மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 14 ஜூலை 2020

3 தொகுதிகள்: ஸ்டாலினுக்கு நெருக்கடி!

3 தொகுதிகள்: ஸ்டாலினுக்கு  நெருக்கடி!

20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் எப்போது வரும் என்று இப்போது வரை தெரியாவிட்டாலும், அதிமுக பொறுப்பாளர்களை நியமித்து தேர்தலுக்குத் தயாராகிவிட்டது. அமமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளிலும் உண்ணாவிரதம் இருக்க முடிவெடுத்து வரும் 10 ஆம் தேதி அதை ஆண்டிப்பட்டியில் தொடங்குகிறார்.

இந்நிலையில் வலிமையான எதிர்க்கட்சியாக இருக்கும் திமுகவும் இந்த 20 தொகுதி இடைத்தேர்தலை எதிர்கொள்வது பற்றிய ஆலோசனைகளில் இறங்கிவிட்டது. இந்த 20 தொகுதிகளில் கலைஞரின் தொகுதியாக இருந்த திருவாரூரில், திமுகவின் வேட்பாளர் யார் என்பது அக்கட்சியினரிடையே அபரிமிதமான எதிர்பார்ப்பைத் தோற்றுவித்திருக்கிறது.

இது தவிர தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் 18 தொகுதிகளில் ஏற்கனவே ஆங்காங்கே 2016 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டவர்களுக்கே மீண்டும் சீட் கொடுக்கலாம் என்றும், புதுமுகங்களுக்குக் கொடுக்கலாம் என்றும் இருவேறு கருத்துகள் திமுகவில் நிலவுகின்றன.

2016 சட்டமன்றத் தேர்தலில் குறிப்பிட்ட இந்த 18 தொகுதிகளில் மூன்றில் திமுகவின் கூட்டணிக் கட்சிகள் போட்டியிட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத் தக்கது. ஆம்பூரில் மமகவும், சோளிங்கரில் காங்கிரஸும், பெரம்பூரில் பெருந்தலைவர் மக்கள் கட்சியும் திமுக அணி சார்பில் போட்டியிட்டன. இப்போது அந்த மூன்று தொகுதிகளையும் மீண்டும் தங்களுக்கே கொடுக்குமாறு அந்த மூன்று கட்சிகளும் திமுக தலைமையிடம் கேட்டுக்கொண்டிருக்கின்றன.

சில நாட்களுக்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், “பொதுத் தேர்தலில் போட்டியிட்டவர்களே இடைத்தேர்தலில் போட்டியிடுவது வழக்கம். முதலில் தேர்தல் அறிவிக்கப்படட்டும். திமுக தலைவர் ஸ்டாலினோடு கலந்துபேசி இறுதி முடிவு எடுக்கப்படும்” என்று கூறினார்.

18 தொகுதிகளில் சோளிங்கரில் மட்டும் கடந்த 2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட்டது. அக்கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஏ.எம். முனிரத்தினம் 67919 வாக்குகளை பெற்றிருந்தார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுகவின் என்.ஜி.பார்த்திபன் 77651 வாக்குகளை பெற்று வெற்றியடைந்தார்.இத்தொகுதியைத்தான் திருநாவுக்கரசர் மீண்டும் கேட்கிறார்.

அதேபோல பெரம்பூர் தொகுதியில் அப்போதைய அதிமுக வேட்பாளர் வெற்றிவேலிடம் வெறும் 519 வாக்குகள் வித்தியாசத்தில் மயிரிழையில் வெற்றியை இழந்தார் திமுக அணியில் போட்டியிட்ட பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர். தனபாலன். இவர், தானே மீண்டும் பெரம்பூரில் போட்டியிடுவதாகவும் இதுபற்றி ஸ்டாலினிடம் பேசப் போவதாகவும் அறிவித்திருக்கிறார்.

அதேபோல ஆம்பூர் தொகுதியில் மீண்டும் சீட் கேட்பீர்களா என்று மமக தலைவர் ஜவாஹிருல்லாவிடம் கேட்டோம். “விரைவில் எங்கள் கட்சியின் நிர்வாகக் குழு கூட இருக்கிறது. அதில் இதுபற்றி பேசி முடிவெடுப்போம்” என்றார் அவர்.

வருகிற நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள திமுகவுக்கு மெகா கூட்டணி தேவைப்படுகிறது. ஏற்கனவே தினகரன் தன்னுடன் சில கட்சிகள் கூட்டணி பற்றி பேசிவருவதாக கூறியிருப்பது திமுக அணியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் திமுக கூட்டணியில் ஏற்கனவே போட்டியிட்ட இம்மூன்று கட்சிகளும் அந்தத் தொகுதிகளை ஒதுக்குவதே கூட்டணியை சுமுகமாக கொண்டு செல்லும் வழி என்று கருதுகிறார்கள் திமுக நிர்வாகிகள்.

திமுக தலைவர் ஸ்டாலின் இதில் என்ன முடிவெடுக்கப் போகிறார் என்று கூட்டணிக் கட்சித் தலைவர்கள் காத்திருக்கிறார்கள்!

புதன், 7 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon