மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 22 செப் 2020

சபரிமலை: 50 வயதை தாண்டிய பெண்களுக்கும் தடை!

சபரிமலை: 50 வயதை தாண்டிய பெண்களுக்கும் தடை!

சபரிமலை கோயிலுக்குள் செல்ல 50 வயதுக்கு மேற்பட்ட 3 பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்கள் செல்வதை எதிர்த்து பக்தர்களும் இந்து அமைப்பினரும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதையடுத்து, இரண்டாவது முறையாக நேற்று (நவம்பர் 5) சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டது.

கடந்த மாதம் கோயில் திறக்கப்பட்டபோது, பக்தர்களின் எதிர்ப்பினால் பெண்கள் யாரும் சபரிமலை கோயிலுக்குள் செல்ல முடியவில்லை. இந்நிலையில், நேற்று கோயில் நடை திறக்கப்பட்டதையடுத்து சபரிமலைக்கு சென்ற 3 பெண்கள் சபரிமலை நடைபந்தலில் பக்தர்களால் தடுத்து நிறுத்தப்பட்டனர். 50 வயதுக்கு கீழ் உள்ள பெண் ஒருவர் தரிசனத்துக்கு வந்ததாகக் கூறி ஐயப்ப பக்தர்கள் சரண கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து ஐயப்ப பக்தர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

50 வயதுக்கு மேற்பட்டவர்கள்தான் என போலீசார் கூறிய பிறகும் பக்தர்கள் சம்மதிக்காததால் அவர்களுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது. அடையாள அட்டை காண்பித்த பிறகே 3 பெண்களும் அனுமதிக்கப்பட்டனர். அதில், லலிதா என்ற 52 வயதான பெண் தன்னுடைய மகனுடன் சபரிமலைக்கு வந்துள்ளார். லலிதா மற்றும் அவரது மகனுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. அவர்கள் சன்னிதானம் காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். திருச்சூரில் இருந்து வந்த கிரிஜா, சுஜாதா ஆகிய 2 பெண்களை போராட்டக்காரர்கள் சூழ்ந்துகொண்டு அவர்களைக் கோயிலுக்குள் அனுமதிக்க மறுத்தனர்.

ஏற்கனவே அஞ்சு(30) என்ற பெண், தன்னுடைய கணவர்,குழந்தைகளுடன் சபரிமலை ஐயப்பனை வழிபட சென்றார். போராட்டக்காரர்களின் எதிர்ப்பால் அவர்கள் திரும்பிச் சென்றனர். மேலும் கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கக் கோரி பெண் பத்திரிகையாளர் ஒருவர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஒரு பக்கம் போலீஸ் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு, மறு பக்கம் 50 வயதுக்கு கீழுள்ள பெண் மற்றும் பெண் பத்திரிகையாளரின் காத்திருப்பு போராட்டம் என அங்கு பதட்டம் நிலவி வருகிறது. இந்த மோசமான சூழ்நிலையில், பத்திரிகையாளர் மற்றும் கேமராமேன் ஒருவரும் காயம் அடைந்துள்ளனர்.

சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம்தான், தமிழகத்தில் இரண்டு மணி நேரம் மட்டும்தான் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை பின்பற்றாத மக்களை கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது தமிழக அரசு. ஆனால், கேரளாவில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை பொருட்படுத்தாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் ஐயப்ப பக்தர்கள். அப்படியென்றால், உச்ச நீதிமன்ற தீர்ப்பை கேரளா மதிக்கவில்லையா அல்லது தமிழகம் பயப்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

செவ்வாய், 6 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon