மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 7 ஜூலை 2020

உடல்தானம்: கமல்ஹாசன் வலியுறுத்தல்!

உடல்தானம்: கமல்ஹாசன் வலியுறுத்தல்!

தனது பிறந்தநாளை முன்னிட்டு உடல்தானம் குறித்து வலியுறுத்தி, கமல்ஹாசன் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசனுக்கு இன்று பிறந்தநாள். 64 வயதை நிறைவுசெய்யும் அவருக்குப் பல்வேறு தரப்பினரும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துவருகின்றனர். தனது பிறந்த நாளை உடல் உறுப்பு தானம், ரத்த தானம், மருத்துவப் பணிகளை செய்து கொண்டாட வேண்டும் என்று கட்சியினருக்கு கமல்ஹாசன் வலியுறுத்தியிருந்தார்.

இந்த நிலையில் பிறந்தநாளை முன்னிட்டு கவிதை ஒன்றை தனது குரலில் பதிவு செய்து அதனை ஆடியோ வடிவில் வெளியிட்டுள்ளார் கமல்ஹாசன். உடல் தானம் குறித்து அதில் இடம்பெற்றுள்ள வரிகள் பின்வருமாறு....

தாயாய் மாற அழகுக் குறிப்பு...

மண்ணில் புதையவும் தீயில் கரியவும்

சொர்க்கம் செல்ல... உடலைப் போற்றி புழுக்க விடுவதும்

எத்தகைய நியாயம்! ஏது, இதில் லாபம்.

எனக்குப் பின்னால், எலும்பும் தோலும் உறுப்பும் எல்லாம்...

எவருக்கேனும் உயிர் தரும் என்றால்...

அதுவே சித்தி; அதுவே மோட்சம் என்றே நம்பும் சொர்க்கவாசி நான்.

மனிததோல் பதினைந்து கஜத்தில், ‘ஏழு ஜோடி செருப்புகள்’ தைத்தால்

அவை அத்தனையும் என்னைச் சொர்க்கம் சேர்க்கும்.

காண இன்பம் தொடர்ந்து காண்போம்; கண்ணைப் பிறரும் காணக் கொடுத்தால்.

காற்றடைத்த பையின் இடத்தில், இன்னொரு உயிரை வாழவிட்டால்...ஆணாய் பிறந்த சோகம் போக்கி, தாயாய் மாறத் தேர்ந்துவிடலாம்.

மண்ணில் புதையவும் தீயில் கரியவும்

சொர்க்கம் செல்ல... உடலைப் போற்றி புழுக்க விடுவதும்

எத்தகைய நியாயம். ஏது இதில் லாபம்!

தானம் செய்வது தாய்மை நிகரரே!

தகனம் செய்முன் தானம் செய்வீர்!

இவ்வாறு இடம்பெற்றுள்ளது.

மேலும் உடல் உறுப்பு தானம் செய்வதற்கான இணையதள முகவரியும் மக்கள் நீதி மய்யத்தின் ட்விட்டர் பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளது. உடல் தானம் செய்த பிறகு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிக்கலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதன், 7 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon