மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 12 ஜூலை 2020

பணமதிப்பழிப்பு: மக்கள் என்ன சொல்கிறார்கள்?

பணமதிப்பழிப்பு: மக்கள் என்ன சொல்கிறார்கள்?

பணமதிப்பழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இன்றோடு (நவம்பர் 7) 2 ஆண்டுகள் முடிவடைகிறது. இந்நிலையில் இந்த நடவடிக்கையைப் பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்ற ஆய்வறிக்கையை லோக்கல் சர்க்கிள்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

2016 நவம்பர் 8ஆம் தேதி எல்லோருக்கும் நினைவிருக்கும். அதற்கு முந்தைய நாள் இரவு தொலைக்காட்சிகளின் வழியாக மக்களிடம் பேசிய பிரதமர் மோடி, நாட்டில் உள்ள கறுப்புப் பணத்தை ஒழிக்க புழக்கத்திலுள்ள 500 மற்றும் 1,000 ரூபாய் தாள்களை அரசு திரும்பப் பெற்றுக்கொள்வதாகவும், நள்ளிரவு 12 மணிக்கு மேல் (நவம்பர் 8) 500 மற்றும் 1000 ரூபாய் தாள்கள் செல்லாது என்றும் அறிவித்தார். அப்போது புழக்கத்தில் இருந்த ஒட்டுமொத்த பணத்தில் 86 விழுக்காடு 500 மற்றும் 1,000 ரூபாய் தாள்கள்தான். இந்த நடவடிக்கையால் நடுத்தர வர்க்கமும், ஏழை எளிய மக்களும் கடும் அவதிக்குள்ளாகினர். நாட்டின் நன்மைக்காக, கறுப்புப் பணத்தை ஒழிக்கும் நடவடிக்கைக்காக மக்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள துயரங்களைப் பொறுத்துக்கொள்ள வேண்டுமென்று மோடி கேட்டுக்கொண்டார்.

இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இன்றோடு 2 ஆண்டுகள் முடிகிறது. மக்களின் துயரங்களுக்கு பதிலளிக்கும் விதமாக எவ்வளவு கறுப்புப் பணம் ஒழிக்கப்பட்டது என்பதைப் பற்றி இன்னமும் மோடி தனது வாயை திறக்கவேயில்லை. அதற்கு மாற்றாக டிஜிட்டல் பரிவர்த்தனையை அதிகரித்துவிட்டோம் என்கின்றனர். ஆனால் ரொக்கப் பணப் பரிவர்த்தனையும் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்துவிட்டது என்பதைப் பேச மறுக்கிறார்கள். இந்நிலையில் 2 ஆண்டுகளில் மீண்டும் கறுப்புப் பணம் பெருமளவில் புழக்கத்திற்கு வந்து விட்டதாக மக்கள் லோக்கல் சர்க்கிள்ஸ் ஆய்வில் கூறியுள்ளனர்.

பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்குப் பிறகு கறுப்புப் பணம் ஒழிந்துவிட்டதா? அதிகரித்துவிட்டதா? உள்ளிட்ட சில கேள்விகளை மையப்படுத்தி லோக்கல் சர்க்கிள்ஸ் இந்த ஆய்வை மேற்கொண்டது. சுமார் 215 மாவட்டங்களில் 15,000 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் பதிலளித்த 60 விழுக்காடு மக்கள் பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்குப் பிறகு மீண்டும் கறுப்புப் பணம் அதிகமாக உருவாகித்தான் உள்ளது, குறையவில்லை என்று பதிலளித்துள்ளனர். 17 விழுக்காடு மக்கள் மட்டுமே கறுப்புப் பணம் குறைந்துள்ளது என்று கூறியுள்ளனர். 16 விழுக்காட்டினர் எந்த மாற்றமும் இல்லை என்று கூறியுள்ளனர். 7 விழுக்காட்டினர் எந்தப் பதிலையும் கூறவில்லை.

அதேசமயத்தில் பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்குப் பிறகு வரி ஏய்ப்பு செய்தவர்கள் வரி வளையத்திற்குள் அதிகமாக இணைந்துள்ளதாக 40 விழுக்காட்டினரும், பணமதிப்பழிப்பு திட்டத்தால் எந்தப் பயனும் ஏற்படவில்லை என்று 13 விழுக்காட்டினரும், நேரடி வரி வசூல் அதிகரித்துள்ளதாக 23 விழுக்காட்டினரும் கூறியுள்ளனர். இப்போதும் கூட பில் இல்லாமல் எளிதாகப் பொருட்கள் வாங்க இயல்வதாக 39 விழுக்காட்டினர் கூறியுள்ளனர். கட்டுமானத் துறையில் பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்கு முன்பு எந்த அளவுக்கு கறுப்புப் பணம் புழங்கியதோ அதே அளவுக்கு தற்போதும் கறுப்புப் பணம் புழங்குவதாக இந்த ஆய்வு கூறியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், மோடியின் கறுப்பு பண ஒழிப்பு நடவடிக்கை போலியானது அல்லது வீணானது என்பதைக் காட்டும் விதமாகவே பெரும்பான்மை மக்களின் பதில்கள் வெளிப்பட்டுள்ளது.

-பிரகாசு

புதன், 7 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon