மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 13 ஆக 2020

தேர்தல் அதிகாரிக்கு எதிராக போராட்டம்!

தேர்தல் அதிகாரிக்கு எதிராக  போராட்டம்!

மிசோரம் மாநில தேர்தல் தலைமை அதிகாரியை மாற்ற கோரி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நேற்று முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தேர்தல் ஆணையம் தலைமை குழு வரும் வெள்ளிக்கிழமை (நவம்பர் 9) இந்த விவகாரம் குறித்து விவாதிக்க இருக்கிறது.

மிசோரம் மாநிலத்தில் வருகிற 28ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் தேர்தல் தலைமை அதிகாரி எஸ்.பி.சஷாங் தேர்தல் நடைமுறையில் கொண்டு வந்த மாற்றம் மக்களின் மத்தியில் எதிர்ப்பை கிளப்பியது. மேலும் அம்மாநில உள்துறை முதன்மை செயலாளர் லால்நன்மியா சாகுங்கோ தேர்தல் விவகாரங்களில் தலையிடுவதாக சஷாங் புகார் தெரிவித்ததையடுத்து பதவி நீக்கம் செய்ய மாநில அரசுக்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது.

இதனால் தன்னார்வ அமைப்புகள் மற்றும் மாணவர் அமைப்புகளின் மத்தியில் எழுந்த எதிர்ப்பால் திங்கள்கிழமை (நவம்பர் 5) மாநில தேர்தல் தலைமை அதிகாரி எஸ்.பி.சஷாங்கை மத்திய அரசு திரும்பி அழைத்துக் கொள்ளுமாறு பிரதமர் மோடிக்கு அம்மாநில முதல்வர் கடிதம் எழுதினார்.

எஸ்.பி.சஷாங் நவம்பர் 5ஆம் தேதிக்குள் பதவி விலகி, மாநிலத்தை விட்டு வெளியேற வேண்டும் என போராட்ட அமைப்புகள் வற்புறுத்தினர். ஆனால் அவர் பதவி விலகாமல் இருந்ததையடுத்து நேற்று முதல் (நவம்பர் 6) ஆயிரத்திற்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் அய்சால் நகரில் உள்ள தேர்தல் தலைமை அதிகாரி அலுவலகம் முன் திரண்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டத்திற்கு ஆளும் மாநில காங்கிரசும், பாஜகவும் ஆதரவு தந்துள்ளன. போராட்டம் தொடர்பாக தன்னார்வ அமைப்புகள் குழுவின் ஒருங்கிணைப்பாளர் தெரிவிக்கையில், "தேர்தல் ஆணையம் இன்னும் சஷாங்கை நீக்க எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை. மிசோரத்திலிருந்து எஸ்.பி.சஷாங்கை மாற்றும் வரையில் போராட்டம் தொடரும். மேலும் திரிபுரா நிவாரண முகாம்களில் உள்ள பிரூ வாக்காளர்கள் மிசோரமில் உள்ள அவர்களுக்கான வாக்குச்சாவடிகளில் தங்களது வாக்குகளை செலுத்த வேண்டும்" என கூறினார்.

இந்நிலையில், தேர்தல் ஆணையம் பேச்சுவார்த்தை குழு ஒன்றை அமைத்து போராட்டக்காரர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்தது. இது குறித்து தேர்தல் ஆணையத்தின் இயக்குநர் நிக்கில் குமார் கூறுகையில், "பேச்சுவார்த்தை நடந்துகொண்டு இருக்கிறது. தற்போது இரு தரப்பிற்கும் இடையே நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இரு தரப்பு கருத்துகளுக்கும் தகுந்த மதிப்பளிக்கப்படுகிறது. நாங்கள் அறிக்கையை தயார் செய்து வருகிறோம். அறிக்கை தலைமை ஆணையத்திடம் தரப்படும். அதன் பின் அவர்கள் முடிவு எடுப்பார்கள்" என்றார்.

போராட்டம் தீவிரமடைந்ததால் எஸ்.பி.சஷாங் டெல்லிக்கு வரவழைக்கப்பட்டுள்ளார். இது குறித்து அவர் தெரிவிக்கையில், "தேர்தல் ஆணைய பேச்சுவார்த்தை குழு உறுப்பினர்களுக்கும், போராட்டக்காரர்களுக்கும் மத்தியில் நிறைய விவகாரங்கள் விவாதிக்கப்படும் என்று நம்புகிறேன். நான் ஒரு அரசு ஊழியன். தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டால், தேர்தல் தலைமை அதிகாரியான என் பொறுப்பை நான் விடுவிக்கிறேன். என்னுடைய பொறுப்பை விட்டு வெளியேறவோ அல்லது விலகி விடவோ எனக்கு உரிமை இல்லை. அதை அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்" என்று தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து இன்று (நவம்பர் 7) இந்திய தலைமை தேர்தல் ஆணையம் மிசோரம் அரசாங்கத்திற்கு கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளது. அதில், சுமூகமான தேர்தல் நடைபெறுவதற்கு தேவைப்படும் நடவடிக்கையை எடுக்குமாறு தெரிவித்துள்ளது. மேலும், கடந்த 2 மாத கால கண்காணிப்பின் மூலம் தான் முதன்மை செயலாளரை நீக்கும் முடிவுக்கு வந்ததாக கூறியுள்ள ஆணையம், இந்திய தேர்தல் இணை ஆணையர் சுதீப் ஜெயின் தலைமையில் தேர்தல் ஆணையம் தலைமை குழு வரும் வெள்ளிக்கிழமை (நவம்பர் 9) மிசோரத்தில் இந்த விவகாரம் குறித்து விவாதிக்க இருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளது.

புதன், 7 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon