மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 13 ஜூலை 2020

இருமொழித் திறன்: அசத்தும் இளைய தலைமுறை!

இருமொழித் திறன்: அசத்தும் இளைய தலைமுறை!

இந்தியாவில் நகரங்களில் வசிக்கும் இளைஞர்களில் 52 சதவிகிதம் பேர் இரண்டு மொழியைத் தெரிந்து வைத்திருப்பது புள்ளிவிவரங்கள் மூலமாகத் தெரிய வந்துள்ளது.

இன்றைய காலத்தில், தாய்மொழியை விட மற்ற மொழிகளையும் கற்றுக்கொள்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர் மக்கள். அதனால், ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகளைக் கற்றுக் கொள்கின்றனர். இந்தியாவில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்போது இனம், மொழி, மதம், வேலைவாய்ப்பு, பொருளாதார நிலை உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. அதன்படி, 2011ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பில், மொழி குறித்துச் சேகரிக்கப்பட்ட விவரங்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

அதில், நகரத்தில் வசிக்கும் 15 வயது முதல் 49 வயதுக்குட்பட்டவர்களில் 50 சதவிகிதத்துக்கும் அதிகமானோர் இரு மொழிகளைப் பேசுவதாகவும், கிராமப்புறங்களில் உள்ளவர்களில் 15 - 49 வயதுக்குட்பட்டவர்களில் 25 சதவிகிதம் பேர் இரு மொழி பேசுபவர்களாக இருப்பதாகவும் அந்த புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 25 சதவிகிதத்தினர் இரு மொழி பேசுபவர்களாகவும், 7 சதவிகிதத்தினர் மூன்று மொழி பேசுபவர்களாகவும் இருக்கின்றனர். நகரத்தில் 44 சதவிகித்தினர் இரு மொழிகளைப் பேசுகின்றனர்; 15 சதவிகித்தினர் மூன்று மொழிகள் பேசுகின்றனர். கிராமப்புறங்களில் 22 சதவிகிதத்தினர் இருமொழி பேசுபவர்களாகவும், 7 சதவிகிதம் பேர் மூன்று மொழி பேசுபவர்களாகவும் இருக்கின்றனர். 15 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் தான் இரண்டு, மூன்று மொழிகளைப் பேசுவதில் வித்தியாசங்கள் இருக்கின்றன. இந்த வயதினர் வேலை மற்றும் படிப்பு காரணமாக வேறு இடங்களுக்குச் சென்று அங்குள்ள மொழிகளைக் கற்றுக்கொள்கின்றனர்.

நாட்டின் மக்கள்தொகையில் 20 - 24 வயதுக்குட்பட்டவர்களே அதிக அளவில் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளைப் பேசுகின்றனர். கிராமப்புறங்களில் பெண்களை விட ஆண்களே அதிக அளவில் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளைத் தெரிந்து வைத்துள்ளனர். மாறாக, நகரத்தில் பாலின வேறுபாடு மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தவில்லை என்று தெரிவிக்கிறது இப்புள்ளிவிவரம்.

புதன், 7 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon