மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 12 ஜூலை 2020

பட்டாசு வழக்குகள்: மார்க்சிஸ்ட் எதிர்ப்பு!

பட்டாசு வழக்குகள்: மார்க்சிஸ்ட் எதிர்ப்பு!

தீபாவளி தினத்தில் நேரக்கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

தென்னிந்தியா முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. பட்டாசுகள் வெடிப்பதற்கு நேரக்கட்டுப்பாடுகள் விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், தமிழகத்தில் காலை 6 மணி முதல் 7 மணி வரையும், மாலை 7 முதல் 8 வரையும் பட்டாசு வெடிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்தது. நேரக்கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக தமிழகம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நவம்பர் புரட்சியை முன்னிட்டு இன்று (நவம்பர் 7) சென்னை தி.நகரிலுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகத்தில் கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கொடியேற்றினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பட்டாசு வெடித்ததாக சாதாரண வீட்டுப் பிள்ளைகள் மீது, அவர்களின் பெற்றோர்கள் மீது வழக்குப் பதிவு செய்திருப்பது அவசியமற்ற ஒன்று. உச்ச நீதிமன்றம் பட்டாசு விவகாரம் குறித்து தீர்ப்பளித்தது என்னவோ உண்மைதான். அதற்காக வழக்குப் போடுவது, நீதிமன்றத்திற்கு அழைப்பது, 1000 ரூபாய் அபராதம் விதிப்பது அல்லது 6 மாத சிறை தண்டனை விதிப்பது அவசியமானதல்ல. நாட்டில் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. ஆத்தூரில் ராஜலட்சுமி என்னும் சிறுமி கொடூரமாக கொல்லப்பட்டிருக்கிறார், புதுக்கோட்டையில் ஒரு பெண் மோசமாக கொலை செய்யப்பட்டிருக்கிறார், மெரினாவில் பெண்ணின் உடல் அடையாளம் தெரியாமல் சிதைக்கப்பட்டிருக்கிறது. இந்த தாக்குதல்களுக்கெல்லாம் நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக, வெடிவெடித்தார்கள் என்பதற்காக குழந்தைகள் மீது வழக்குப் போடுவது என்பது கேலிக்குரியதாக உள்ளது” என்று விமர்சித்தார்.

மேலும், “தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து மக்கள் பிரச்னைகளுக்காக போராடிவருகிறோம். தற்போது அரசியலுக்கு வந்துள்ள புதியவர்கள் எதிர்காலத்தில் மக்கள் பிரச்னை குறித்து என்ன நிலைப்பாடு எடுப்பார்கள் என்று தெரியாது. எனவே புதிதாக ஒருவர் அழைக்கிறார் என்பதற்காக கூட்டணிக்கு செல்லும் வாய்ப்புகள் எதுவும் இல்லை. பாஜக, அதிமுகவை முறியடிப்பதே எங்களுடைய முதல் பணி” என்றும் அவர் தெரிவித்தார்.

புதன், 7 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon