மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 16 ஜன 2021

ஆசிரியர்களுக்கு பயோமெட்ரிக்: அரசாணை வெளியீடு!

ஆசிரியர்களுக்கு பயோமெட்ரிக்: அரசாணை வெளியீடு!

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பயோமெட்ரிக் முறையை அமல்படுத்துவதற்கான அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் 30ஆம் தேதியன்று நடந்த பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, அனைத்துப் பள்ளிகளிலும் ஆசிரியர்களுக்கு பயோமெட்ரிக் முறை கொண்டுவரப்படும் என்று சட்டமன்றத்தில் தெரிவித்தார் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன். இதையடுத்து, பெரம்பலூர் மாவட்ட அரசுப் பள்ளிகளிலும், போரூர் பெண்கள் மேல்நிலைப் பள்ளிலும் சோதனை அடிப்படையில் பயோமெட்ரிக் முறை செயல்படுத்தப்பட்டது.

இது குறித்து, இன்று (நவம்பர் 7) தமிழகப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் பயோமெட்ரிக் முறை அமல்படுத்துவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். “3,688 உயர்நிலைப் பள்ளிகள், 4,040 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 7,728 பள்ளிகளில் பயோமெட்ரிக் வருகைப் பதிவு முறை பொருத்தப்படவுள்ளது. இதற்காக 15 கோடியே 30 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பள்ளிகளுக்குக் கால தாமதமாக வருவதைத் தடுக்க முடியும். ஆசிரியர்களையும் கண்காணிக்க முடியும்” என்று கூறினார். மேலும், ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை அரசுப் பள்ளி மாணவர்களின் சீருடை மாற்றி அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.

மாணவர்களுக்கு 4 சீருடைகள் இலவசமாக வழங்கப்படும் என்றும், ஸ்மார்ட் வகுப்பறைகள் 3,000 பள்ளிகளில் தொடங்கப்படும் என்றும், செங்கோட்டையன் தன் பேச்சில் குறிப்பிட்டார்.

புதன், 7 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon