மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 12 ஜூலை 2020

சத்தீஸ்கர்: 62 நக்சலைட்கள் சரண்!

சத்தீஸ்கர்: 62 நக்சலைட்கள் சரண்!

சத்தீஸ்கர் மாநிலத்தின் நாராயணப்பூர் மாவட்டத்தில் 62 நக்சலைட்கள் நேற்று (நவம்பர் 6) சரணடைந்தது அரசின் மாபெரும் வெற்றி என அம்மாநில முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

நக்சலைட்களின் ஆதிக்கம் நிறைந்த மாநிலங்களில் ஒன்றான சத்தீஸ்கரில் வருகிற நவம்பர் 12 மற்றும் 20ஆம் தேதிகளில் இரு சுற்றுகளாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. தற்போது அங்கு ராமன் சிங் தலைமையிலான பாஜக அரசு நடந்து வருகிறது. இவரது தலைமையிலான அரசு, தனிப்படை அமைத்து மிகத் தீவிரமாக நக்சலைட்கள் ஆக்கிரமிப்பு பகுதிகளில் தாக்குதலை நடத்தி வருகிறது.

இதற்குப் பதிலடி தரும் வகையில் நக்சலைட்களும் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இவர்களின் தாக்குதலில் இதுவரை நிறைய பாதுகாப்புப் படைவீரர்கள் இறந்துள்ளனர். 2010ஆம் ஆண்டு 6 பேர் கொண்ட குழுவால் மிகப் பெரிய தாக்குதலை நக்சலைட்கள் நடத்தினர். இதில் 50க்கும் மேற்பட்ட போலீசார் உயிரிழந்தது கடந்த கால வரலாறு.

தேர்தல் நெருங்கிவரும் தருணத்தில், கடந்த அக்டோபர் 30ஆம் தேதி தந்தேவாடா பகுதியிலுள்ள அரன்பூரில் நக்சலைட் நடத்திய தாக்குதலில் தூர்தர்சன் ஒளிப்பதிவாளரும் இரண்டு பாதுகாப்புப் படை வீரர்களும் உயிரிழந்தனர்.

தற்போது முதல்கட்ட தேர்தல் நடைபெற இருக்கும் பாஸ்டர், நாராயணப்பூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 62 நக்சலைட்டுகள் தங்கள் வசமிருந்த 51 துப்பாக்கிகளோடு பாஸ்டர் மாவட்ட ஐஜி விவேகானந்த் சின்ஹா, நாராயணப்பூர் எஸ்பி ஜிதேந்திர சுக்லா ஆகியோர் முன்னிலையில் நேற்று (நவம்பர் 6) சரணடைந்தனர்.

இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், "இடதுசாரி தீவிரவாதத்திலிருந்து நிறைய போராளிகள் ஆயுதங்களோடு சரணடைந்திருப்பது மிக்க மகிழ்ச்சியான இருக்கிறது” எனத் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அம்மாநில முதலமைச்சர் மற்றும் காவல் துறைக்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.

அம்மாநில முதலமைச்சர் ராமன் சிங் தெரிவிக்கையில், "இடதுசாரி தீவிரவாதிகள் சரணடைந்திருப்பது மாநிலத்தின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். இது சத்தீஸ்கர் மாநிலத்தின் பாதுகாப்புச் சூழலை மாற்றியமைக்க உதவும். இவர்கள் சரணடைந்தது மாநில அரசின் கொள்கைக்குக் கிடைத்த வெற்றி. இதேபோல மற்ற இயக்கங்களும் வன்முறையை விட்டுவிட்டு எங்களோடு இணைய வேண்டும்" என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

செவ்வாய், 6 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon