மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 23 செப் 2020

சிறப்புக் கட்டுரை: வரலாற்றைத் திருடாதீர்கள்!

சிறப்புக் கட்டுரை: வரலாற்றைத் திருடாதீர்கள்!

ராஜன் குறை

காந்தியின் தொண்டராகவும், இந்தியா சுதந்திரமடைந்து அரசு அமைக்கப்பட்டபோது நேருவின் வலது கரமாகவும் விளங்கிய காங்கிரஸ் தலைவர் சர்தார் வல்லபபாய் படேலுக்கு காங்கிரஸ் கட்சியை இன்று களத்தில் எதிர்த்து நிற்பதும், காந்தியைக் கொன்றவர்களை உருவாக்கிய இயக்கங்களின் தொடர்ச்சியுமாகிய பாரதிய ஜனதா கட்சி தலைவரான பிரதமர் மோடி பிரமாண்டமான சிலையை நிறுவி திறந்து வைத்திருப்பதை எப்படிப் புரிந்துகொள்வது?

காங்கிரஸின் வரலாற்றுச் சட்டைப் பையிலிருந்து பிரதமர் மோடி பிக்பாக்கெட் அடித்திருக்கிறார் என்றுதான் புரிந்துகொள்ள முடியும். அதுவும் சாதாரணமாக பேச்சிலோ, எழுத்திலோ திருடவில்லை. மூவாயிரம் கோடி ரூபாய் செலவு செய்து உலகிலேயே மிக உயரமான சிலை வைத்துத் திருடியுள்ளார்.

இதைச் செய்வதற்கான காரணங்களும், சாத்தியங்களும் முக்கியமானவை. இவற்றை நாம் முதலில் வரிசைப்படுத்திக்கொள்ள வேண்டும்.

1) ஆர்எஸ்எஸ், இந்து மகா சபா போன்ற அமைப்புகள் ஆங்கிலேய அந்நிய ஆட்சியை எதிர்ப்பது, அகற்றுவது போன்ற செயல்பாடுகளுக்காகத் தோன்றவில்லை. இந்தச் செயல்பாடுகளை காங்கிரஸே செய்து வந்த சூழலில்தான் இந்த குறுங்குழு அடையாளவாத அமைப்புகள் தோன்றின. இந்த அமைப்புகள் காங்கிரஸின் போராட்டங்களில் பங்கெடுக்கவில்லை.

2) இந்த அமைப்புகள் இஸ்லாமியர்களை எதிர்க்க, இஸ்லாமியர்களின் அரசியல் அதிகாரம் பெருகிவிடாமல் தடுக்க ஏற்பட்டவை; இந்திய அரசியல் இந்து அடையாளத்தை அரசியல் அடையாளமாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்று நினைத்தவை. இந்துத்துவா என்பது இந்து மத அடையாளத்தைப் பேணுவதல்ல; இந்து என்ற அரசியல் அடையாளத்தை உருவாக்குவது. மத அடையாளம் வேறு, அரசியல் அடையாளம் வேறு என்று நாம் கவனமாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

3) முஸ்லிம் லீக் மத அடையாளத்தை அரசியல் அடையாளமாக மாற்றிக்கொண்டு தனிநாடு கோரியது. இந்த "இரு தேச" கோரிக்கையினைத் தீவிரவாத காங்கிரஸ் தலைவர்கள், யதார்த்தவாதிகளான காங்கிரஸ் தலைவர்கள் எனப் பலரும் பல காரணங்களுக்காக பல சந்தர்ப்பங்களில் ஆதரித்தனர், முன்மொழிந்தனர் (லாலா லஜ்பத் ராயின் காரணமும், ராஜாஜியின் காரணமும் ஒன்றாக இருக்க வேண்டியதில்லை).

4) இந்தியர்களில் கணிசமானவர் இஸ்லாமியர்கள்; இஸ்லாமியர் கணிசமாக உள்ள பிரதேசங்களைத் தனி தேசமாக ஆக்கினாலும் இந்தியப் பிரதேசத்தில் கணிசமான இந்தியர்கள் இஸ்லாமியர்களாகவே இருப்பார்கள் என்பதால் இந்தியாவின் பொது அரசியல் அடையாளம் இந்திய அடையாளமே தவிர இந்து அடையாளம் அல்ல என்பதே காங்கிரஸின் நிலைபாடு.

5) தனிநபர்களின் மத அடையாளத்தையும், கலாச்சார வாழ்வையும் பொது அரசியல் அடையாளத்திலிருந்து வேறுபடுத்திப் பார்ப்பது என்பதே நவீன செக்யூலர் எனப்படும் மதச்சார்பற்ற அரசியல் பார்வை. இதுதான் இந்தியக் குடிமை, அரசு அடையாளம்.

6) வல்லபபாய் படேல் உள்ளிட்ட சில காங்கிரஸ் தலைவர்கள் இந்த செக்யூலர் இந்திய அடையாளத்தை ஏற்றவர்கள். ஆனால் கலாச்சார ரீதியாக இந்து அடையாளத்தின் மீது ஈடுபாடு கொண்டவர்கள். இரு தேச உருவாக்கத்தின்போதும், பாகிஸ்தானுடனான முரண்களிலும், மக்களிடையே தீயாகப் பரவிய இந்து முஸ்லிம் கலவரங்களிலும் இவர்கள் நேரு, காந்தி ஆகியோரிடமிருந்து வேறுபட்டு இந்து மக்கள் சார்ந்து சில நிலைபாடுகளை எடுத்தார்கள்.

7) வல்லபபாய் படேல் ஒரு வலதுசாரி. குஜராத் முதலீட்டிய சக்திகளுக்கு நெருக்கமானவர். நேரு சோஷலிஸ்ட். காந்தி மக்கள் சுயசார்பு பொருளாதார நோக்கினைக் கொண்டவர். இப்படி காங்கிரஸ் ஒரு கருத்தியல் கலவையாகவே இருந்தது.

8) வல்லபபாய் படேல் ஒருங்கிணைந்த இந்திய ஒன்றியம், வலுவான அரசு ஆகியவற்றை உருவாக்க விரும்பியவர்.

9) வலதுசாரிப் பார்வை, குஜராத்தி மூலதன ஆதரவு, வலுவான இந்திய ஒன்றிய அரசு, இந்துக்கள் மேல் அனுதாபம் ஆகிய கூறுகளினால் குஜராத்தியான படேலை தனது அரசியல் மூதாதையாகவும், பாஜகவின் அரசியல் தோற்றுவாயாகவும் மாற்றிக்கொள்ள மோடி விரும்புகிறார். எனவேதான் காங்கிரஸின் வரலாற்றுப் பாக்கெட்டிலிருந்து படேலைத் திருடுகிறார்.

10) மகாராஷ்டிராவில் பதினேழு, பதினெட்டாம் நூற்றாண்டுகளில் இருந்த பேஷ்வாக்கள் ஆட்சியின் வேர்மட்ட ஊடுருவலால் உருவான பார்ப்பன மனோபாவ இயக்கங்களே இந்து மகாசபையும், ஆர்எஸ்எஸ்ஸும். இவர்கள் கட்டமைக்க விரும்பும் இன்னொரு வெகுஜன பிம்பம் சத்ரபதி சிவாஜியுடையது. இவர்களின் மேலாதிக்கத்திலிருந்து, குஜராத்தி முதலீட்டிய மேலாதிக்கத்திற்கு பாஜக செல்வதன் குறீயீடாகவும் படேல் சிலையைப் பார்க்கலாம். எனவே போட்டியாக பெரியதொரு சிவாஜி சிலை உருவாகப் போகிறது. அது பத்தடி அதிக உயரமாகவும் இருக்கலாம். (சிவாஜி பார்ப்பனரல்ல என்பதாலும், சிவசேனா சிவாஜிக்கு உரிமை கொண்டாடுவதாலும் இது நடக்காமலும் போகலாம்).

இந்தச் சிலையை வைத்து, வரலாற்றைத் திருடி தனக்கான மூதாதையரை மோடி உருவாக்கிக்கொள்வதை அம்பலப்படுத்திக் கேள்வி கேட்க வேண்டும் என்பதே எனது நிலைபாடு.

ஏனெனில் குடிநபரின் அடையாளம், அரசு என்பதன் அடையாளம் இந்தியன் என்பதா, இந்து என்பதா என்ற கேள்வியே சாவர்க்கர், ஹெட்கேவார் போன்ற மோடியின் உண்மையான மூதாதையர்களையும், படேல் என்ற காங்கிரஸ்காரரையும் பிரிக்கிறது.

இன்றும்கூட சங்க பரிவாரம் முஸாஃபர் நகர் படுகொலைகளையும், தனிநபர் கொலைகளையும் நிகழ்த்தக் காரணமாக இருக்கிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

படேல் ஆர்எஸ்எஸ்காரர்களை காங்கிரஸில் சேரச் சொல்லும்போது, அவர் அவர்களை இந்திய அரசியல் அடையாளத்தினுள் உள்ளிழுக்க விரும்பினார் என்றுதான் நினைக்க முடியுமே தவிர காங்கிரஸ் இந்து அடையாளத்தை அரசியல் அடையாளமாக ஏற்க வேண்டும் என்று நினைத்தார் என்று கூற முடியாது. அப்படியிருந்தால் அவர் ஏன் ஆர்எஸ்எஸ் இயக்கத்தை காந்தி கொலை செய்யப்பட்டபோது தடை செய்ய வேண்டும்? தடையை நீக்கியபோது ஆர்எஸ்எஸ் அரசியலில் ஈடுபடக் கூடாது என்று நிபந்தனை விதிக்க வேண்டும்?

இந்தக் கேள்விக்கு மோடியாலோ, பாஜகவினாலோ பதில் சொல்ல முடியாது. அவர்கள் படேலை மட்டுமல்ல காந்தி, அம்பேத்கர் என ஏகப்பட்டவர்களைத் திருட முயற்சி செய்பவர்கள். ஏனெனில் தேச உருவாக்கத்தில் ஈடுபட்ட பிம்பங்கள் அவர்களுக்கு வரலாற்று ரீதியாகத் தேவைப்படுகின்றன. அதனால்தான் திருடுகிறார்கள்.

தீவிர நவீன - இடதுசாரி - மதச்சார்பற்ற பார்வை

இதில் கடுமையான பிரச்சினை என்னவென்றால் இந்த வரலாற்று பிக்பாக்கெட் வேலைக்குப் பெரிதும் துணைபோவது நவீன, இடதுசாரி பார்வைகொண்ட சிந்தனையாளர்களும் என்பதுதான். இதற்கு நல்ல உதாரணம் படேல் சிலைக்கு அடிக்கல் நாட்டப்பட்டபோது ஃப்ரன்ட்லைன் வெளியிட்ட ஏ.ஜி.நூரானியின் கட்டுரை. இந்தக் கட்டுரை நேருவுக்கும் படேலுக்கு இருந்த அணுகுமுறை வேறுபாடுகளைப் பெரிதுபடுத்தி படேல் ஓர் ஆர்எஸ்எஸ். ஸ்லீப்பர் செல் என்பது போல சித்திரித்துவிடுகிறது. படேலின் “இந்து மத அடையாள” கரிசனத்தை “இந்து அரசியல் அடையாள” கரிசனமாகவே வாசிக்கிறது.

இத்தகைய பார்வை புதிதல்ல. நவீன - மதச்சார்பற்ற - இடதுசாரி நோக்கு, பல சமயங்களில் இந்து என்ற பெயரில் கூண்டில் ஏற்றப்படும் பல பண்பாட்டுக் கலாச்சார அடையாளங்களையும் பிற்போக்கானவை, இந்துத்துவா என்று பார்த்துவிடுவது பழக்கம்தான். மைய நீரோட்ட இடதுசாரிகள் சற்றே பன்முக நிலைபாடுகளை எடுத்தாலும், தீவிர இடது மனோபாவம் அதையும் விமர்சிக்கும். அதேபோல சாதி மறுப்பு என்பது முற்றிலும் கலாசார மறுப்பாக வேண்டும் என்று வலியுறுத்தும் சிந்தனையாளர்களும் உண்டு. இந்த விஷயத்தில் இன்னமும் விரிவாக விவாதிக்கப்பட்டுத் தீர்க்கப்படாத குழப்பங்கள் பல உண்டு.

இத்தகைய பார்வைகளில் படேல் சோமநாதர் ஆலயத்தைப் புதுப்பித்தார் என்ற செய்தியே அவரை இந்துத்துவர் ஆக்கிவிடுகிறது. காந்தி ராமராஜ்ஜியம் குறித்துப் பேசியதால் அவரும் இந்துத்துவர் என்றும் பலர் கருதலாம். நல்லவேளையாக அவரை ஆர்எஸ்எஸ் - இந்து மகா சபா ஆர்வலர் கோட்ஸே கொன்றதால் அவ்வளவு சுலபமாக அவரைத் தாரைவார்க்க முடியாது. ஆனால் காங்கிரஸ் தலைவர்கள் பலரை நாம் கூண்டிலேற்றிவிட முடியும்.

அப்படியென்றால் படேலையோ, ராஜேந்திர பிரசாத்தையோ, ராஜாஜியையோ, ராதாகிருஷ்ணனையோ, ஏன் நேருவையோ கூட நாம் விமர்சிக்கக் கூடாது என்பதல்ல. நிறைய விமர்சிக்கலாம். ஆனால், அவர்களைக் கொண்டுபோய் சாவர்க்கர், ஹெட்கேவார் பின்னால் நிறுத்தக் கூடாது. நாமே எதிரிகளுக்கு வரலாற்று அணியை அமைத்துத் தரக் கூடாது.

இந்திய தேசிய உருவாக்கத்தில் பல பிரச்சினைகள் இருக்கின்றன. மத்தியில் அதிகாரங்களைக் குவிப்பது, இந்தி என்ற மொழியை உருவாக்கி அதை தேசிய மொழியாக்க முயல்வது, “இந்து” கலாச்சார வடிவங்களை விமர்சனமின்றிக் கொண்டாடுவது, தீண்டாமை, சாதிய ஏற்றத்தாழ்வை முற்றிலும் அகற்ற முடியாமல் பலவீனப்படுவது, பொருளாதார ஏற்றத்தாழ்வைக் குறைக்க வழியின்றி மக்கள் நல அரசாகச் சுருங்கி மற்றொரு புறம் சுரண்டலை ஊக்குவிப்பது போன்ற பல அம்சங்களில் தீவிர அரசியல் சிந்தனையாளர்கள், செயற்பாட்டாளர்கள் தொடர்ந்து விமர்சனங்களைச் செய்யத்தான் வேண்டும்.

இந்திய மைய நீரோட்ட அரசியல் சமரசங்களுடன் மட்டுமே இயங்கும். அத்தகைய சமரசத் தளத்தில் ஊடுருவி மெல்ல மெல்ல மீட்புவாதப் போக்கை முன்னெடுக்க விரும்பும் பிற்போக்கு சக்தியே ஆர்எஸ்எஸ். நம்முடைய ஆய்வும் சிந்தனையும் அதனைத் தனிமைப்படுத்திக் கேள்வி கேட்பதாகவே இயங்க வேண்டுமே தவிர, அவர்களுக்கு நாமே வரலாற்றைத் தாரைவார்க்கக் கூடாது. தனி நபர்களின் செயல்பாடுகளை மட்டுமே வைத்து மயங்காமல் வரலாறு என்பதன் அரூப சக்திகளை, சாத்தியங்களைப் புரிந்துகொள்ள வேண்டும்.

ஏன் இந்திய வரலாறு இந்துத்துவத்தை ஏற்காது?

எல்லோரும் பல்வேறு விதங்களில் வலியுறுத்துவது போல இந்தியா என்ற பொது அடையாள உருவாக்கமும், அதன் வரலாறும் பன்முக அடையாளம் கொண்டவை. இந்து என்ற மதமே ஒரு வரலாற்று மதம்தான்; அளப்பரிய பன்மை கொண்ட கலாச்சார, பண்பாட்டு மூலங்களைத் திரட்டி நவீன வரலாறு கொடுத்த பெயர்தான் இந்து மதம். இப்படியாக இந்து என்பதும், இந்தியா என்பதும் காலனிய ஆதிக்கத்தில், காலனிய அறிதல் முறையில் உருவானாலும் இந்திய அரசியல் இந்திய அடையாளத்தையும் இந்து அடையாளத்தையும் வேறுபடுத்தியதன் மூலம் பன்மையுறும் சாத்தியங்களைக் கொண்டுள்ளது. உண்மையான இந்தியக் கூட்டாட்சிகூட இனிவரும் காலங்களில் சாத்தியம் ஆகலாம்.

ஆனால், இந்திய அடையாளத்தை இந்து அடையாளமாக மாற்றும் முயற்சிகள் பன்மையுறுதலுக்குப் பதிலாக ஒற்றை அடையாளத்தையே முன் நிறுத்த முயல்பவை. வரலாற்று ரீதியாக இந்தப் போக்கு வெற்றியடைய முடியாது. ஆனால், முதலீட்டியம் வலுவான மைய அரசுகளை நாடுவதால், சந்தை உருவாக்கமும், மூலதனச் சுரண்டலும் முரண்களை அடக்கும் வலுவான கரங்களை நாடுவதால் இந்துத்துவத்தை அரியணையில் ஏற்றுகிறது. மக்கள் சார்பாக சிந்திப்பவர்கள் அதற்கு எதிராகத் தொடர்ந்து எழுதுவதும், பேசுவதும் அவசியமாகும்.

அந்த வகையில் சர்தார் வல்லபபாய் படேல் சிலையை மோடி நிறுவியது சிலை மூலம் நிகழ்ந்த வரலாற்றுத் திருட்டு என்பதை வலியுறுத்த வேண்டும். ஏன் நீங்கள் உங்கள் உண்மை வரலாற்று மூதாதையரான சாவர்க்கர் சிலையை, ஹெட்கேவார் சிலையை நிறுவக் கூடாது என்று கேட்க வேண்டும். காங்கிரஸின் வரலாற்றைத் திருடாதீர்கள் என்று கூற வேண்டும்.

(கட்டுரையாளர் ராஜன் குறை கிருஷ்ணன் பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுடெல்லி. இவரைத் தொடர்புகொள்ள: [email protected])

புதன், 7 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon