மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 13 ஜூலை 2020

ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய மோடி

ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய மோடி

உத்தராகண்டில் எல்லைப் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி தீபாவளியை இன்று (நவம்பர் 7) கொண்டாடினார்.

இந்தியாவின் பிரதமராகப் பொறுப்பேற்றதிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையை ராணுவ வீரர்களுடன் மோடி கொண்டாடிவருகிறார். கடந்த 2014ஆம் ஆண்டு பதவியேற்ற மோடி அந்த ஆண்டு தீபாவளியை காஷ்மீரில் ராணுவ வீரர்களுடன் கொண்டாடினார். 2015ஆம் ஆண்டு பஞ்சாபில் இந்திய- பாகிஸ்தான் எல்லையில் ராணுவ வீரர்களுடனும் கடந்த ஆண்டு இமாசலப் பிரதேச எல்லையில் உள்ள ராணுவ வீரர்களுடனும் தீபாவளியைக் கொண்டாடினார். 2017ஆம் ஆண்டு காஷ்மீரின் பண்டிபோரா மாவட்டத்தில் உள்ள குரூஸ் முகாமிற்குச் சென்று கொண்டாடினார்.

இந்த ஆண்டு தீபாவளியை உத்தராகண்டில் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி கொண்டாடினார்.

உத்தராகண்டின் கேதர்நாத்திற்கு இன்று சென்ற அவர், அங்குள்ள சிவன் கோயிலில் வழிபாடு நடத்தினார். பின்னர் ஹர்சில் பகுதிக்கு சென்ற அவர், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவ மற்றும் இந்தோ திபெத் எல்லை போலீசாருடன் தீபாவளியை கொண்டாடினார். அவர்களுக்கு இனிப்புகளையும் வழங்கினார்.

ராணுவ வீரர்கள் தங்களின் அர்ப்பணிப்பு மூலம் மக்கள் மத்தியில் பாதுகாப்பு, அச்சமின்மையைப் பரப்புகின்றனர் என்று ராணுவ வீரர்கள் மத்தியில் பேசிய பிரதமர், குஜராத் முதல்வராக இருந்ததிலிருந்தே ராணுவ வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாடிவருவதாகத் தெரிவித்தார். பாதுகாப்புத் துறையில் இந்தியா முன்னேறிவருவதாகவும் அவர் பெருமிதமாகக் குறிப்பிட்டார். இந்திய ஆயுதப் படை உலகின் புகழையும் பாராட்டுகளையும் பெற்றுவருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

புதன், 7 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon