மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 15 ஆக 2020

தீபாவளி: சென்னையில் காற்று மாசு குறைவு!

தீபாவளி: சென்னையில் காற்று மாசு குறைவு!

சென்னையில் இந்தாண்டு தீபாவளி பண்டிகையினால் குறைந்த அளவிலேயே மாசு ஏற்பட்டுள்ளதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

நேற்று தமிழகம் முழுவதும் சிறப்பான முறையில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. காலையில் ஒரு மணி நேரமும், மாலையில் ஒரு மணி நேரமும் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கியது உச்ச நீதிமன்றம். இருப்பினும், ஒருசில இடங்களில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டியும் பட்டாசு வெடிக்கப்பட்டது. இந்தத் தீர்ப்பை மீறியதாகக் கூறி 100க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உச்ச நீதிமன்றம் பட்டாசு வெடிக்க நேரம் நிர்ணயித்ததால், இந்தாண்டு குறைந்த அளவிலேயே மாசு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கூறுகையில், சென்னையில், காற்று மாசுபாடு 65 குறியீடு பதிவாகியிருப்பதாகவும், டெல்லியில் சராசரி காற்று மாசு 349 குறியீடு எனவும் தெரிவித்துள்ளது. டெல்லியில் காற்று மாசு மிகவும் அபாய அளவில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

சென்னையில் சாதாரண அளவில் காற்று மாசு இருக்கிறது. ஆக்ராவில் 353 என்ற அளவிலும், கர்நாடக மாநிலம், பெங்களூருவில் காற்று மாசு குறியீடு 87 ஆகவும் உள்ளது. வடமாநிலங்களை விட சென்னையில் மிகவும் குறைந்த அளவில் காற்று மாசு பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டு தீபாவளியன்று ஏற்பட்ட மாசை விட இந்த ஆண்டு வெகுவாக குறைந்துள்ளது. ஆலந்தூர், வேளச்சேரி மற்றும் மணலியில் அளவிடப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய், 6 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon