மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 14 ஆக 2020

இடைக்காலத் தேர்தல்: ட்ரம்ப்பின் தோல்வி முகம்!

இடைக்காலத் தேர்தல்: ட்ரம்ப்பின் தோல்வி முகம்!

அமெரிக்கா இடைகாலத் தேர்தலில் பிரநிதிகள் சபையை ஜனநாயக கட்சி தனது கட்டுபாட்டிற்குள் கொண்டுவந்துள்ளது. இதன் மூலம் ட்ரம்ப்பின் கொள்கை முடிவுகளில் இனி தடைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

அமெரிக்க காங்கிரஸ் என்பது செனட் (மேலவை) மற்றும் பிரதிநிதிகள் சபை (கீழவை) என்ற இரு அவைகளைக் கொண்டது. இந்தியாவை போலவே சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க இந்த இரு சபைகளிலும் பெரும்பான்மை மிக முக்கியமானது. பிரதிநிதிகள் சபைக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. அதிபர் தேர்தலுக்கு முன்னதாகவே இந்த தேர்தல் நடைபெறுவதால் இடைக்கால தேர்தல் என இது கூறப்படுகிறது. மேலும் இந்த தேர்தல் அமெரிக்க அரசியலில் மிக முக்கியமானதாகவும் கருதப்படுகிறது.

காரணம், ஒருவேளை ஜனநாயக கட்சி ஏதேனும் ஒரு சபையில் ஆதிக்கம் பெற்றால் ட்ரம்ப்பின் அதிரடி கொள்கைகளுக்கு முட்டுக்கட்டை போடுவதுடன்,முந்தைய ஒபாமா அரசின் கொள்கைகளை தூசி தட்டி எடுக்கவும் ஜனநாயகக் கட்சியினர் முயல்வார்கள் என கூறப்படுகிறது.

வாக்குப் பதிவுகள் முடிந்த மாகாணங்களுக்கு அப்போதே எண்ணிக்கை தொடங்கப்பட்டு முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.

பெரும்பான்மையான இடங்களுக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் செனட் சபைக்கான போட்டியில் ஜனநாயக கட்சி 21 இடங்களிலும், குடியரசுக் கட்சி 9 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளது. இதன் மூலம் செனட்டில் குடியரசுக் கட்சிக்கு 51 உறுப்பினர்களும், ஜனநாயக கட்சிக்கு 45 உறுப்பினர்களும் உள்ளனர்.

ஆளுநர் பதவிக்கான தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பாக 12 உறுப்பினர்களும், குடியரசு கட்சியின் சார்பாக 16 உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

பிரதிநிதிகள் சபை தேர்தலில் டிரம்பின் குடியரசு கட்சி மோசமான சரிவை சந்தித்துள்ளது. மொத்தமுள்ள 435 இடங்களில் 222 ஜனநாயக கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். குடியரசு கட்சியின் 199 வேட்பாளர்களே வெற்றி பெற்றுள்ளனர்.

விசா கட்டுப்பாடு, குடியுரிமை கட்டுப்பாடு என அமெரிக்கர்களை முன் நிறுத்தி நிறைய திட்டங்களை டிரம்ப் வைத்திருந்தார். ஆனால் தற்போது பிரதிநிதி சபையில் ஜனநாயக கட்சியின் கைகள் ஓங்கி இருப்பதால், ட்ரம்ப்பின் திட்டங்களுக்கு முட்டுக்கட்டையாக இது அமையும்.

பெண் உறுப்பினர் எண்ணிக்கை உயர்வு

மேலும், அமெரிக்காவில் பெண்களின் அரசியல் பங்கெடுப்பு அதிகரித்துள்ளது. இந்த தேர்தலின் மூலம் சபைகளில் பெண்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. அமெரிக்கா தேர்தல் வரலாற்றில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இஹான் ஒமர் (37) மற்றும், ரஷிதா தாலிப் (42) ஆகிய இரண்டு இஸ்லாமியப் பெண்களும் வெற்றிபெற்றுள்ளனர்.

செனட்டில் பெரும்பான்மை பெற்றது குறித்து அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், "கடந்த 105 வருடங்களில் 5 முறை தான் அதிபர்கள் செனட் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர். இந்த வெற்றிக்குப் பல வெளிநாட்டு நண்பர்கள் முதற்கொண்டு வாழ்த்து சொல்லி வருகிறார்கள். வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பலர் நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள். தற்போது நமது வேலையை நாம் தொடருவோம்" எனப் பதிவிட்டுள்ளார்.

புதன், 7 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon