மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 10 ஆக 2020

ஏர் இந்தியா விமானத்தை கடத்த சதி!

ஏர் இந்தியா விமானத்தை கடத்த சதி!

சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள விமான நிலையத்தில் நேற்று (நவம்பர் 5) இரவு 11 மணியளவில் வழக்கத்தை விட போலீஸ் பாதுகாப்பு அதிகமாகப் போடப்பட்டிருந்தது. காமராஜர் உள்நாட்டு முனையம், அண்ணா பன்னாட்டு முனையம் ஆகிய இடங்களில் அதிகளவு போலீஸார் குவிக்கப்பட்டிருந்தது பயணிகள் இடையே திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையே டெல்லி, மும்பை கொல்கத்தா, பெங்களூரு விமான நிலையங்களிலும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக அங்குள்ள நண்பர்களிடம் இருந்து நமக்கு தகவல் வந்தது. பொதுவாக குடியரசு தினம், சுதந்திர தினத்தின்போது மட்டுமே இந்தளவு பாதுகாப்பு பலப்படுத்தப்படும். ஆனால், தீபாவளியின் போது ஏன் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது என்ற சந்தேகம் எழுந்தது.

போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளது தொடர்பாக பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த போலீஸ் ஒருவரிடம் கேட்டபோது, தனக்கு எந்த விவரமும் தெரியாது என்றும் மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்தது என்றும் கூறினார்.

இதையடுத்து உயர் அதிகாரி ஒருவரை மின்னம்பலம் சார்பாக தொடர்புகொண்டு கேட்டபோது, “தீபாவளி நேரத்தில் இந்த செய்தியை உடனடியாக பிரசுரித்து மக்களைப் பதற்றமடைய செய்ய வேண்டாம்” என்ற வேண்டுகோளுடன் சொல்ல தொடங்கினார்.

வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் அச்சுறுத்தல்களை உளவு பார்க்கும் ரா (raw) அமைப்பிடம் இருந்து முக்கிய தகவல் ஒன்று பரிமாறப்பட்டுள்ளது. இந்தியாவின் ஏர் இந்தியா விமானத்தைப் பயணிகளுடன் ஆப்கானிஸ்தானின் காபூல் நகருக்கு கடத்தி செல்ல ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர் என்பதே அந்த தகவல். இதையடுத்து தான் விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்தார். பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் இதுவரை எந்த அசம்பாவித சம்பவமும் நடைபெறவில்லை என்பது ஆறுதலான விஷயம்.

கந்தகார் விமான கடத்தல் சம்பவம்

இந்தியாவிற்கு விமான கடத்தல் சம்பவம் என்பது புதிதல்ல. கடந்த 1999ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி மாலை 4.25 மணிக்கு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் ஐ.சி. 184 நேபாளத் தலைநகர் காத்மாண்டுவிலிருந்து இந்திய தலைநகர் டெல்லிக்கு வந்துகொண்டிருந்தது. 178 பயணிகள், இரு விமான ஓட்டிகள், ஏர் ஹோஸ்டஸ்கள், பிற உதவியாளர்கள் என 15 ஏர்லைன்ஸ் ஊழியர்கள். மொத்தம் 193 பேர் அதில் பயணம் செய்தனர்.

இந்திய நேரப்படி மாலை5.30க்கு இந்த விமானம் கடத்தப்பட்டது. அம்ரிஸ்தர், லாகூர், துபாய் ஆகிய இடங்களில் தரையிறக்கப்பட்ட விமானம், கடைசியாக தரையிறங்கிய இடம் ஆப்கானிஸ்தானின் கந்தகார் ஆகும். இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட ஹர்கத்-உல்-முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பு சார்பில், ‘இந்தியா 200 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பணம் தரவேண்டும். இந்தியச் சிறைகளில் இருக்கும் 36 பாகிஸ்தானியத் தீவிரவாதிகளை எந்த நிபந்தனைகளும் இல்லாமல் விடுதலை செய்யவேண்டும். இந்திய ராணுவத்தால் ஜம்முவில் கொல்லப்பட்ட ஸஜத் ஆ கானி என்னும் பாகிஸ்தான் தீவிரவாதியின் உடலைச் சகல மரியாதைகளுடன் ஒப்படைக்க வேண்டும்’ ஆகிய கோரிக்கைகள் வைக்கப்பட்டன.

அப்போது, மத்தியில் இருந்த வாஜ்பாய் அரசு தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தையை நடத்தியது. இறுதியாக முஸ்தக் அஹ்மத் ஜர்கர், அகமத் உமர் சயீத் ஷேக், மற்றும் முலானா மசூர் ஆசாத் ஆகிய கைதிகளை விடுதலை செய்ய இந்தியா ஒப்புக்கொண்டதையடுத்து 7 நாட்கள் தொடர்ந்த இந்த கடத்தல் சம்பவம் முடிவுக்கு வந்தது.

பின்னர், இந்தியாவின் மும்பையில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல், பதன்கோட் விமானப்படை முகாம் தாக்குதல் ஆகியவற்றில் மசூர் ஆசாத்தின் பங்கு உள்ளதாக இந்திய அரசு குற்றம் சாட்டி வருகிறது. 2001ஆம் ஆண்டு டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் நடத்தப்பட்ட தாக்குதலிலும் இவரது தொடர்பு உள்ளது.

முருகேஷ்

செவ்வாய், 6 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon