மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 15 டிச 2019

நவம்பர் 19: உர்ஜித் படேல் ராஜினாமா?

நவம்பர் 19: உர்ஜித் படேல் ராஜினாமா?

மத்திய அரசுடனான மோதல் போக்கு அதிகரித்துள்ளதால் ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் நவம்பர் 19ஆம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரிசர்வ் வங்கிக்கும், மத்திய அரசுக்கும் இடையே அண்மைக்காலமாக மோதல்போக்கு அதிகரித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தில் மத்திய அரசு தலையிடுவதாகவும், இது ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி உரிமையைப் பறிப்பதாகவும் இருப்பதாக சர்ச்சைகள் எழுந்துள்ளன. ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேலை மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி உள்ளிட்டோர் நேரடியாக விமர்சனமும் செய்தனர். ரிசர்வ் வங்கியின் உரிமைகளைக் கட்டுப்படுத்தும் விதமாக வங்கிச் சட்டப் பிரிவு 7ஐ மத்திய அரசு செயலாக்கம் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த மோதல் போக்குகளை அடுத்து ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் தனது பதவியை ராஜினாமா செய்யவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் ரிசர்வ் வங்கியின் வாரியக் கூட்டம் நவம்பர் 19ஆம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் உர்ஜித் படேல் தனது பதவியை ராஜினாமா செய்யலாம் என்று நிதியியல் சார்ந்த ஊடகமான மணி லைஃப் கூறியுள்ளது. ஆளுநரின் நெருங்கிய வட்டாரத்திலிருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இந்த செய்தியை வெளியிட்டுள்ளதாகவும் அந்த ஊடகம் தெரிவித்துள்ளது. அவருடைய உடல்நலம் பாதிக்கப்பட்டதாலும், அரசுடன் ஏற்பட்டுள்ள இடையூறுகள் காரணமாகவும் இந்த முடிவை உர்ஜித் படேல் எடுத்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த செய்தி குறித்து ரிசர்வ் வங்கி தரப்பில் இதுவரையில் எந்தவிதமான மறுப்பும் வெளியாகவில்லை. எனவே உர்ஜித் படேல் நவம்பர் 19ஆம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்துவிடுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

புதன், 7 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon