மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 28 ஜன 2021

புதுமடம் கொண்டாடிய சமத்துவ தீபாவளி!

புதுமடம் கொண்டாடிய சமத்துவ தீபாவளி!வெற்றிநடை போடும் தமிழகம்

தீபாவளி என்பது புராணம் சார்ந்த பண்டிகை, இந்துக்களுக்கான பண்டிகை என்றெல்லாம் பல தத்துவார்த்த விளக்கங்கள் சொல்லப்பட்டு வரும் நிலையில், மதங்களைத் தாண்டிய மனிதத்தை நிலைநாட்டும் வகையில் ‘சமத்துவ தீபாவளி’ பண்டிகையைக் கொண்டாடியிருக்கிறது ராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் புதுமடம் என்றதொரு கிராமம்.

கடற்கரை ஓர கிராமமான புதுமடத்தில் நேற்று தீபாவளி பண்டிகையன்று லட்டுகளும், சாக்லேட்டுகளும் வாங்கி பள்ளி, ஆட்டோ ஸ்டாண்ட், கடைகள், பொதுமக்கள் என்று பலருக்கும் கொடுத்து தீபாவளியைக் கொண்டாடுவதற்கு ஏற்பாடு செய்தவர் லெட்சம் என்கிற ஜெயினுலாபுதீன்.

தகவல் அறிந்து லெட்சத்தைத் தொடர்புகொண்டோம். அதென்ன சார் லெட்சம் என்று நாம் முதலில் கேட்க, “எங்க அப்பா-அம்மாவுக்கு பொறந்த பல குழந்தைங்க இறந்துபோயிடுச்சு சார். நான் பொறந்தவுடனே இவன் லெட்சத்துல ஒருத்தனா, லெட்சாதிபதியா வளரணும்னு வேண்டிக்கிட்டு வளர்த்தாங்க. என்னை லெட்சம் லெட்சம்னே கூப்பிட்டாங்க. அதனால எனக்கு இந்த பேரு” என்று சொன்ன லெட்சம் என்கிற ஜெயினுலாபுதீன் புதுமடம் பேருந்து நிலையத்தில் சிமென்ட் வியாபாரம் செய்கிறார். புதுமடம் கூட்டுறவு சங்கத்தின் துணைத் தலைவராகவும், புதுமடம் அரசு மேல்நிலைப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவராகவும் இருக்கிறார்.

“என்னை எங்க அம்மா கருவாடு வித்துதான் காப்பாத்தினாங்க. படிக்க வச்சாங்க. எல்லா சமூகத்தினரோடும் அன்பா, அனுசரனையா சகோதரனா பழகுறத்துக்குதான் கத்துக் கொடுத்திருக்காங்க. எங்க கிராமத்துல எல்லாருமே அப்படிதான்.

அந்த வகையிலதான் தீபாவளி அன்னிக்கு என்னோட பிஸ்மில்லா டிரேடர்ஸ் கடை வாசல்லதான் முதல்ல கொண்டாட்டத்தை ஆரம்பிப்போம். 500 லட்டு, ஆயிரம் சாக்லேட் வாங்கிக்குவேன். நம்மோட இந்து சகோதர்கள் மட்டுமல்ல முஸ்லிம், கிறிஸ்துவ சகோதரர்கள் எல்லாருக்கும் லட்டு- சாக்லேட் கொடுத்து தீபாவளி வாழ்த்துகளை பரிமாறிக்குவோம். அப்படித்தான் இந்த தீபாவளியையும் கொண்டாடிருக்கோம்.

தீபாவளி மட்டுமல்ல, கிறிஸ்துமஸ், ரம்ஜான் எல்லா பண்டிகையையும் எல்லா மதத்தினரும் கொண்டாடும் கிராமம்தான் புதுமடம்” என்று முடித்தார் லெட்சம்.

நல்ல விஷயம்!

புதன், 7 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon