மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 3 ஜூலை 2020

சேனாபதியின் புதிய பயணம்!

சேனாபதியின் புதிய பயணம்!

கமல் ஹாசன் தனது பிறந்தநாளை இன்று கொண்டாடும் நிலையில் அவர் நடிக்கவுள்ள இந்தியன்-2 படம் குறித்த தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம்.

1996ஆம் ஆண்டு ஷங்கர் இயக்க கமல் நடித்திருந்த படம் இந்தியன். கோலிவுட்டில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய இப்படம் தற்போது இரண்டாவது பாகமாக உருவாகவுள்ளது. கமல் ஹாசனே இதில் நாயகனாக நடிக்கவுள்ளார். லைக்கா புரொடக்ஷன் இதைத் தயாரிக்கிறது. இப்படத்திற்காக அமெரிக்க உடற்பயிற்சியாளரிடம் பிரத்யேகமாக உடல் பயிற்சிகளும் மேற்கொண்டுவந்தார் கமல்.

கமல் அரசியல் வட்டாரத்திலும் ஷங்கர் 2.Oவிலும் பிஸியாக இருக்கும் நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு டிசம்பரில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் உருவாகவுள்ளது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தாலும் அது தொடர்பான எந்த புரொமோவும் தயாரிப்பு நிறுவனம் சார்பாக சமீபத்தில் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில் இன்று கமல் ஹாசனின் பிறந்த நாளுக்கு வாழ்த்துக் கூறும் விதமாக லைக்கா நிறுவனம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் இந்தியன் 2 குறித்த வீடியோவை இணைத்து வெளியிட்டுள்ளது. அதில் இந்தியனில் கமல் நடித்திருந்த சேனாபதி எனும் இந்தியன் தாத்தா கதாபாத்திரம் கிளைமாக்ஸ் காட்சியில் போன் பேசுவது போல முடிக்கப்பட்டிருந்த காட்சிகள் ஓடுகின்றன.

அதையடுத்து 'இந்தியன் 2 விரைவில்' எனும் வாசகமும் இடம்பெற்றுள்ளது. இந்தியன் 2 குறித்து சமீபத்தில் எந்த அப்டேட்டும் வெளிவராமல் இருந்த நிலையில் தயாரிப்பு நிறுவனமே தற்போது இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதால் கமல் ரசிகர்கள் உற்சாகமாகியுள்ளனர்.

மேலும் குறிப்பிட்ட இந்தக் காட்சிகள் மட்டும் வெளியிடப்பட்டிருப்பதால் அடுத்த பாகத்தின் துவக்க காட்சியே இந்தக் காட்சியாகத்தான் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

புதன், 7 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon