மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 14 ஆக 2020

பைசாபாத் பெயர் அயோத்தி என மாற்றம்!

பைசாபாத் பெயர் அயோத்தி என மாற்றம்!

“உத்தரப் பிரதேசத்தின் பைசாபாத் மாவட்டத்தின் பெயர் அயோத்தி என்று பெயர் மாற்றம் செய்யப்படும்” என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் தீபாவளி திருநாள் அம்மாநில அரசின் சார்பில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு அயோத்தியில் 4ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை மூன்று நாட்கள் தீப உற்சவம் நடைபெற்றது. ராம்கதா பூங்காவில் நேற்று (நவம்பர் 6) நடைபெற்ற தீபாவளி விழாவில் சிறப்பு விருந்தினராக தென்கொரிய அதிபர் மனைவி கிம் ஜங் சுக் கலந்துகொண்டார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய யோகி ஆதித்யநாத், “பெருமை மற்றும் பாரம்பரியத்தின் குறியீடாக அயோத்தி திகழ்கிறது. இங்கு மருத்துவக் கல்லூரி ஒன்று நிறுவப்படவுள்ளது. அதற்கு ராமரின் தந்தையான தசரதர் பெயரை வைக்கவுள்ளோம். மேலும், நிறுவப்படவுள்ள புதிய விமான நிலையத்துக்கு ராமர் பெயரைச் சூட்டவுள்ளோம்” என்று தெரிவித்தார். மேலும் பைசாபாத் மாவட்டத்தின் பெயர் அயோத்தி மாவட்டம் என்று பெயர் மாற்றம் செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

முன்னதாக கொரியா நாட்டு மன்னரை மணந்த அயோத்தி இளவரசிக்கு உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் அயோத்தியில் அமைக்கப்பட்டுள்ள நினைவகத்தை தென்கொரியா அதிபரின் மனைவி கிம் ஜங் சூக் மற்றும் யோகி ஆதித்யநாத் திறந்து வைத்தனர்.

உத்தரப் பிரதேசத்தின் அலகாபாத் நகரின் பெயரை பிராக்யராஜ் என்று மாற்ற முடிவு செய்யப்பட்டது. இதற்கு உத்தரப் பிரதேச மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதலும் அளிக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 6 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon