மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 4 ஜூலை 2020

சினிமாவுக்கான கச்சாப் பொருளா ‘அரசியல்’?

சினிமாவுக்கான கச்சாப் பொருளா  ‘அரசியல்’?

சர்கார் திரைப்படம் - ஓர் அலசல்

மதரா

தமிழ்நாட்டு அரசியலுக்கு முதல்வர் வேட்பாளர்களை அடுத்தடுத்து தமிழ் சினிமா உற்பத்தி செய்து அனுப்பிவருகிறது. இந்தப் பட்டியலில் அடுத்ததாக விஜய்யின் பெயரும் அடிபடும் நிலையில் அவர் நடிப்பில் வெளியாகியுள்ள சர்கார் திரைப்படம் டைட்டிலில் இருந்தே அரசியல் பேசுகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள சர்கார் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

அமெரிக்காவிலிருந்து ஓட்டு போடுவதற்காகச் சென்னை வருகிறார் சுந்தர் ராமசாமி (விஜய்). பிரபல நிறுவனம் ஒன்றின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் அவரது ஓட்டு கள்ள ஓட்டாகப் போடப்பட்டுள்ளது தெரியவருகிறது. லட்சங்கள் செலவழித்து சட்டப் போராட்டம் நடத்தி தனது ஓட்டை மீட்கிறார். அவரது நடவடிக்கை மூலம் ஒவ்வொரு தொகுதியிலும் ஆயிரக்கணக்கானோர் தங்கள் ஓட்டும் கள்ள ஓட்டாகப் போடப்பட்டதாகக் கிளம்ப, மூன்றாவது முறையாக மாசிலாமணி (பழ.கருப்பையா) முதல்வராக முடியாமல் போகிறது. அதற்குக் காரணமானவரைப் பழிவாங்க முயல, சுந்தரின் கவனமோ அரசியலில் திரும்புகிறது. பணத்துக்கு வாக்களிக்கும் கூட்டமாக மக்களை மாற்றிவைத்திருக்கும் அரசியல் தலைவர்களை எதிர்த்து மக்கள் செல்வாக்குடன் தேர்தலில் வெற்றி பெற முயல்கிறார் சுந்தர். அதில் அவர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் என்ன, அவரது முயற்சி பலனளித்ததா என்ற பாதையில் திரைக்கதை பயணிக்கிறது.

சமூக வலைதளங்கள் வாயிலாகவும் தங்களுக்குள் நேரடியாகப் பேசிக்கொள்ளும்போதும் அரசியல் பேச்சுகள் மக்கள் மத்தியில் முன்பைவிட காத்திரமாக உள்ளன. சமூக வலைதளங்களின் ஆதிக்கம், தமிழகத்தில் பிரதான இரு கட்சிகளின் தலைவர்கள் மறைவு, வெளிப்படையாக நடைபெறும் அரசியல் நாடகங்கள், அரசியல் தலைவர்களின் மக்கள் எதிர்ப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் அனைத்துத் தரப்பு அரசியல்வாதிகளும் விமர்சிக்கப்படுகின்றனர். ஊடகங்கள் மறைத்தாலும் இணையம் வாயிலாக மக்கள் போராட்டங்கள் கவனம் பெறத் தொடங்கியுள்ளன. அரசியல்வாதிகள் தங்கள் நிலைப்பாட்டை முன் பின் மாற்றிச் சொல்வது இருபத்தி நான்கு மணி நேரமும் இணையத்தில் இருப்பவர்களால் உடனடியாக விமர்சிக்கப்படுகிறது.

இந்த மாற்றங்களைக் கடந்த இரு ஆண்டுகளில் வெளியான பல படங்களில் காண முடிகிறது. படங்கள் எதை மையமாகக் கொண்டு உருவாகினாலும் அரசியல் கூத்துகளைக் கலாய்க்கும் தொனியில் ஒரு வசனத்தையாவது வைத்துக் கைதட்டல் வாங்குகின்றன. இந்த நிலையில் அரசியல் பிரச்சினைகளையே மையமாகக்கொண்டு உருவாகும் படங்கள் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கின்றன.

விஜய் நடிக்கும் படங்கள் என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்துத் தரப்பு மக்களும் ரசிக்கின்ற வகையில் உருவாகும். காமெடி, ஆக்‌ஷன், பஞ்ச் வசனங்கள் கட்டாயம் இடம் பெறும். சர்கார் திரைப்படம் முழுக்க அரசியல் பிரச்சினைகளைப் பேசுகின்ற படமாக இருந்தாலும் இவற்றுக்கான இடமும் திரைக்கதையில் உள்ளது. அதிரடி திருப்பங்கள், சமகால அரசியல் பிரச்சினைகள் எனப் பார்வையாளர்கள் எளிதில் படத்தோடு ஒன்ற முடிகிறது. அடுத்தடுத்து வரும் திருப்பங்கள், கூர்மையான வசனங்கள் ஆகியவற்றுடன் படம் சுவாரஸ்யமாக நகருகிறது.

முழுக் கதையும் விஜய்யின் கதாபாத்திரத்தைச் சுற்றியே அமைக்கப்பட்டுள்ளது. கதாபாத்திரத்திற்கேற்ற நடிப்பை விஜய் வழக்கம் போல் அளித்துள்ளார். ஆனால் பிரச்சினைகளில் அவரது கதாபாத்திரம் எடுக்கும் முடிவுகள் வலுவாக உருப்பெறவில்லை. அசாத்தியமான ஆற்றல் கொண்ட பெரு நிறுவனம் ஒன்றின் தலைமை செயல் அதிகாரி என்பது நாயகன் விஜய்யின் கதாபாத்திரம். கார்ப்பரேட் கம்பெனிகளின் தந்திரங்கள் அறிந்த, தொழில்நுட்பத்தில் மிகவும் தேர்ச்சியடைந்த, பெரும் பணபலம் கொண்ட, சர்வதேச அளவில் முக்கியப் புள்ளிகளுடன் தொடர்புகள் உள்ள ஒரு நபராக அந்தக் கதாபாத்திரத்தின் தன்மைகளைப் புரிந்துகொள்ளலாம்.

அவர் ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் அரசியலில் உள்ள, மூன்றாவது முறையாக முதல்வராகப் போகிற, பெரும் தொண்டர் படையைக் கொண்டுள்ள ஓர் அரசியல்வாதியை எதிர்க்கிறார். இருவரும் தங்களுக்குள்ள வாய்ப்புகளைப் பயன்படுத்தி பரஸ்பரம் மோதிக்கொள்வதுதான் திரைக்கதையின் சாராம்சம். போட்டி நிறுவனங்களை அந்தந்த நாட்டுக்கே சென்று அழித்தொழிப்பதில் வல்லவர் என்று நாயகன் விஜய் பற்றிய தகவல் பல முறை சொல்லப்படுகிறது. ஆனால், அவரது கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்யும்படியாக காட்சிகள் அமைக்கப்படவில்லை. ட்விட்டர் அக்கவுன்ட்டை ஹேக் செய்து பதிவிடுவது தவிர அந்தக் கதாபாத்திரம் குறித்து கட்டமைத்த பிம்பங்களைக் காட்சிகளின் மூலம் விளக்கவில்லை.

நூற்றுக்கணக்கானோர் இருந்தாலும் தனியாளாகப் போய் எதிரிகளை அடித்து நொறுக்குவது போன்ற வழக்கமான கமர்ஷியல் கதாநாயகனாகவே விஜய் வருகிறாரே தவிர, சுந்தர் ராமசாமி என்ற கார்ப்பரேட் மூளை கொண்ட கதாபாத்திரத்தின் தன்மைகள் எந்த இடத்திலும் வெளிப்படவில்லை. க்ளைமாக்ஸில் ஏற்படும் மிகப்பெரிய திருப்பத்திலும் நாயகனின் பங்கு சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. புதிதாக ஒரு கதாபாத்திரம் தோன்றியும், எதிர்த் தரப்பிலிருந்து மனம் மாறி ஒருவர் வந்தும்தான் நாயகனை வெற்றிபெற வைக்க வேண்டியுள்ளது. அந்த மனமாற்றத்துக்குப் பின்னரும் கேள்விகள் உள்ளன.

தமிழ் சினிமாவில் மட்டுமே நாயகன் மக்கள் கூட்டத்தை பார்த்து இரண்டு வசனங்கள் பேசியவுடன் மனம் மாறி அவர் பின்னால் செல்வது நடைபெறுகிறது. பதினைந்து நாட்களில் பொதுத் தேர்தலைச் சந்திக்க உள்ள நிலையில் சுவருக்கு வெள்ளை அடித்துக்கொண்டிருப்பது, ஃபேஸ்புக் லைவ்வில் பேட்டி கொடுத்தே அத்தனை தொகுதிகளில் ஜெயிப்பது என பஞ்ச் வசனம் பேசவும் பாடலுக்கான மாண்டேஜ் அழகாக இருக்கவே இயக்குநர் கவனமுடன் செயல்பட்டுள்ளார். அதன் நடைமுறை சாத்தியம் குறித்து அவர் கவலைப்படவே இல்லை.

பிரச்சினைகளை அடுத்தடுத்து சுவாரஸ்யமாக அடுக்கும் இயக்குநர், அதற்கான தீர்வை முன்வைப்பதிலும் அதன் சாத்தியத்தைச் சொல்வதிலும் தவறுகிறார். இதனால், முதல் பாதியில் விறுவிறுப்பாக நகரும் காட்சிகள் இரண்டாம் பாதியில் வேகம் குறைகின்றன. பல்வேறு அரசியல் தலைவர்கள், சமீபகால அரசியல் நிகழ்வுகள் ஆகியவை திரைக்கதையில் கதாபாத்திரங்களாகவும், காட்சிகளாகவும் உருவாகியுள்ளன.

கதாநாயகி கதாபாத்திரம் வேண்டும் என்பதற்காக கீர்த்தி சுரேஷ் விஜய் உடனே வருகிறார். மற்றபடி அவரது கதாபாத்திரம் எந்த இடத்திலும் திரைக்கதையில் முக்கியப் பங்களிப்பை அளிக்கவில்லை. மகா நடிகையாகவே இருந்தாலும் இன்றைய வணிகப் படங்களில் நாயகியின் நிலை இதுதான். யோகி பாபு கதாபாத்திரமும் அத்தகையதே. குறைவான காட்சிகளில் இடம்பெற்றாலும் வரலட்சுமியின் கதாபாத்திரமும் அவரது நடிப்பும் குறிப்பிடும்படியாக உள்ளன.

இயக்குநர் காட்சிகளில் ஏற்படுத்த நினைத்த உணர்வுகளை ஏ.ஆர்.ரஹ்மான் தனது இசை மூலம் உருவாக்குகிறார். தனியாகக் கேட்பதைவிட படத்தில் இடம்பெறும்போது பாடல்கள் ரசிக்கும்படியாகவே உள்ளன. கிரிஷ் கங்காதரனின் ஒளிப்பதிவு காட்சிகளை அழகாக்குகிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் படத்தொகுப்பு கச்சிதமாக உள்ளது. தொழில்நுட்ப ரீதியாகப் படம் சிறந்து விளங்குவதால் பார்வையாளர்களை ஒன்றவைக்கிறது.

சமகால அரசியல் பிரச்சினைகளை தனது திரைக்கதையில் இணைக்கும் பணியை ஏ.ஆர்.முருகதாஸ் தனது பல படங்களில் செய்துள்ளார். பிற வகைமைகளில் படங்களை உருவாக்கினாலும் அரசியல் சார்ந்த வசனங்களை வைக்கத் தவறுவதில்லை. ஆனால், அவரது படங்களில் பிரச்சினைகளின் மையத்துக்குச் செல்லாமல் வெறுமனே சொல்வதோடு நிறுத்திக்கொள்வார். அல்லது சாத்தியமில்லாத தீர்வை தனது நாயகன் கதாபாத்திரம் மூலம் வழங்குவார். நிஜத்தில் உள்ள பிரச்சினைக்குத் தீர்வு வழங்கிவிட்டதாக சராசரி பார்வையாளன் புளகாங்கிதம் அடைவான். சர்கார் படத்திலும் அதுதான் நடந்துள்ளது. ரொமான்ஸ், ஆக்‌ஷன், காமெடி என பார்வையாளர்களை அந்த நேரம் மகிழ்விக்கப் பயன்படுத்தும் அம்சங்களைப் போலவே சமூக பிரச்சினைகளையும் தொட்டுக்கொள்வார். உண்மையில் இந்தப் பிரச்சினைகளைப் பேசாமல் இருப்பதைவிட மோசமான, நடைமுறை சாத்தியமற்ற, நாயகனைத் தூக்கிப்பிடிக்க உதவும் தீர்வுகளே ஆபத்தானவை. அப்படியான ஆபத்தை மேம்போக்கான அரசியல் பேசும் படங்கள் கொண்டுள்ளன. சர்காரும் அந்த வரிசையில் சேர்ந்துகொண்டுள்ளது.

புதன், 7 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon