மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 22 செப் 2020

பட்டாசு விற்பனைக்குப் பெருத்த அடி!

பட்டாசு விற்பனைக்குப் பெருத்த அடி!

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையில் 40 விழுக்காடு பட்டாசு விற்பனை சரிந்துள்ளதாக அனைத்திந்திய வர்த்தகர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பிரவீன் கண்டேல்வல் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் ஐ.ஏ.என்.எஸ் ஊடகத்திடம் பேசுகையில், “இந்தியாவில் ஆண்டுக்கு சராசரியாக ரூ.20,000 கோடி அளவிலான பட்டாசுகள் விற்பனையாகின்றன. இதில் தீபாவளி காலகட்டத்தில் மட்டும் 80 விழுக்காடு விற்பனை நடைபெறுகிறது. சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் விதமாக உச்ச நீதிமன்றம் தீபாவளியன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டுமென்று தீர்ப்பு விதித்துள்ளது. இந்தத் தீர்ப்பை நாங்கள் மதிக்கிறோம். இது சுற்றுச்சூழலைப் பாதுகாக்க நல்ல முடிவுதான். ஆனால் பட்டாசு விற்பனை சந்தை இதனால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த ஆண்டைக் காட்டிலும் 40 விழுக்காடு அளவுக்கு விற்பனை சரிந்துள்ளது.

பட்டாசு விற்பனை என்பது ஒரு சீசன் விற்பனையாகத்தான் உள்ளது. தீபாவளி விற்பனையை நம்பி லட்சக்கணக்கான குடும்பங்கள் உள்ளன. இந்த ஆண்டுக்கு மட்டும் விதிகளைத் தளர்த்த வேண்டுமென்று பட்டாசு விற்பனையாளர்களும், உற்பத்தியாளர்களும் உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தார்கள். ஆனால் அவர்களுக்கு உரிய பதில் கிடைக்கவில்லை. குறைந்த மாசுபாட்டை ஏற்படுத்தும் வகையிலான ஒரு விரிவான புதியக் கொள்கையை ஒன்றிய அரசு வகுக்க வேண்டியது அவசியமாக உள்ளது” என்றார். சீனாவிலிருந்து ஆண்டுக்கு ரூ.4,000 கோடி மதிப்பிலான பட்டாசுகள் இறக்குமதி செய்யப்படுவதும், உள்நாட்டு உற்பத்தியாளர்களைக் கடுமையாகப் பாதித்துள்ளது. எனவே சீன பட்டாசுகள் இறக்குமதியை வரும்காலங்களில் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்றும் பிரவீன் கண்டேல்வல் கூறினார்.

புதன், 7 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon