தொழில்நுட்பத்தைத் தவறாக பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், இணையம் மூலம் உருவாகும் அபாயங்கள் குறித்தும் சமீபகாலமாகத் தமிழில் சில திரைப்படங்கள் வெளியாகிவருகின்றன. ரசிகர்களிடம் வரவேற்பு பெறும் அத்தகைய படங்கள் வெற்றிப்படங்களாகவும் அமைந்துள்ளன. இந்தச் சூழ்நிலையில் உலகம் முழுவதும் ஆட்டிப்படைக்கும் ப்ளூவேல் கேம் குறித்து புதிய படம் தயாராகிவருகிறது.
நடிகை பூர்ணா கதாநாயகியாக நடித்ததைவிட முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் போது சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து வருகிறார். தற்போது அறிமுக இயக்குநர் ரங்கநாதன் இயக்கும் புதிய படத்தில் பூர்ணா அசிஸ்டண்ட் கமிஷ்னராக நடித்துள்ளார்.
ப்ளூ வேல் ஆன்லைன் கேம் சமீபத்தில் இந்தியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த கேம் விளையாடுபவர்களுக்கு தினம் ஒரு கடினமான டாஸ்க் வழங்கப்படும். 50 நாட்கள் தொடர்ச்சியாக இந்த டாஸ்க்களை மேற்கொள்ளும் ஒரு நபர் அதன் இறுதி நாளில் அந்த கேமில் குறிப்பிட்டுள்ளது போல் ஏதேனும் ஒரு முறையில் தற்கொலை செய்து கொள்ள வேண்டும். உலகம் முழுவதும் இந்த கேமினால் நூற்றுக்கணக்கானோர் பலியாகியுள்ளனர்.
இந்த படத்தை இயக்கும் ரங்கநாதன் எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பல இயக்குநர்களிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். த்ரில்லர் பாணியில் இந்த படத்தை உருவாக்கிவருகிறார். பெற்றோர்கள் குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி திரைக்கதை உருவாகியுள்ளது.