மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 5 ஜூலை 2020

பிறந்தநாள் கட்டுரை: கமலுக்கு ஒரு திருஷ்டிப் பொட்டு!

பிறந்தநாள் கட்டுரை: கமலுக்கு ஒரு திருஷ்டிப் பொட்டு!

ஆர். அபிலாஷ்

சினிமாவில் கமலின் பல புதிய முயற்சிகள், அவர் ரிஸ்க் எடுத்து நிகழ்த்திய பல புரட்சிகர தொழில்நுட்ப சாகசங்களைப் பற்றிப் பலரும் பேசியிருக்கிறார்கள். ஒரு நடிகராக அவர் செய்த சாதனைகளைவிட அவரது குரல் வேறுபாடுகள், வட்டார மொழி லாகவம், பாட்டு, நடனம், இயக்கம், பிரமாண்டத் திரைத் திட்டங்கள், கனவுகள், உருவ மாற்றங்கள் ஆகியவற்றை நாம் அதிகம் பேசுவதற்குக் காரணம் அவரது அபார பன்முகத் திறமையை நாம் ஏற்றுக்கொண்டு வியந்து பழகிவிட்டோம் என்பது. அவரது நடிப்பைப் பற்றி நாம் தனியாக பேசுவதில்லை என்பதையே அவருக்கான முக்கியப் பாராட்டாக நினைக்கிறேன்.

கமலின் குரல் நுணுக்கங்கள்

விஜய் டிவி சூப்பர் சிங்கரில் சக்தி அமரன் ஒருமுறை ‘போட்டு வைத்த காதல் திட்டம்’ என்ற பாடலை (சிங்கார வேலன்) பாடினார். எனக்குப் பிடித்த பாடல் அது. ஆனால் கமலின் குரலை நான் அப்பாடலில் அதுவரை அதிகம் கவனித்ததில்லை. அந்த மெட்டு, அதன் வேகம், உன்மத்தம், அந்த டிரம் பீட்களின் தடதட வேகம், இதயம் படபடவென அடிப்பது போன்ற அந்தக் காதல் ஆவேசம் ஆகியவைதான் அப்பாடலை நான் ரசிக்க முக்கியக் காரணங்கள். ஆனால், சக்தி பாடியபோதுதான் அப்பாடலின் ஜீவனே கமலின் குரல்தான் என்பதை உணர்ந்தேன். ஏனென்றால், அப்பாடலை உச்சத்துக்குக் கொண்டு போக இயலாமல் அவர் கீழ் / மத்திய ஸ்த்தாயிலேயே பாடிக்கொண்டு போனார். கமலோ அவ்வளவு சாதாரணமாய் அப்பாடலை உச்ச ஸ்தாயியில் பாடியிருக்கிறார். இப்போது கேட்டாலும் ஆச்சரியமாக இருக்கிறது.

கமல் பாடியதில் இன்னொரு ரத்தினம் ‘முத்தே முத்தம்மா’ (உல்லாசம்). அதுவும் கீழ் ஸ்தாயில் இருந்து “நிஜமாக வாழும் காதல்” என்று வரும் இடத்திலும், “வா வா அன்பே” எனும்போது அந்தச் சன்னமான தொனியிலே அவர் உச்சம் ஒன்றைத் தொடுவார். அதேபோல “உல்லாசம் உல்லாசம்” எனும் மீளில் அந்த மென்மைக்குள் உச்ச ஸ்தாயியை அடைவார். கமலின் குரல் நுணுக்கங்களை கவனிக்க என்றே இப்பாடல்களைத் தனியே கேட்கலாம்.

கமலின் காதல் நடிப்பு

அண்மையில் ஒரு நண்பருடன் பேசும்போது கமலின் காதல் காட்சி நடிப்பைப் பற்றிக் குறிப்பிட்டார். அப்படி ஒரு குழைவு, கெஞ்சல், அணுக்கம், அக்கறை, சட்டென ஆதிக்கம், மூர்க்கம் என அவரது காதல் நடிப்பின் நுணுக்கங்கள் ஏராளம். அத்தனையும் பத்து நொடிக் காதல் காட்சிக்குள் வந்துவிடும் (உதா: வளையோசை கலகலகலவென; பூவாசம் புறப்படும்). “அப்படியே நிஜமாகவே லவ் பண்ற மாதிரி தெரியும்” என்றார் நண்பர் புன்னகைத்தபடி.

இந்த நடிப்பினாலும், அவரது பல காதல் சர்ச்சைகளாலும், உண்மையிலேயே காதல் பண்ணுகிறார் எனும் தோற்றம் ஏற்பட்டுவிட்டது. ரஜினியிலிருந்து விஜய் சேதுபதி வரை பலரும் காதல் காட்சிகளில் சிலாகிப்பாய் நடிக்கக் கூடியவர்களே. ஆனால் அந்த நடிப்பில் ஒரு கறார்த்தனம் இருக்கும்; ஒரு வரையறைக்குள் நின்று நடிப்பார்கள். கமலிடம் நாம் பிரக்ஞையற்ற, முழுக்கத் தன்னை அர்ப்பணிக்கும் காதல் நடிப்பைப் பார்க்கிறோம். ஒரு குழந்தையைக் கொஞ்சுவதைப் போல காதலியின் முகத்தைக் கைகளில் மெத்தென ஏந்தி ரசிக்க, மூக்கால் உரச இன்னொருவரால் முடியாது என்றே நினைக்கிறேன். இந்திய சினிமாவில் கமலைப் போல வேறு யாரையும் நான் அப்படிப் பார்த்ததில்லை. “சேர்ந்நிருந்நால் திரு ஓணம்” என்கையில் என்னவொரு பிரியம் வெளிப்படுகிறது! (சுந்நரி நீயும் சுந்நரன் ஞானும்)

கமலுக்குள் இருக்கும் பெண்மை

இதற்கு முக்கியக் காரணமாய் நான் நினைப்பது கமலின் ஆளுமை. அது பெண்களுக்கான ஆளுமை. பெண்களின் தழுதழுப்பு, எதிலும் முழுக்கக் கரைந்து இன்னொன்றாகும் குணம், சட்டென உணர்ச்சிவயப்படுகிற இயல்பு, சீராய் தர்க்கரீதியாய் தன்னை ஒருங்கிணைக்காமல் முன்னுக்குப் பின் முரணாய் சிந்திக்கும் போக்கு, தன்னை அனைவரும் ரசிக்கும்படியாய், தொடர்ந்து கவனிக்கும்படியாய் வைத்துக்கொள்ளும் (attention-seeking) முனைப்பு, தான் எவ்வளவு கொண்டாடப்பட்டாலும் அது போதாது எனும் உணர்வு, கூடுதலாய் கவனிக்கப்படும் பொருட்டு புதிது புதிதாய் எதையாவது செய்யும் தவிப்பு, பல காரியங்களை ஒரே சமயத்தில் செய்து முடிக்கும் பாங்கு, சதா பேசிக்கொண்டிருக்கும் விருப்பம் – இவையெல்லாம் கமலிடம் உள்ளன.

இந்த இயல்புகள் கமலுக்கு ஒரு கலைஞனாய் மேலேக வெகுவாய் உதவி உள்ளன. ஆனால் இவையே அவர் ஒரு சூப்பர் ஸ்டார் ஆக முடியாததற்குக் காரணம். அவர் உலக நாயகன். ஆனால் நம்பர் 1 அல்ல. தமிழர்கள் இந்த கலைத்தன்மைகளை ரசித்தாலும் எந்த நெகிழ்வும் பெரிதாய் அலைக்கழிக்காத ஆண்மை எனக் கருதப்படும் முரட்டுத்தனத்தை, உறுதியைத்தான் நாயக பாத்திரத்தில் விரும்புகிறார்கள். கமலின் இந்த நீர்மையும் நெகிழ்வும் இல்லாத ரஜினி இந்த இடத்தில் ஜெயிக்கிறார். அவர் சிகரெட் பிடித்தபடி வில்லனைப் பார்க்கையில் “நீ காலிடா” என ரசிகனுக்குத் தோன்றும். ஆனால், கமல் தன் கண்களை உருட்டி வில்லனைப் பார்க்கையில் நமக்கு அவ்வாறு தோன்றாது.

கமலின் உடல் மொழியில்கூட மிகச் சன்னமாய் ஒரு பெண்மை உண்டு. இதை மறைக்கும் பொருட்டு முறுக்கு மீசை, விரிமார்பு, முறைக்கும் விழிகள் என ஒரு மிகை - ஆண்மை முரட்டுத்தனத்தை அவர் காட்டுவதாக எனக்குத் தோன்றும். ஆனால் இது ஒரு முகமூடியே. அவர் இளகும்போது, லகுவாகி, சிரிக்கும்போது ஆதி இயல்புக்கு மீண்டுவிடுவார். பிக்பாஸில் அவர் பேசும்போது ஒரே நிமிடத்தில் அவரது உடல் மொழி எவ்வளவு முறை மாறுகிறதென கவனியுங்கள். சிலநேரம் அவர் திட்டுகிறாரா, கொஞ்சுகிறாரா என நமக்குக் குழப்பம் ஏற்படவும் இது வழிவகுக்கிறது.

கமலின் இந்த முதன்மை உடல் மொழி என்பது ஒருவித எளிதில் ஊறுபடத்தக்க, எளிய பணிவான பாவனையே. “பார்த்தால் ஐயோ பாவமே” என தோன்ற வைப்பது. இதை கமல் தன் ஆக்ரோஷமான மிகை - ஆண்மை பாவனையுடன் லாகவமாய் இணைத்து வெளிப்படுத்த கற்றுக்கொண்டார். இதுவே அவரை தமிழ் மனத்துக்கு வெகு அணுக்கமாக்கியது என நினைக்கிறேன். இரண்டாயிரத்திற்குப் பின் வெற்றி பெற்ற அஜித், தனுஷ் போன்றோரிடம் இந்த இருகூறு உடல்மொழியை ஓரளவு காணலாம்.

திருஷ்டிப் பொட்டு

கமல் ஒருவேளை சினிமாவுக்கு வரவில்லை எனில் என்னவாகி இருப்பார் என நான் யோசிப்பதுண்டு. அவர் எந்தத் துறையில் ஈடுபட்டிருந்தாலும் அங்கு திறம்பட இயங்கி கவனிப்புக்கு உள்ளாகியிருப்பார் என்பதில் ஐயமில்லை. அவரது இயல்பான ஆளுமை அப்படியான ஒன்று. அவரால் இருட்டில், யார் கவனமும் இன்றி வாழ முடியாது. அவருக்குப் புதுப்புது சவால்கள் தேவை – இல்லையென்றால் வாழ்க்கை அலுத்துவிடும். எளிய அலுவலக குமாஸ்தாவாக இருந்திருந்தாலும் அங்கே ஏதாவது புதுப்புது விஷயங்களை முயன்று பார்த்துக்கொண்டு, இலக்கியப் பத்திரிகைகளுக்கு மாலையில் கடிதம் எழுதிக்கொண்டு, தனக்கெனப் பெரிய நண்பர் குழாம் அமைத்து, இரவு தூங்கும் வரை யாரிடமாவது சளசளவெனப் பேசிக்கொண்டு வாழ்ந்திருப்பார்.

தோழிகள்? சினிமா நட்சத்திரமாக இல்லாவிட்டாலும், நிச்சயம் பெண்களுக்குப் பிடித்தமானவராய் இருந்திருப்பார்.

எங்கள் உரையாடல் இப்படி முடிந்தது. இவ்வளவு திறன்களை அள்ளி வழங்கிய கடவுள் கமலுக்கு நேரடியாய், தெளிவாய் பேசும் திறனை மட்டும் அளிக்கவில்லையே. “உங்களுக்கு காபி பிடிக்குமா?” என்று கேட்டால் ஆமாம் / இல்லை என அவரால் பதிலளிக்க முடியாது. “எனக்கு காபி பிடிக்காத ஒரு பானம் அல்ல, ஆனால்.. காபி பிடிக்கும் என்று சொல்லும்போதே…” என ஒரு பத்தி அளவுக்குப் பேசுவார்.

இதுவும் அவரது ஆளுமையால் விளைவதுதான். தன்னைப் பிறர் தவறாய் நினைக்கக் கூடாது எனும் மிகுதியான பதற்றம் அவரை எதைச் சொன்னாலும் அதற்குக் கூடுதல் விளக்கம் கொடுக்கச் செய்கிறது. இப்படி விளக்கமளிப்பதும் அவருக்குப் பதற்றம் அளிக்கும் என்பதால், விளக்கத்தைத் தன் முதல் வாக்கியத்துக்கு முரணாய் அமைத்துவிடுவார். இப்படி முரணாய்ப் பேசுகிறோமே எனத் தோன்றி அந்த முரணை நியாயப்படுத்தத் தொடங்கி, முதலில் தான் சொன்னதை இந்தச் சொற்கள் மூழ்கடிக்கின்றதே என்பதை மறந்துவிடுவார். கடைசியில் மொத்தத்தையும் அவர் தொகுத்து சில வாக்கியங்கள் பேசுவார் - இப்போது கமலுக்கே தான் என்ன பேசுகிறோம் என்பது புரியாது. படைப்பில் உள்ள துணிச்சலும் சாகச விழைவும் அவருக்குப் பொதுவெளி உரையாடலில் இல்லை. பேசும்போதே, உரக்கச் சிந்திக்கும் அவர், அதனால் தன் ஆத்மார்த்த ரசிகர்களையே முடியைப் பிய்த்துக்கொண்டு ஓடச்செய்வார்.

ஆனால், அழகான ஒரு குழந்தைக்குக் கன்னத்தில் திருஷ்டிப் பரிகாரமாய் ஒரு கறுப்புப் பொட்டு வைக்க மாட்டோமா நாம்? கடவுளும் அதையே செய்திருக்கிறார் என்றேன் நண்பரிடம்.

(கட்டுரையாளர் அபிலாஷ் சந்திரன் எழுத்தாளர். யுவபுரஸ்கார் விருதைப் பெற்றவர். இலக்கியம், உளவியல், கிரிக்கெட் முதலான பல விஷயங்களைப் பற்றித் தொடர்ந்து கட்டுரைகள் எழுதிவருகிறார். இவரைத் தொடர்புகொள்ள:[email protected])

புதன், 7 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon