மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 19 ஜன 2021

சபரிமலை: பாரம்பரியத்தை மீறிய ஆர்எஸ்எஸ் நிர்வாகி!

சபரிமலை: பாரம்பரியத்தை மீறிய ஆர்எஸ்எஸ் நிர்வாகி!

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதையடுத்து, இரண்டாவது முறையாக நேற்று முன்தினம் (நவம்பர் 5) சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டது. பெண்களுக்கு எதிரான போராட்டம் தொடர்ந்தபடி உள்ளது.

நேற்று (நவம்பர் 6) இளம் பெண் ஒருவர் சபரிமலை கோயிலுக்குள் நுழைந்ததாகத் தகவல் வெளியானது. இதையடுத்து ஆர்எஸ்எஸ் போன்ற வலதுசாரி அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. அப்போது ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிர்வாகியான வல்சன் தில்லங்கேரி என்பவர் புனிதமானதாக கருதப்படும் 18ஆம் படிகளில் இருமுடி கட்டாமல் ஏறியுள்ளார்.

இருமுடி கட்டிதான் 18ஆம் படிகளில் ஏற வேண்டும் என்ற ஐதீகம் பின்பற்றப்பட்டுவரும் நிலையில் அவர் அதை மீறியுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதேபோல், 18ஆம் படிகளில் ஏறுபவர்கள் இறங்கி வரக் கூடாது என்ற ஐதீகத்தையும் அவர் மீறியுள்ளார் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என திருவாங்கூர் தேவஸ்தான போர்டு அறிவித்துள்ளது. பழக்க வழக்கங்களை காப்பதற்காகப் போராட்டம் நடத்துவதாகக் கூறுபவர்களே பழக்க வழக்கங்களை மீறுகின்றனர் என்று தேவஸ்தான போர்டு உறுப்பினர் கே.பி.சங்கரதாஸ் மாத்ருபூமி ஊடகத்துக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.

இதற்கிடையே, தான் எந்தப் பழக்கவழக்கங்களையும் மீறவில்லை என்று வல்சன் விளக்கமளித்துள்ளார்.

இதற்கிடையே, கோழிக்கோட்டில் நேற்று (நவம்பர் 6) செய்தியாளர்களைச் சந்தித்த கேரள முதல்வர் பினராயி விஜயன், “சபரிமலையில் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் யாரென கேரள மக்கள் நன்கு அறிவர். அமைதியாகச் சென்று பக்தர்கள் வழிபடவே சபரிமலையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அமைதியை நிலைகுலையச் செய்ய முயன்றால் போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள். பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தியது போலீசார் அல்ல, போராட்டக்காரர்கள்” என்று தெரிவித்தார்.

புதன், 7 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon