மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 11 ஜூலை 2020

வெளிநாடுகளில் இந்தியர்கள் மர்ம மரணம்!

வெளிநாடுகளில் இந்தியர்கள் மர்ம மரணம்!

வளைகுடா நாடுகளில் தினமும் 10 இந்தியர்கள் மரணம் அடைவதாக காமன்வெல்த் மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

பஹ்ரைன், ஓமன், கத்தார், குவைத், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட் ஆகிய அரபு நாடுகளில் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் பெருமளவில் வேலை செய்து வருகின்றனர். 2017ஆம் ஆண்டு நிலவரப்படி இந்த 6 நாடுகளிலும் 22 லட்சத்து 53 ஆயிரம் இந்தியர்கள் வாழ்ந்து வருவதாக, கடந்த ஆகஸ்ட் மாதம் மாநிலங்களவையில் நடந்த கேள்வி நேரத்தின்போது மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்தது.

காமன்வெல்த் மனித உரிமை எனும் தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த வெங்கடேஷ் நாயக் என்பவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் புகார் ஒன்றைத் தெரிவித்திருந்தார். அதில், அரபு நாடுகளில் பணிபுரியும் இந்தியர்களில் சராசரியாகத் தினமும் 10 பேர் மரணமடைவதாகக் குறிப்பிட்டிருந்தார். கடந்த 6 மாதங்களில் மட்டும் பல்வேறு காரணங்களால் இவர்கள் உயிரிழந்துள்ளதாகவும், இதனால் 2012ஆம் ஆண்டிலிருந்து 2018ஆம் ஆண்டு வரை அரபு நாடுகளில் உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை குறித்த விவரங்கள் வேண்டும் என கேட்டிருந்தார்.

இதைத் தொடர்ந்து மத்திய மனித உரிமைகள் மற்றும் பொதுநல அமைப்பு, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்திடம் இது தொடர்பான விவரங்களைத் தாக்கல் செய்யுமாறு கேட்டுக்கொண்டது. வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரியும் இந்தியர்களின் விவரங்கள், அங்குள்ள தூதரகங்கள் மூலம் சேகரிக்கப்பட்டன. 2012ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை, உலகம் முழுவதும் பாதிக்கப்பட்ட இந்தியப் பணியாளர்களின் குடும்பங்களுக்கான நிவாரண நிதியாக 410.33 பில்லியன் அமெரிக்க டாலர் வசூலிக்கப்பட்டது. அரபு நாடுகளில் மட்டும் 209.7 பில்லியன் டாலர் வசூலிக்கப்பட்டுள்ளது.

மக்களவை மற்றும் மாநிலளங்களையில் தாக்கல் செய்யப்பட்ட புள்ளிவிவரப்படி, 2012ஆம் ஆண்டு முதல் இதுவரை அரபு நாடுகளில் 24,570 இந்தியப் பணியாளர்கள் இறந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. “இந்த எண்ணிக்கை முழுமையானதாகத் தெரியவில்லை. இதைவிட அதிகமாகத்தான் இருக்கும். இந்த காலகட்டத்தில், தினந்தோறும் 10க்கும் மேற்பட்டோர் சராசரியாக மரணமடைந்துள்ளனர். கத்தார் நாட்டில் மட்டுமே மரணத்திற்கான காரணங்கள் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளன. இதில், 80 சதவிகிதம் இயற்கைக் காரணங்களால் ஏற்பட்டது. 14 சதவிகிதம் விபத்துக்களாலும், 6 சதவிகிதம் தற்கொலைகளாலும் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது” என்று வெங்கடேஷ் நாயக் கூறியுள்ளார்.

சர்வதேசத் தொழிலாளர் அமைப்பின் (ILO) 2018ஆம் ஆண்டுக்கான குடியேறுதல் குறித்த அறிவிப்பின்படி, இந்தியாவிலிருந்து சவுதி அரேபியாவுக்குச் செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை 47 சதவிகிதமாகவும், அரபு எமிரேட்ஸூக்குச் செல்பவர்களின் எண்ணிக்கை 29 சதவிகிதமாகவும் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதன், 7 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon