஆட்டோ ரிக்‌ஷாக்களும் அவைதான்.

அமராவதி ஆற்றின் கரையோரம் இருந்தது சித்ரா திரையரங்கம். திரையரங்கைச் சுற்றிக் கிடந்த திடலைப் போல் தோற்றமளித்த பொட்டல்வெளியில் வண்டியை நிறுத்தி எங்களை ஒவ்வொருவராகக் கீழறக்கிவிட்டார்கள். எங்களுக்கு முன்பாகவே ஆறேழு பார வண்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. ஓரிரு கூட்டு வண்டிகளும் தென்பட்டன.

தியேட்டருக்கு எதிரே சாலையோரம் இரண்டு மூன்று கொடிக்கம்பங்கள், கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டிருந்தன. மேஜையொன்றில் நேருவின் சட்டமிடப்படாத கறுப்பு வெள்ளைப் புகைப்படம். அநேகமாக ஒரு பழைய காலண்டர். அந்தப் புகைப்படத்தில் இருந்த நேரு ஆழ்ந்த யோசனையில் மூழ்கியிருந்தவரைப் போல் தென்பட்டார். அவரது நெற்றியில் யாரோ குங்குமத்தைத் தீற்றியிருந்தார்கள். காலண்டரின் பலவீனமான சட்டத்தில் ஒரு சிறிய செவ்வந்தி மாலை போடப்பட்டிருந்தது. அப்பாவைப் போலவே சோகம் கப்பிய முகங்களுடன் தென்பட்ட நான்கைந்து பேர் அந்தக் கொடிக்கம்பங்களுக்குக் கீழே நின்றிருந்தார்கள். வண்டியிலிருந்து இறங்கிய உடனே அப்பா அந்தக் கொடிக்கம்பத்தை நோக்கி நடந்தார். அப்பாவுடன் இரண்டு முதியவர்களும் இளைஞரொருவரும் சேர்ந்துகொண்டனர்.

கொடிக்கம்பத்தையும் எதிரே பிரமாண்டமான தோற்றத்துடன் தென்பட்ட தியேட்டரையும் மாறிமாறிப் பார்த்துக்கொண்டிருந்த அம்மா சிறு தயக்கத்துடன் அப்பாவைப் பின் தொடர்ந்தார். நேருவின் அந்தப் புகைப்படத்தைப் பார்த்தவுடன் அப்பாவின் முகம் விம்மியது போல் தென்பட்டது. இரு கைகளையும் கூப்பிக் கும்பிட்டவர் சிறிது நேரம் வரை அங்கேயே நின்றுகொண்டிருந்தார். மாமாவும் எங்களுடன் வந்த தேவத்தூர்வாசிகளும் நுழைவுச் சீட்டு வாங்குவதற்காகக் காத்திருந்த வரிசையில் போய் நின்றுகொண்டார்கள்.

அவர்தான் சிவாஜி

நீண்ட வரிசை. பெண்களுக்குத் தனியாக ஒரு வரிசை தென்பட்டது. பின்கொசுவம் வைத்த சேலை உடுத்திய ஏழெட்டுப் பெண்கள் அந்த வரிசையில் நின்றுகொண்டிருந்தார்கள். கூடவே பாவாடை சட்டை உடுத்திய இரண்டு மூன்று சிறுமிகள். ஒரு சிறுமி தாவணி உடுத்தியிருந்தாள். எங்களை அழைத்துக்கொண்டு அம்மா அந்த வரிசையில் போய் நின்றுகொண்டார். எல்லோருமே பரவசத்தில் மூழ்கியிருந்தவர்களாய்த் தென்பட்டார்கள். தியேட்டரின் மதில் சுவர் மீது போஸ்டர் ஒட்டப்பட்ட ஒரு தட்டி, அருகில் சிவாஜி கணேசனின் ஆளுயர கட் அவுட். கட் அவுட்டில் சிவாஜி சிரித்துக்கொண்டிருந்தார். காலண்டரிலிருந்த நேருவின் கழுத்தில் தென்பட்டது போலவே சிவாஜியின் தோளில் இரண்டு மாலைகள். அவற்றிலொன்று ரோஜா மாலை. நான் வைத்த விழி வாங்காமல் அந்தப் போஸ்டர்களையும் கட் அவுட்டையும் ஆச்சரியமாகப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

அவர்தான் சிவாஜி என எனக்கு அறிமுகப்படுத்திவைத்தார் அம்மா. அவர் நடித்த வேறு சில படங்களைப் பற்றிச் சொன்னார். பாசமலர், பாவ மன்னிப்பு, படிக்காத மேதை, ஆலயமணி, ஆண்டவன் கட்டளை என அவர் நடித்த படங்களின் சோகம் ததும்பும் கதைகளைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தார். அருகில் நின்றிருந்த பெண்கள் அவர் சொன்னதை ஆச்சரியத்துடன் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

கூட்டம் பெருகிக்கொண்டிருந்தது. அது பகல் காட்சி. வெயில் கொளுத்திக்கொண்டிருந்தது. எல்லோருடைய முகங்களும் வியர்த்திருந்தன. அந்த நேரத்தில் அங்கு வந்த ஐஸ் வியாபாரியிடம் ஐஸ் வாங்கிச் சப்பி வெப்பத்தைத் தணித்துக்கொண்டார்கள். ஆண்கள் வரிசையில் கூட்டம் முண்டியடித்துக்கொண்டிருந்தார்கள். நுழைவுச் சீட்டுக்கான மணி ஒலித்தவுடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒவ்வொருவரும் மற்றவரை முந்திக்கொண்டு டிக்கெட் கவுன்ட்டரை நெருங்க முயற்சி செய்துகொண்டிருந்தார்கள். யாரோ யார் மீதோ வசைமாறிப் பொழிந்தார்கள். எல்லாவற்றையும் ஆச்சரியமாகப் பார்த்துக்கொண்டே அம்மாவின் முந்தானையைப் பற்றிக்கொண்டு நடந்தேன்.

தியேட்டரின் அமைப்பு கற்பனைக்கு அப்பாற்பட்டதாகத் தென்பட்டது. வரிசையாகப் போடப்பட்டிருந்த நீண்ட பெஞ்சுகளும், பின் வரிசைகளில் இருந்த நாற்காலிகளும், வெண்ணிறமான அகன்ற திரைச்சீலையும் கனவு போல் தோன்றின. உடனடியாக மனதில் தோன்றியது தினத்தந்தியில் படித்த கன்னித்தீவு படக்கதைதான். சினிமா பற்றி அம்மா சொன்ன தகவல்களைக் கொண்டு கன்னித்தீவு போன்ற சித்திரக்கதையொன்றைக் கற்பனை செய்துகொண்டேன். சினிமா என்பது பெரிய சித்திரக் கதையாகத்தான் இருக்கும் என நினைத்தேன். எனக்குத் தோன்றிய கற்பனைகளை அம்மாவுக்குச் சொன்னேன். கேள்வி கேட்டேன்.

எனது கேள்விகளுக்கு அம்மாவால் ஒருபோதும் பதிலளிக்க முடியவில்லை, அதைவிட முக்கியமாக, எனக்குக் கேள்வி கேட்கத் தெரிந்திருக்கவில்லை.

உற்சாகம் பொங்கும் அரங்கம்

தியேட்டர் நிரம்பி வழிந்தது. அவ்வளவு துடிப்பு மிக்க உற்சாகம் பொங்கும் மக்கள் திரளை நான் அதற்கு முன்பு பார்த்ததில்லை. அது கற்பனைக்கெட்டாத விஷயமாக இருந்தது. என்னையும் என் சகோதரியையும் தம்பியையும் கைப்பற்றி வெகு பத்திரமாக அழைத்துக்கொண்டு போய் முன் வரிசையிலிருந்த நீண்ட பெஞ்சு ஒன்றில் தனக்கருகே உட்கார வைத்துக்கொண்டார் அம்மா. கால்களைத் தொங்கவிட்டு உட்கார்ந்தபடி வெகு பயபக்தியோடு திரைச்சீலையைப் பார்த்துக்கொண்டிருந்தார் அம்மா.

அப்பாவைக் காணோம். அவர் ஆண்களுக்கான பகுதியில் எங்காவது உட்கார்ந்திருப்பார் என்றார் அம்மா. பெரும் கிளர்ச்சியடைந்தவளாகக் காணப்பட்டார். எங்களுடைய பாதுகாப்புக் குறித்த கவலையும் சேர்ந்துகொண்டிருக்க வேண்டும். தன் இரண்டு கைகளைக் கொண்டு எங்கள் மூன்று பேரையும் பற்றியிருந்தாள். பெரும் கூட்டம் அவளுக்கு மிரட்சியை ஏற்படுத்தியிருந்திருக்கக் கூடும். திரையரங்கின் எல்லாத் திசைகளிலிருந்தும் விசில் சத்தங்களும் கரவொலிகளும் சிறிதும் இடைவெளியின்றி ஒலித்துக்கொண்டிருந்தன, அரங்கம் பீடிப்புகையால் சூழ்ந்திருந்தது. கலவரமூட்டும் சுருட்டு வாடை.

திடீரென ஒலித்த இசைத்தட்டு என்னை அதிர்ச்சியுறச் செய்தது. அதே சமயத்தில் விளக்குகளும் அணைந்து எங்கும் இருள். பயங்கரமான ஏதோ ஒன்று நிகழப் போகிறது என்னும் எதிர்பார்ப்புடன் தியேட்டரின் மங்கலான வெளிச்சம் சூழ்ந்த வெளியை ஊடுருவிப் பார்த்துக்கொண்டிருந்தேன். திரையில் நல்வரவு கூறிய சிலைடு புகை பிடிக்காதீர் என்றும் எச்சரித்தது. நான் பின்னால் திரும்பிப் பார்த்தேன். புறாக்கூண்டு போலிருந்த ஆபரேட்டரின் அறையிலிருந்து வெளிக்கிளம்பி திரையில் மோதிய ஒளிக்கற்றையின் அசைவுகளையும், அதை ஊடுருவி மேலெழும்பிய புகை மண்டலமும் அதுவரை நான் சந்தித்திராத பேரதிசயங்களாயிருந்தன.

'அங்க எங்கடா பாக்கறே? முன்னால பாரு, படம் இங்கதான தெரியுது?’ என தலையில் ஒரு குட்டுக் குட்டி எனது கவனத்தைத் திரையை நோக்கித் திருப்பினார் அம்மா. பிறகு வெகு கவனமாகத் திரையைப் பார்க்கத் தொடங்கினேன். செய்திப் படமொன்று திரையிடப்பட்டது. நாட்டின் ஏதோ ஒரு பகுதியில் வெள்ளப் பெருக்கு. ஏராளமானோர் மூட்டை முடிச்சுக்களுடன் பாதுகாப்பான இடத்தை நோக்கி விரைந்துகொண்டிருந்தனர். இருளும் ஒளியுமான படச் சட்டங்கள் திரையில் மாறி மாறி விழுந்துகொண்டிருந்தன, நின்றன, அசைந்தன, ஓடி மறைந்தன. ஒரு வகையில் நான் கற்பனை செய்திருந்தது போன்ற சித்திரக்கதைதான். ஆனால் இதற்கு அசைவுகள் இருக்கின்றன, இதில் தோன்றும் உருவங்கள் சத்தமெழுப்புகின்றன, பார்க்க உயிருள்ளவை போலும் தென்படுகின்றன. கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தேன். நானும் விசிலடிக்க முற்பட்டேன். ஆனால், முடியவில்லை. அது போன்ற சாகசங்களுக்கு நான் பழகியிருக்கவில்லை. வெவ்வேறு விதங்களில் இரண்டு மூன்று தரம் முயன்று பார்த்துவிட்டு அந்த ஆசையைக் கைவிட்டேன்.

விசில் அடிக்கும் கலை

மறுமுறை நான் சினிமாவுக்குப் போனது அதற்குப்பிறகு சுமார் ஒரு வருடம் கழிந்துதான். அதற்குள் ஓரளவு விசிலடிக்கக் கற்றுக்கொண்டிருந்தேன். ஊரிலிருந்த எனது தோழர்கள் அதில் எனக்குக் பெருமளவு உதவி செய்தார்கள். அன்றைய சூழலில் விசிலடிக்காத கிராமப்புற சினிமாப் பார்வையாளர்கள் அபூர்வம். திரைப்பட ரசிகர்களை 'விசிலடிச்சான் குஞ்சுகள்’ என்றுதான் சொல்வார்கள். குறிப்பாக எம்ஜிஆர் ரசிகர்களை. பெரும் ஆரவாரத்தோடும் உற்சாகத்தோடும் படத்தை ரசிப்பவர்கள் எம்ஜிஆர் ரசிகர்கள். எம்ஜிஆரின் உருவம் தென்பட்டாலே தியேட்டர் அதிர்ந்த காலம் அது.

அதனால்தானோ என்னவோ அவரது படங்களில் எடுத்த எடுப்பில் அவரை முழுமையாகக் காட்ட மாட்டார்கள். குதிரையில் தாவி ஏறும் தருணமென்றால் கால்களையோ, கடிவாளத்தைச் சுண்டும் கைகளையோதான் முதலில் காட்டுவார்கள். அப்போது எழும் விசில் சத்தங்களாலும் கைதட்டல்களாலும் திரையரங்கம் அதிரும். அநேகமாக அந்தத் தருணத்தில் அவருடைய நாயகி பெரும் நெருக்கடியில் சிக்கியிருப்பாள். யாராவது அவளைக் கடத்திக்கொண்டு போய்க் கானகத்தின் நடுவில் இருக்கும் ஒரு சுரங்க மாளிகைக்குள்ளோ நகரத்தின் ஒதுக்குப்புறத்தில் இருக்கும் பாழடைந்த கட்டடத்திற்குள்ளோ அடைத்து வைத்துப் பாலியல் பலாத்காரம் -அப்பொழுது அதைக் கற்பழிப்பு என்றுதான் சொல்வார்கள் - செய்வதற்கு முற்பட்டுக் கொண்டிருப்பார்கள். பல காத தூரத்திலிருக்கும் நாயகன் எம்ஜிஆர் எப்படியோ விஷயத்தைத் அறிந்துகொண்டு காற்றினும் கடுகி வந்து அவளைக் காப்பாற்றிவிடுவார். இது அவரது ரசிகர்களுக்கும் தெரியும். நாயகி நிச்சயம் காப்பாற்றப்பட்டு விடுவார் என்பதையும் வில்லன் எம்ஜிஆரிடம் செமத்தியாக உதை வாங்குவார் என்பதையும் அவர்கள் அறிந்து வைத்திருந்தார்கள். அவர்கள் காணவும், கைதட்டவும் விசிலடிக்கவும் விரும்புவது அது போன்ற காட்சிகளுக்காகத்தான்.

எட்டு வயதில் நான் முதன் முதலில் பார்த்த குலமகள் ராதை படத்தின் ஒரு காட்சிகூட இப்போது நினைவில்லை. அந்தப் படத்தை மறுபடிப் பார்க்க வாய்க்கவும் இல்லை. ஆனால், நான் சிவாஜி ரசிகனாகவே வளர்ந்தேன். அம்மாவின் வழிகாட்டுதலோடு அநேகமாக அவரது எல்லாப் படங்களையும் பார்த்தேன். ஒருவேளை அம்மா என்னை சிவாஜியின் ஒரு பாத்திரப் படைப்பின் சாயலில் உருவாக்க விரும்பினாரோ என்றுகூட நினைத்திருக்கிறேன். பராசக்தி தொடங்கி, பாசமலர் வரை சிவாஜி ஏற்று நடித்த பல பாத்திரங்களின் பெயரையே அம்மா எனக்குப் பெயராகச் சூட்டியிருந்தார்.

சிவாஜி ரசிகர்கள் மிகுந்த உணர்ச்சிவசப்படுபவர்கள். இளகிய மனம் கொண்டவர்கள், சகோதரனாகவோ தந்தையாகவோ கணவனாகவோ குடும்பத்தின் மீது பாசம் கொண்டவர்கள். பொறுப்பானவர்கள், பொறுமைசாலிகள். காதலிக்கும்போது அதிகமாக வெட்கப்படுபவர்கள். ஒருவகையில் சிவாஜி ஏற்று நடித்த பாத்திரங்களின் இயல்புகளைப் பின்பற்றுபவர்கள். படம் பார்க்கும்போது கண்ணீர் சிந்தத் தயங்காதவர்கள். பொறுப்பானவர்கள், குடும்பத்தின் மீது பற்றும் பாசமும் கொண்டவர்கள். பிற்காலத்தில் தேசப்பற்றுடையவர்களாகவும் அடையாளப்படுத்தப் பட்டவர்கள் சிவாஜி ரசிகர்கள்.

(அடுத்த புதனன்று தொடரும்)

(கட்டுரையாளர் பற்றிய குறிப்பு: சிறுகதைகள், கவிதைகள், நாடகங்கள், கட்டுரைகள் எழுதிவரும் தேவிபாரதி, மார்க்சிய, மார்க்சிய லெனினிய இயக்கங்களில் சிறிது காலம் செயல்பட்டவர். 1994இல் இளம் நாடக ஆசிரியருக்கான மத்திய சங்கீத நாடக அகாடமியின் பரிசு பெற்றார். இவரது சிறுகதைகளில் சில ஆங்கிலத்திலும் இந்தி, மலையாளம் உள்ளிட்ட சில இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘வீடென்ப’ என்னும் தலைப்பிலான இவரது தேர்ந்தெடுக்கப்பட்ட பத்துச் சிறுகதைகள் என். கல்யாணராமன் மொழிபெயர்ப்பில் Horper Perinial வெளியீடாக Farewell Mahatma என்னும் தலைப்பில் வெளிவந்தது. காலச்சுவடின் பொறுப்பாசிரியராக ஆறு ஆண்டுகள் பணியாற்றினார். மின்னஞ்சல் முகவரி: [email protected])

*

செவ்வாய், 6 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon