மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 5 ஜூலை 2020

முதல் நாளே வேட்டை தொடக்கம்!

முதல் நாளே வேட்டை தொடக்கம்!

சர்கார் இன்று உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. தமிழ் ராக்கர்ஸ் அறிவித்தபடி படம் வெளியான இரண்டு மணி நேரத்தில் இணையத்தில் படத்தை வெளியிட்டிருக்கிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை தமிழ்நாட்டு அரசாங்கம் 8 மணிக்கு முன்னதாக சிறப்புக் காட்சிகள் தியேட்டர்களில் திரையிடக்கூடாது என கடுமையாக அறிவுறுத்தியிருந்தது அதனை மீறி தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் ரோகிணி பன்னீர் செல்வத்திற்குச் சொந்தமான கோயம்பேடு ரோகிணி காம்ப்ளக்ஸ் தியேட்டரில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு சர்கார் பட சிறப்புக் காட்சியை தொடங்கிய பின், அதனை தமிழகம் முழுவதும் பெரும்பான்மையான திரையரங்கங்கள் அமுல்படுத்தினர்.

மல்டி பிளக்ஸ், மற்றும் அரசு ஆணைகளைக் கறாராக கடைப்பிடிக்கும் பிற தியேட்டர்களில் காலை 8 மணி முதல் சர்கார் படம் திரையிடத் தொடங்கினர். படம் ரிலீஸான அனைத்துத் திரையரங்கங்களிலும் விஜய் ரசிகர்கள் படவெளியீட்டை குக்கிராமம் முதல் நகரம் வரை பட்டாசு வெடித்து கொண்டாட்டங்களுடன் படம் பார்த்தனர்.

தீபாவளியையொட்டி சினிமா பார்க்க விரும்பியவர்களின் முதல் சாய்ஸ் சர்கார் படமாகவே இருந்தது. ஆனால் படத்தின் டிக்கட் விலை 200 முதல் 1500 வரை தியேட்டர் நிர்வாகங்களின் ஆசீர்வாதத்துடன் ரசிகர் மன்றத்தினராலும், தனி நபர்களாலும் விற்பனை செய்யப்பட்டன. இதனால் பெரும்பான்மையான தியேட்டர்களுக்குக் குடும்பங்கள் படம் பார்க்க வரவில்லை.

திரைப்படம் எதிர்பார்த்தபடி பரபரப்பான திருப்பங்களுடன் கூடிய அரசியல் படமாக இல்லை என்ற கருத்து ரசிகர்களிடமும், திரையரங்க வட்டாரத்திலும் முதல் காட்சி முடிந்தவுடன் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. இருப்பினும் வசூல் எதிர்பார்த்தபடி அபரிமிதமாகவே கல்லாவை நிரப்பி வருகிறது. திரையரங்குகளில் சர்கார் படத்தை திரையிட 2 நாட்களுக்கு மட்டுமே தயாரிப்பு தரப்பு அறிவுறுத்தல் அடிப்படையில் லைசென்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

ஒப்பந்தப்படி விநியோகஸ்தர்களிடமிருந்து வரவேண்டிய முழுத் தொகையும் சன் பிக்சர்ஸுக்கு செட்டில் செய்யப்பட்ட பின் லைசென்ஸ் நீட்டிக்கப்படும் என்பது விநியோகஸ்தர் வட்டார தகவல்.

தமிழகம் முழுவதும் இன்று ஒரு நாள் மொத்த வசூல் 16 முதல் 18 கோடி வரை இருக்கும் என்பதே முதல் கட்டத் தகவலாக உள்ளது. முழுமையான வசூல் விபரங்களுடன் நாளை 1 மணி பதிப்பில் சந்திக்கலாம்.

-இராமானுஜம்

செவ்வாய், 6 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon