மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 13 ஆக 2020

சபாஹர் துறைமுக பணி- இந்தியாவுக்கு யு.எஸ். அனுமதி!

சபாஹர் துறைமுக பணி- இந்தியாவுக்கு யு.எஸ். அனுமதி!

ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ள அமெரிக்கா அந்நாட்டின் சபாஹர் துறைமுகத்தில் இந்தியா மேற்கொண்டு வரும் அபிவிருத்தி பணிகளுக்கு அனுமதி அளித்திருக்கிறது.

ஈரான் மீதும் அந்நாட்டுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீதும் 2015 அணு ஆயுத ஒப்பந்தப்படி நீக்கப்பட்ட தடைகளை அமெரிக்கா மீண்டும் விதித்திருக்கிறது. அதே நேரத்தில் ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு இத்தடையில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாகவும் அமெரிக்கா தெரிவித்திருக்கிறது.

இதனிடையே ஈரானின் சபாஹர் துறைமுகத்தில் இந்தியா மேற்கொண்டு வரும் அபிவிருத்தி பணிகளுக்கும் தடையில் இருந்து அமெரிக்கா விலக்கு அளித்திருக்கிறது. இது தொடர்பாக அமெரிக்கா வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ஈரானின் சபாஹர் துறைமுகத்தில் இருந்து ஆப்கானிஸ்தானுக்கு பொருட்களை எடுத்துச் செல்ல விலக்கு அளிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

சபாஹர் துறைமுகத்தின் முக்கியத்துவம்

பாகிஸ்தானின் கவ்தார் துறைமுகத்தை சீனா கையகப்படுத்தி உள்ளது. இத்துறைமுகத்தில் இருந்து சீனாவின் பிற பகுதிகளை இணைக்கும் ரயில் பாதை பலுசிஸ்தானத்தின் வழியாக மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

கவ்தார் துறைமுகத்தை சீனா கைப்பற்றியிருப்பதன் மூலம் அரபிக் கடலில் சீனாவின் கை ஓங்கும் நிலை இருந்து வந்தது. மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து சீனாவின் எண்ணெய் கப்பல்களுக்கு பாதுகாப்பை ஏற்படுத்தும் நோக்கத்திலும் கவ்தார் துறைமுகத்தை தன் வசப்படுத்தியிருந்தது.

இதனைத் தொடர்ந்து ஈரானின் சபாஹர் துறைமுகத்தை இந்தியா கையில் எடுத்தது. இது கவ்தார் துறைமுகத்தின் மிக அருகில் இருக்கிறது.

இத்துறைமுகத்தை கையில் எடுத்ததன் மூலம் ஆப்கானிஸ்தானில் மேற்கொண்டு வரும் பல்வேறு பணிகள் இந்தியாவுக்கு எளிதாகியது. மேலும் அரபிக் கடலில் சீனாவுக்கு ‘செக்’ வைக்கும் ராஜதந்திர நடவடிக்கையாகவும் இது கருதப்பட்டது.

இதனால் சபாஹர், கவ்தார் துறைமுகங்கள் சர்வதேச அரசியலில் பிரதான இடம் பிடித்தன. இந்த நிலையில் சபாஹர் துறைமுகப் பணிகளில் இந்தியாவுக்கு அமெரிக்கா விலக்கு அளித்திருப்பது முக்கியமான ஒரு நகர்வாக கருதப்படுகிறது.

புதன், 7 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon