மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 7 ஜூலை 2020

ஜனார்த்தன ரெட்டி தலைமறைவு!

ஜனார்த்தன ரெட்டி தலைமறைவு!

நிதி நிறுவன மோசடி வழக்கில் கர்நாடகா முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டியை அம்மாநில போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அவர் தற்போது ஐதராபாத்தில் தலைமறைவாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கர்நாடகாவின் பெல்லாரி தொகுதியில் குறுநில மன்னர்களாக வலம் வருபவர்கள் ரெட்டி சகோதரர்கள். சுரங்கத் தொழிலில் முறைகேடாக ஈடுபட்டதாக 20014ஆம் ஆண்டு ஜனார்த்தன ரெட்டி கைது செய்யப்பட்டு 43 வாரங்கள் ஐதராபாத்தில் சிறைவாசம் அனுபவித்தார்.

உச்ச நீதிமன்றத்தில் போராடி ஜாமீன் பெற்று வெளியே வந்தார் ஜனார்த்தன ரெட்டி. பெல்லாரி தொகுதியை பாஜகவின் கோட்டையாகவும் வைத்திருந்தனர் ரெட்டி சகோதரர்கள். ஆனால் தற்போது நடைபெற்று முடிந்த இடைத் தேர்தலில் பெல்லாரி மக்களவைத் தொகுதியை காங்கிரஸிடம் பறிகொடுத்தது பாஜக.

தேர்தல் முடிவுகள் வெளியான மறுநாளே நிதி நிறுவன மோசடி வழக்கில் ஜனார்த்தன ரெட்டியை கர்நாடகா போலீசார் தேடி வருகின்றனர். இதனால் ஜனார்த்தன ரெட்டி தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டதாகவும் ஐதராபாத் உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வழக்கு என்ன?

கர்நாடகாவை அதிரவைத்தது அம்பிடண்ட் நிதி நிறுவன மோசடி. பொதுமக்களிடம் ரூ.200 கோடி வரை வசூல் செய்துவிட்டு ஏமாற்றிவிட்டது அம்பிடண்ட் நிறுவனம் என்பது புகார்.

இதனால் முதலீட்டாளர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர். இதையடுத்து அம்பிடண்ட் நிதி நிறுவன உரிமையாளர் சையது அகமது பரீத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் கைது செய்தனர். மேலும் அமலாக்கத்துறை அதிகாரிகளும் அம்பிடண்ட் நிறுவனத்தில் சோதனை நடத்தினர்.

பரீத்திடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஜனார்த்தன ரெட்டிக்கும் நிதி நிறுவன மோசடியில் பங்கு இருப்பது அம்பலமானது. நிதி நிறுவன மோசடி வழக்கில் இருந்து தமது நிறுவனத்தை விடுவிக்க உதவுமாறு ஜனார்த்தன ரெட்டியிடம் பரீத் பேரம் பேசியுள்ளார்.

இதற்காக 57கிலோ தங்கக் கட்டிகளை ஜனார்த்தன ரெட்டியின் என்னேபிள் இந்தியா நிறுவனத்துக்கு அம்பிடண்ட் நிறுவனம் கொடுத்திருக்கிறது. பரீத்தின் கூட்டாளி அலிகான் இந்த தங்க கட்டிகளை ஜனார்த்தன ரெட்டியின் நிறுவனத்தின் பெயரில் வாங்கியிருக்கிறார். இதற்காக பெல்லாரியைச் சேர்ந்த ராஜ்மஹால் ஜூவல்லரி உரிமையாளர் ரமேஷ் போலியான ரசீதுகளை தயார் செய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து அமலாக்கத் துறை அதிகாரி பிரிஜேஸ் என்பவரை கடந்த மார்ச் மாதம் தாஜ் வெஸ்ட் எண்ட் ஹோட்டலில் ஜனார்த்தன ரெட்டி சந்தித்து பேரம் பேசியுள்ளார். பரீத்தை வழக்கில் இருந்து விடுவிக்க ரூ.21 கோடி லஞ்சம் தருவதாக ஜனார்த்தன ரெட்டி கூறியதுடன் ரூ.1 கோடியை முதல் கட்டமாக கொடுத்தும் இருக்கிறார். பரீத்தின் செல்போனில் இது தொடர்பான புகைப்படங்கள் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. இவ்வழக்கில்தான் ஜனார்த்தன ரெட்டியை போலீசார் தேடி வருகின்றனர். இதனால்தான் ஜனார்த்தன ரெட்டி தலைமறைவாகிவிட்டார்.

புதன், 7 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon